அல்லவை எல்லாம் நீங்கி நல்லதே நடக்க வேண்டும்
ஏழுமலை வாசா எங்கள்
இதயமதில் வாழும் நேசா
இலக்குமியின் தாசா
நெஞ்சம் இரங்குவாய் சீனிவாசா
வாழும் உயிர் அத்தனைக்கும்
வாழ்வளித்து காக்கும் ஈசா
வருகிறோம் உன்னை நோக்கி
வரம்வேண்டும் வரதராசா
பாழும் இந்த உலகின்
பாவம் போக்கிடும் பாப நாசா
பாதங்கள் பணிந்தோம் உந்தன்
பார்வையைக் காட்டு இலேசா
சூழுகின்ற துயரம் எல்லாம்
சுக்கு நூறாக்கி தூசாய்
சுகமாக்கு எங்கள் வாழ்வை
திருமலை வெங்க டேசா !
பன்னிரு ஆழ்வார் போல
பாடிடும் புலமை இல்லை
ஆயிரம் கீர்த்தனை சொல்லி
பணிந்திடும் பொறுமை இல்லை!
உன்னையும் பங்கில் சேர்க்க
ஓகோவென தொழிலும் இல்லை
உண்டியல் தன்னில் கொட்ட
ஒன்றுமே கையில் இல்லை.
என்னிடம் வாங்கிக் கொள்ள
நீயொன்றும் ஏழை இல்லை!
எனக்கீந்தால் உந்தன் செல்வம்
எள்ளளவும் குறைவதில்லை.
மன்னிய செல்வம் எல்லாம்
மட்காதோ சேர்த்து வைத்தால்?
மகிழாதோ மண்ணுயிர் எல்லாம்
மாலவா மனது வைத்தால்!
அனுதினம் உன்னைப் பாட
அடியேனும் ஆண்டாள் இல்லை
அவல்தந்து செல்வம் வாங்க
அட நானும் குசேலன் இல்லை!
கனவிலும் உன்னைக் கொஞ்ச
கண்ணாநான் கோபியர் இல்லை
கடமைசெய் பலனில்லை என்றால்
கேட்கநான் அர்ச்சுனன் இல்லை!
தினமுந்தன் நாமம் சொல்லித்
திரியநான் நாரதன் இல்லை
திறந்து என் நெஞ்சில் உன்னைக்
காட்ட நான் அனுமனும் இல்லை.
மனதிலே ஒருநொடி எண்ணி
மறுவேலை பார்க்கப் போகும்
மனிதன்நான் என்துயர் போக்க
மாதவா மனமா இல்லை?
போதுமெனச் சொல்லும் வரையில்
பொன்பொருள் சேர்க்க வேண்டும்
போதாது வாழ்வோர்க் குதவி
புண்ணியம் சேர்க்க வேண்டும்.
பாதையில் இடறும் கற்கள்
படிக்கற்கள் ஆக வேண்டும்
பாதையில் தடம் பதித்து
பயணத்தை முடிக்க வேண்டும்.
மோதுவது மலையே எனினும்
மோதி நான் பார்க்க வேண்டும்
முயல்கிற செயல்கள் எல்லாம்
முடித்து நான் காட்ட வேண்டும்!
வேதனை ஏதுமின்றி
விண்ணகம் ஏக வேண்டும்
வேறொரு கருவில் மீண்டும்
வாராது போக வேண்டும்.
மாதவா கண்ணா போற்றி!
மாலவா கிருஷ்ணா போற்றி!
மார்பிலே திருமகள் உறையும்
மலரவா போற்றி போற்றி!
கோதண்ட ராமா போற்றி!
கோவிந்த ராஜா போற்றி!
கோகுல வாசா போற்றி!
கோபாலா போற்றி போற்றி!
சீதை மண வாளா போற்றி!
ஸ்ரீரங்கா நாதா போற்றி!
ஸ்ரீதேவி கடைக்கண் காட்ட
திருவருள் புரிவாய் போற்றி!
வேதத்தின் தலைவா போற்றி!
வேதனை தீர்ப்பாய் போற்றி!
வேண்டியது எல்லாம் தருவாய்
வேங்கடா போற்றி போற்றி!
No comments:
Post a Comment