2. குவலயத்தோர் உய்யவே குருவாதபுரத்திலே
குருவும் வாயுவும் தேட குழந்தையாய் வந்தவா.
3. பதும கல்ப யுகத்திலே பரசுராம ஸ்தலத்திலே பாங்குமிகு சித்திகளை பக்தர்களுக்களித்தவா.
4. பூவில் உறை பிரமனின் புண்ணிய தவத்தினால் ஏழு இரு உலகமாய் இறை உருவைக் காட்டினாய்.
5. சனகமுனி சாபம் தீர ஜய விஜய பக்தரை, அனுக்ரஹம் செய்திடவே அவதாரம் எடுத்தவா.
6. பூபாரம் குறைந்திட, பூமகளைக் காத்திட, இரண்யாட்சகன் ஜெயனைக் கொன்ற ஸ்ரீவராக மூர்த்தியே.
7. ஆத்மபோதம் சொல்லியே அன்னைதுயர் தீர்த்தவா, தேவகி மைந்தனே கபில முனித்தெய்வமே.
8. பால் வடியும் வயதிலே, பக்தியுடன் அழைக்கவே, பாலன்அந்தத் துருவனை பாய்ந்து ஓடிக் காத்தவா.
9.நரனே, நாராயணா ப்ருகு முனியாய் தோன்றினாய் ப்ராசேத மைந்தர்களால் ருத்ர கீதம் அருளினாய்.
10. ரிஷப தேவனாய்த் தோன்றி பருவமழை பெய்தனை, ரிஷிகள் ஒன்பவர் மூலம் பக்தி நிலை தந்தனை.
11.பரத மைந்தனின் பேரில் பாரதமும் தோன்றவே, இளவரத நாடிதிலே எல்லைத் தெய்வமாகினாய்.
12.நரக வேதனை தீர மூன்று காலத் தியானத்தை, நல்மக்கள் அறிந்திடவே மகரமாய்த் தோன்றினாய்.
13. அந்திமத்தில் அழைத்த அந்த அஜாமிளனுக்கு அருளினாய் ஐய நிந்தன் நாமமே உய்யும் வழி சேர்க்குமே.
14. தக்ஷனவர் பேரனாம் விஸ்வரூபன் மூலமாய், நாராயணக் கவசமீந்து தேவலோகம் காத்தவா.
15. சித்ரகேது புத்ரனால் ஆத்மபோதம் தந்தவா, மித்ரபாவம் காட்டியே மருட்கணத்தைப் பெற்றவா.
16. இரண்யாட்சகன் இளவலாம் கசிபுவின் இடம்பம் தன்னை கிழித்தெறிந்த நரசிம்ம மூர்த்தியே.
17. ஸ்ரவணத்தோடு கீர்த்தனம், ஸ்மரணமோடு சேவனம், தாஸ்யமோடு ஸக்யமும் ஜீவனின் சமர்ப்பணம்.
18. முக்தி தரும் குணமெலாம் முழுமையாகப் பெற்றதால்,பக்தி செய்த ப்ரஹலாதனைப் பாதுகாத்து நின்றவா.
19. ஆதிமூலம் என்றழைத்த கஜேந்திரனைக்
காத்தவா,கட்டுப்பட்டாய், பக்திக்கென்று பலச்ருதிகள் சொன்னவா.
20.பலப்பரீட்க்ஷை செய்த பாழும் அசுரர்களும் மாயவே, கடையும்போது பாற்கடலில் கூர்ம வடிவம் எடுத்தனை.
21. திரவியங்கள் வந்ததெல்லாம் தேவர்களுக்களித்தனை, திருமகளை மணந்து நீயும் திவ்யஜோதி ஆகினை.
22 போகமதுவை பங்கிடவே மோகமாது ஆகினாய், மோனத்தவமுனிவன் அந்த சிவன் மனத்தை மயக்கினாய்.
23. விண்ணும் மண்ணும் அளக்கவே வாமனனாய்த்
தோன்றினாய், பண்புமிகு பலியைக் காத்த பரந்தாமன் ஆகினாய்.
24. வேதமதைக் காக்கவே மீன் வடிவமாகினாய், வேதமகன் சத்தியனை வைஸ்வதனாக் கினாய்.
25. துவாதசியாம் நாளதிலே துர்வாச முனிவரைத் துரத்தியே கை ஆயுதத்தால் அம்பரீக்ஷைக் காத்தவா.
26. தேவர் குறை தீரவே, தந்தை சொல்லும் காக்கவே, தேவி மூலம் ராமா நீ ராவணனை அழித்தனை.
27. அருமைத் தந்தை மகிழவே, பரசுராமன் ஆகினாய், அன்னைப்பழியைத் தீர்த்தனை, அரசகுலம் மாய்த்தனை.
28. கம்ஸனை வதைக்க வந்த தேவகியின் மைந்தனே, கர்கமுனி ஆசியினால் பெற்ற பெயர் கிருஷ்ணனே.
29. யசோதையின் மைந்தனாய் கோகுலத்தில் வளர்ந்தனை, பாலலீலை பல புரிந்த நந்தகோப கண்ணனே.
30. வெண்ணையோடு ஐய எங்கள் உள்ளமதைத் திருடினாய், மண்ணைத்தின்று சிறுவாயில் பேருலகம் காட்டினாய்.
31. தாயும் உன்னை உரலில் கட்ட தாமோதரன் ஆகினை, தன்னையொத்த சிறுவரொடு வனபோஜனம் செய்தனை.
32. பிரமனின் தலைக்கனத்தை சிலகணத்தில் போக்கினாய், காளிங்கன்தனை அடக்கி தாண்டவமே ஆடினாய்.
33. பாலருந்தும் வேளையிலே பூதனையை மாய்த்தனை பலராமனாக நின்று ப்ராலம்பனை வதைத்தனை.
34. கோபியர் மனம் மகிழ வேணுகானம் இசைத்தவா, கோகுலத்தில் செய்ததெல்லாம் ராச லீலை அல்லவா.
35. வருணமழை பெய்த அந்த இந்திரனும் அடங்கவே வைத்துக் கொண்டாய் சிறு விரலில் கோவர்த்தன கிரியதை.
36. கோபம் தீர்ந்து இந்திரனார் கூவி நின்ற நாமமே கோகுலத்து குறை தீர்க்கும் கோவிந்தன் நாமமே.
37. அக்ரூரர் அழைத்து வர அன்னை ஊரைக் கண்டனை, அம்மானை வதைத்து நீயும் அதர்மத்தை அழித்தனை.
38. உருகி நிற்கும் கோபியர்தம் உயர்பக்தி காட்டவே,
உத்தவரை தூதுவிட்ட உத்தமனாய் நின்றனை.
39. ஆயக்கலை அறியச் செய்த அருமுனியும் மகிழவே, அவர் மகனை உயிர்மீட்டு குரு வணக்கம் செய்தனை
40. பல தடவை படையெடுத்த ஜராசந்தன் ஒடுங்கவே பாங்குடைய பட்டினமாம் துவாரகையைத் தோற்றினாய்.
41. புவன சுந்தரா நீயும் புரிந்துகொண்ட காதலால், சிறையெடுத்து ருக்மிணியை சீக்கிரமாய் மணந்தனை.
42. சத்ராஜித்தில் மணியைப் பெற சாகசமும் செய்தனை, நித்யஜோதி நீயும் கூட உலகப் பழி உண்டனை.
43. பாமாவுடன் தேவி பலரை பாந்தமுடன் மணந்தனை, பேதைமகள் ராதையை நீ பரிதவிக்க செய்தனை.
44. பலியின் பேரனாம் அந்த பாணனை அழிக்கவே, கிலிபிடிக்கச் செய்துவிட்டாய் சிவபெருமான் தன்னையே.
45. பாண்டவர்கள் ஐவருக்கு பாந்தமுள்ள தோழனே பாஞ்சாலி மானம் காக்க துகில் கொடுத்த தெய்வமே.
46. ராஜசூய யாகமதில் கடிய மொழி கேட்டு நீ, சிசுபாலன் சிரமரிந்த சீர்பெருமாள் அல்லவோ.
47. போர்க்களத்தில் பார்த்தனுக்கு ஊக்கநிலை தந்தவா, கீதையென்ற சாகரத்தின் தத்துவத்தை சொன்னவா.
48. கர்மயோகம், ஞானயோகம், பக்தியோக நிலைகளாய், விஸ்வரூபம் காட்டி நின்ற தேவயோகி அல்லவா.
49. உன்னிடத்தில் அன்பு வைத்தால் உன் மனவை தானவள், உடன் வருவாள் என்றறிய குசேலரைக் காட்டினாய்.
50. அந்தணசிசுக்களை அர்ச்சுனருக்கு மறைத்து நீ, அவனகந்தை அடக்கிவிட்ட சந்தான கிருஷ்ணனே.
51. மாயப்பிடியில் சிக்கிவிட்ட மார்க்கண்டன் உணரவே மாலவனே உன்னுருவை ஆலிலையில் காட்டினாய்.
52. பக்தியென்ற கயிற்றினால் பக்தன் உன்னைக் கட்டினால முக்திநிலை தந்துநிற்கும் மூலவனே முகுந்தனே.
53. எட்டுவித நிலைகளால் உனை நினைக்கும்போதிலே, ஏற்படாது கலியில் துயர் என்று அருளி நின்றவா.
54. பிறப்பு, இறப்பு பிடிப்பிலே பரிதவிக்கும் உயிர்களை பிறவாமல் செய்திட பக்தி ஒன்று போதுமே.
55. பாகவத சாரத்தை பாக்களில் அருளவே, பட்டத்ரியின் ரோகம் நீக்கி பரஉருவைக் காட்டினாய்.
56. மயில்பீலி அழகுடன் மணிரத்ன மகுடமும், ஒயில் கொஞ்சும் வதனமும், அணி செய்யும் திலகமும்
57. சுருள் கொண்ட கேசமும், சொக்க வைக்கும் நாசியும், மருண்ட விழிக்கருணையும், மகரத்தினால் குண்டலமும்
58. பவழ இதழின் உட்புறம் மின்னலெனப் பற்களும், பதுமராக சிலையென பளபளக்கும் கன்னமும்
59. கரமதிலே கோதண்டம், கமலத்தோடு மறுகரம் பாஞ்சசங்கம், சக்கரம் பாந்தமாக இருபுறம்
60. தோள்வளையும், ஹாரமும், தொங்கும் கழுத்தில் கெளஸ்துபம், தோன்றிவிட்ட உயிர்களைத் தாங்கும் உந்தன் தேகமும்.
61. அகிலமனைத்தும் அடக்கிய சிறுவயிறும், நாபியும், அம்பரமோ மஞ்சளாம், நீலவண்ணம் உன் நிறம்.
62. தேவர்களும், தானவரும் துதிக்கும் உந்தன் கால்களும், மாதவத்தார் பணிந்திடவே கூர்ம வடிவபாதமும்
63. வக்ஷஸ்தல வாசினியாம் லட்சுமியும் மகிழவே, இச்சையுடன் எங்கள் முன்னே எழுந்தருள வேண்டுமே.
64. பல தடவை கூறினார் பட்டத்ரியும் பாக்களில், பகவானின் பாதமே மோட்ச நிலை சேர்க்குமே.
65. யோகியர் மனம் கூட மோகம் கொள்ளும் பாதமே போகநிலை வேண்டுவோர்க்கு கல்பக விருட்சமே.
66. சித்திபெற்ற முனிவர்கட்கு முக்திதரும் பாதமே, பக்தி செய்த பட்டத்ரியின் இதயவீடு ஆகுமே.
67. அறியாமை காரணத்தால் பிழைகள் செய்யும் எங்களை, அன்னையாக அரவணைத்து ஆட்கொள்ளும் பாதமே
68. நாராயண நின்நாமம் பாராயணம் செய்யவே, நாராயண கவி அளித்த நல்லமுதம் வாழ்கவே.
நாராயண நாராயண நாராயண பாஹிமாம்,
நாராயணீயத்தின் வளர் நாயகனே ரக்ஷமாம்.
No comments:
Post a Comment