பரம் எனக்கு வேறில்லை நீயே
வரம்மிக அருளி வாழ்த்து வாயம்மா
சிரம் தாழ்த்திச் சேவித்தேன் சித்தாடியம்மா
ஆவன செய்திட அமர்ந்தாய் சித்தாடி
போவென செய்திடு புண்ணியம் அற்றவை
பாவனம் ஆக்கிடு பார்வதியுடன் அமர்ந்தாய்
ஜீவனைக் காத்திடு சேவித்தேன் சித்தாடியம்மா
எங்கும் உள்ளவளே எப்போதும் உள்ளவளே
பொங்கும் ஆனந்தம் பொழிந்திடு புவனேஸ்வரி
வங்கும் நோயும் வாராதவரம் அருளம்மா
சிங்கமேருமம்மா சேவித்தேன் சித்தாடியம்மா
எந்த நோயும் எதிர்படும் ஆபிசமும்
வந்தெனை வளைத்திடா வரமருள் வாலையே
பந்தாடும் மந்திரம் பட்டிடாமல் பார்த்தருளம்மா
சிந்தனை உன்பால் சேவித்தேன் சித்தாடியம்மா
எதிரிகள் எனக்கிலாது எடுத்திடு என்னம்மா
சதி எனக்கெதிர் செய்வோரை சாடிடம்மா
விதியால் வந்திடும் வினைதமை விலக்கிடம்மா
கதிநீயே கழலடி காட்டியருள் காத்தாயியம்மா
அனைத்துயிரு மெனக்கடங்கிட அருள்செயம்மா
மனையில் மக்களின் மங்கலமோங்க அருளம்மா
நினையே நாடினேன் நினதடி கதியென
உனையே உரைப்பேன் உகந்தருள் காத்தாயி
ஆகாதவை யானறியேன் ஆகாதவை எனக்கு
ஆகாதென அப்புறப் படுத்திநீ அருள்ம்மா
ஆகாசம் பூமி அனைத்துயிர் நீயே எனும்
ஏகாந்த நிலையருள் என்னம்மா காத்தாயி
எப்பிசகு செய்தாலும் என்னம்மா நீஇரங்கி
அப்பிசகு மன்னித்து அருள் புரிந்திடம்மா
ஒப்பிலா மணியே ஒதினேன் உனதடிமை
கப்பிய பிறவி கடையாக்கியருள் காத்தாயி
எட்டையும் ஒதிட எட்டியோடுமாம் வினை
தொட்ட ஞானம் தொடர்ந்து தழைக்கும்
அட்டமா சித்திகள் அனைத்து மடைந்து
கட்டவும் கைகூடும் காத்தாயி கருணையால்
No comments:
Post a Comment