வெள்ளைத் தாமரை வீற்றிருப் பவளே வீணை கையில் வைத்திருப் பவளே கள்ளவர் எவரும் கவர்ந்திட முடியா அறிவுச் செல்வம் அளிப்பவள் நீயே
மனஇருள் நீக்கும் மகத்துவம் நீயே மண்ணும் விண்ணும் போற்றும் தாயே அறிவொளி பரப்பும் அன்னையும் நீயே அகிலம் தழைக்க செய்திடு வாயே
கரங்கள் நான்கு உடையவள் நீயே ஏடும் ஜெப மாலையும் கொண்டு அருளை வழங்கும் அம்பிகை நீயே அபயம் தருவாய் சரஸ்வதி தாயே
அமைதியின் வடிவாய் இருப்பவள் நீயே அடக்கம் பொறுமை கொடுப்பவள் நீயே இமையென எம்மை காப்பவள் நீயே எல்லாம் அறிந்த தேவியும் நீயே
நான்முகன் பிரம்மன் நாயகி நீயே நலமுடன் வளமும் தருபவள் நீயே வேண்டிய வரங்களை வழங்கிடும் தாயே வெற்றிகள் வாழ்வில் நீதரு வாயே
நாவினில் நர்த்தனம் புரிபவள் நீயே நல்லிசை யாக ஒளிப்பவள் நீயே தேவியர் மூவரில் இருப்பவள் நீயே தெள்ளிய ஞானம் தருபவள் நீயே
பாமரன் தன்னை பண்டித னாக்கும் வித்யா வதியே கலகலா வல்லி நாமம் சொல்லி நாளும் பணிய நல்லருள் நீயே புரிந்திடு வாயே
கூத்த னூரில் கொலுவிருப் பவளே கோரிக்கை விரைந்து ஏற்பவன் நீயே மாற்றம் வாழ்வில் தருபவள் நீயே மலரடி பணிவோம் அருளிடு தாயே
அம்பாள் புரிஎனும் அழகிய நாமம் உடையது உந்தன் திருத்தல மாகும் ஹரிநா கேஸ்வரம் என்றொரு பெயரும் உந்தன் ஆலய மற்றொரு பெயரே
உன்னருள் பெற்ற ஒத்தக் கூத்தனை அரசவை புலவனாய் அமர்த்தி மகிழ்ந்த இரண்டாம் ராஜ ராஜன் மன்னன் ஆலயம் தன்னை அளித்தான் பரிசாய்
கூத்தன் தனக்கு பரிசாய் கிடைத்த காரணத் தாலே இந்த ஊருக்கு ஏற்றம் கொடுக்கும் இப்பெயர் நிலைத்து இதயம் குளிரச் செய்வது நிஜமே
கம்பருக் காக நேரில் வந்து கவலை நீக்கிய தாயும் நீயே பிறகும் போதே பேசா திருந்த
பக்தருக் கருளிய தேவியும் நீயே
உந்தன் திருவாய் தனிலே ஊறிய தாம்பூல எச்சிலை உன்னடி யாராம் புருஷோத் தமனின் வாயில் இட்டு பண்டித னாக மாற்றிய தாயே
தேர்வுகள் எழுதும் மாணவ மாணவியர் தத்தம் எழுதுகோலை உன்னடி வைத்து வேண்டுதல் செய்து வணங்கும் போது வெற்றிகள் காண செய்பவள் நீயே
பௌர்ணமி நாளில் அன்னை உனக்கு தேனாபி ஷேகம் செய்திடு வோமே உன்னை நினைத்து மோதிர விரலால் நாவினில் வைக்க அறிவே பெருகும்
ஞானத்தின் உருவாய் நீயிங்கு உறைவதை குறிக்கும் வகையில் ஐந்து எண்ணிக்கையில் விமானக் கலசம் இருப்பது சிறப்பு உன்னருள் இருந்தால் வருமே மதிப்பு
தமிழகம் தனிலே தனியொரு கோயில்
உனக்கென உண்டு உலகோர் தொழவே அமிழ்தாய் இனிக்கும் அருந்தமி ழாலே அம்மா உன்னை வணங்கிடு வோமே
நலம்தரும் நவராத் திரியில் உன்னை நாடே மகிழ்ந்து வணங்கிடும் தாயே குலம்செழித் திடவே குறைவில் லாமல் கொடுப்பாய் நீயே கூரிய அறிவை
வாகீஸ் வரியே வருக வருக
வாழ்வில் நீயே மங்கலம் தருக
சித்ரேஸ் வரியே சீக்கிரம் வருக செய்யும் தொழிலில் உயர்வை தருக
துலஜா தேவி துரிதமாய் வருக துணையாய் இருந்து நல்லருள் புரிக கீர்த்தீஸ் வரியே கேட்டதை தருக கேள்வி ஞானம் பெருகிட செய்க
கடசரஸ் வதியே கடாட்சம் தருக நீல சரஸ்வதி நிதானம் தருக கிளிசரஸ் வதியே கேட்டதை தருக அந்தரிட்ச சரஸ்வதி அருளே புரிக
அறிவுக் கண்ணை திறப்பவள் வருக அமைதி தவழும் முகத்தவள் வருக எதிரியை வீழ்த்தும் ஆற்றல் தருக இணைக்கையில் லாத தேவி வருக
படிக்கும் புத்தகம் உன்திரு வடியில் வைத்தே நாங்கள் வணங்கிடு வோமே மஞ்சள் குங்குமம் திலகம் இட்டு நெஞ்சம் உருகிட வேண்டிடு வோமே
கோலம் போட்டு திருவிளக் கேற்றி கோகில வாணி உன்னை பணிவோம் காலம் அறிந்து கருத்தினை உணர்ந்து கருணை காட்டிட நாங்கள் மகிழ்வோம்
ஏழாம் நாளில் எழிலவள் வருக எட்டாம் நாளில் இறைவி வருக ஒன்பதாம் நாளில் நீயே வருக உலகோர் மகிழ உன்னருள் தருக
இல்லம் தோறும் கொலுவைப் போமே இன்னிசை பாடி மகிழ்ந்திடு வோமே சின்னக் குழந்தைகள் பலரும் வரவே அன்னம் சுண்டல் அன்பாய் தருவோம்
ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்து தேவியர் மூவரை வணங்கிடு வோமே திவ்ய தரிசனம் அனைவரும் காண தீபம் ஏற்றி வழிபடு வோமே
வித விதமாக நிவேதனம் செய்து மூன்று சக்தியை போற்றிடு வோமே துர்கா லக்ஷ்மி சரஸ்வதி என்று தொழுதிடு வோமே துயர்விடுப் போமே
கல்வியி னாலே செல்வம் பெறலாம் செல்வத் தினாலே வீரம் பெறலாம் வீரத்தி னாலே வெற்றியும் பெறலாம்
வாழும் மனிதன் படிப்படி யாக வாழ்வில் உயர உன்பதம் பணிவான் ஓரறி வான செடிகொடி தாவரம் ஒண்ணாம் படியில் இடம்பெற் றிடுமே
ஈரறி வான நத்தை சங்கு இரண்டாம் படியை அலங்கரித் திடுமே மூவறி வான கரையான் எறும்பு மூன்றாம் படியில் முகம்காட் டிடுமே
நாலறி வான நண்டும் வண்டும் நான்காம் படியில் இருந்திடக் காண்போம் ஐந்தறி வான கால்நடை யாவும் ஐந்தாம் படியில் அமர்த்திவைப் போமே
ஆறறி வான மனிதர்கள் உருவை ஆறாம் படியில் வைத்திடு வோமே ஏழாம் படியில் முனிகளும் ரிஷிகளும்
இடம்பெற் றிடுவார் என்பதை அறிவோம்
எட்டாம் படியில் தேவர்கள் உருவில்
பொம்மைகள் வைத்து வணங்கிடு வோமே ஒன்பதாம் படியில் தெய்வ சொரூபம் சிறப்புடன் வைத்து வழிபடு வோமே
நித்தம் உந்தன் நிழலே காக்க நினைத்திருப் போரை நின்னருள் காக்க புத்தக வடிவே புகழினை காக்க பொன்னும் பொருளும் வழங்கியே காக்க
அன்னத்தின் மீது அமர்ந்தே காக்க அம்ச வல்லியே எங்களை காக்க எண்ணம் முழுதும் நீயே காக்க ஏழ்மை விரட்டி என்றும் காக்க
ஞான சரஸ்வதி தாயே காக்க நல்லருள் நீயும் புரிந்தே காக்க கான சரஸ்வதி கல்யாணி காக்க கைதொழு வோரை கலைவாணி காக்க
வெண்பட் டாடை தரித்தவள் காக்க வேதம் நான்கும் அறிந்தவள் காக்க எண்திசை வணங்கும் தேவி காக்க இம்மையும் மறுமையும் இனிதே காக்க
கல்லா தொருவன் இல்லா திருக்க கலைமகள் நீயே அருளிடு வாயே எல்லா புகழும் உனக்கே என்று எங்கள் இதயம் சொல்லிடும் தாயே
கம்பனைத் தந்து காப்பியம் தந்து கன்னித் தமிழை உயரவைத் தாயே எம்பெரு மானாம் இராமன் புகழை வையகம் அறிய வரமளித் தாயே
வள்ளுவன் படைத்த திருக்குறள் மூலம் வாழ்வின் நெறிமுறை அறிய வைத்தாயே தெள்ளு தமிழிலே தெளிந்த நடையிலே உள்ளம் உணர பாடவைத் தாரே
இளங்கோ வடிகளின் சிலப்பதி காரம் பன்னூ றாண்டு நிலைத்தே வாழும் பாரதி என்றொரு மாகவி படைத்த பிரம்ம தேவியே உன்தாள் சரணம்
கலைமகள் பலவும் பயின்றிட நீயும் கடைக்கண் ணாலே அருளிடு வாயே இயலிசை நாடகம் என்றும் வளர இனிதாய் நீயே வரம்தரு வாயே
கவிதை ஓவியம் நடனம் சமையல் மேடை பேச்சும் இன்னிசை பாட்டும் தோட்டம் அமைத்தல் வண்ணப் பூச்சு நெசவு நீச்சல் இன்னும் பலவும்
வித்தைகள் அறிந்து வெற்றியை அடைந்து உத்தமனாக உலகில் வாழ்ந்து இனியதை பேசி இதயம் கவர்ந்து என்றும் வாழ்ந்திட நீயருள் வாயே
கற்றவர் சொல்லும் நல்லுரை கேட்டு களங்கம் இல்லா வாழ்க்கை ஏற்று மற்றவர் நம்மை மதித்திடும் வண்ணம் மானுடம் வாழ வரமருள் தாயே
இருளும் ஒளியும் இருக்கும் உலகில் எதன்வழி செல்வது என்பதை அறிந்து கருணை இரக்கம் அணிகலன் புனைந்து தினம்தினம் வாழ திருவருள் வேண்டும்
போர்க்களம் தனிலே போரிடும் வீரனின் உயிரைக் காக்கும் கவசம் போலே தேகம் நலமுடன் நாளும் திகழ தேவி நீயும் அருள்வாய் எமக்கு
தலைமுதல் கால்வரை எல்லா உறுப்பும் தடையற செயல்பட நீயே பொறுப்பு பிணிகள் எம்மை தொடரா திருக்க பேரருள் நீயே செய்வாய் தாயே
அலைமகள் கலைமகள் மலைமகள் என்று ஆயிரம் வடிவில் திகழும் சக்தி பிழைகளை பொறுத்து நேர்வழி காட்டி பிறந்ததின் பலனை தருவாய் நீயே
உன்புகழ் பாடும் அடியார்க் கெல்லாம் உள்ளம் மகிழ நலம்புரி வாயே வந்தனம் சொல்லி வாழ்த்துக்கள் பாடி வளமுடன் வாழ உனையே பணிவோம்
வாசலில் மாவிலை தோரணம் கட்டி கோலம் போட்டு தீபம் ஏற்றி வாழை இலையில் படையல் போட்டு வணங்கிடு வோமே தாயே உன்னை
தொழில்துறை சாதனம் எதுவா னாலும் தூய்மை செய்து திலகம் இட்டு
உன்னெதிர் வைத்து இருகரம் குவித்து உள்ளன் போடு வணங்கிடு வோமே
சர்க்கரை பொங்கல் புளியோ தரையும் எலுமிச்சை சாதம் சுண்டலும் வைத்து அக்கறை யுடனே எங்களை காக்க அன்னை உன்னை வேண்டிடு வோமே
வெண்தா மரையும் ரோஜா மலரும் செம்பருத்தி பூவும் தொடுத்து மாலை அன்பாய் உனக்கு சூட்டிடு வோமே
அருள்மழை பொழிய வேண்டிடு வோமே
எல்லா உயிரும் இன்புற் றிருக்க
நல்லோர் துணையும் நாளும் கிடைக்க வல்லமை யான விதியினை தகர்க்க வரமருள் வாயே சரஸ்வதி தாயே
இசையது மீட்கும் இறைவி போற்றி இகபர சுகம்தரும் தேவி போற்றி அசைவதை அறியும் ஆற்றலை கொடுத்து அரவணைப் பாயே அனுதினம் நீயே
தெளிவுடன் திகழும் நதியே வாழ்க திருவடி பணிந்தோம் தேவி வாழ்க குலமது செழிக்க அருள்வாய் வாழ்க திறமைகள் வளர செய்வாய் வாழ்க
சரஸ்வதி தேவி பாதமே சரணம் சகலகலா வல்லியே என்றும் சரணம் சரணம் சரணம் நீயே சரணம்
அலைமகள் அனுதினம் அருள்வாய் சரணம்
மிக்க நன்றி.... மிகவும் அருமை. 🙏
ReplyDelete