மஞ்சள் பட்டாடை தரித்தவரும் தேவர்களின் குருவும், வாக்கு வல்லமை மிக்கவரும், பார்வையாலேயே பல்வேறு நன்மைகளைச் செய்பவரும், என்றும் இளமையுடன் இருப்பவருமான பிரஹஸ்பதியை வணங்குகிறேன்.
கிரகங்களுள் தலைமையானவரும், மற்ற கிரகங்களால் ஏற்படும் துன்பங்களை தனது பார்வை பலத்தால் போக்குபவரும், அழகிய வடிவினரும், அமரர்களின் ஆசார்யரும், கருணை நிறைந்தவருமான குருபகவானை துதிக்கிறேன்.
வேத வேதாந்தங்களை அறிந்தவரும், அனைத்து தேவர்களையும் விட அறிவிலும், அனுபவத்திலும் மூத்தவரும், நீதி தவறாதவரும், தாராவை தன் பத்தினியாகக் கொண்டவரும், ஆங்கீரஸரும், உலக உயிர்களின் குருவாகத் திகழ்பவருமான பிரஹஸ்பதியை போற்றுகின்றேன்.
குருபகவானை பக்தியோடு போற்றி இத்துதியைச் சொல்பவர், சங்கடங்கள் ஏதும் இல்லாதவராக, பிணிகளில் இருந்து விடுபட்டவராக, நீண்ட ஆயுளுடன், ஆரோக்யமாக, திருமணம், புத்திர சந்தான ப்ராப்தி உள்ளிட்ட எல்லா செல்வங்களையும் பெறுவர்.
வியாழக்கிழமைகளில் இந்தத் துதியைச் சொல்லி, தூப தீபங்கள் ஏற்றி, மஞ்சள் நிற ஆடை அணிவித்து, நறுமண மலர்களால் குருபகவானை அர்ச்சிப்பதோடு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும் வருவோர் வாழ்நாள் முழுவதும் குருகடாட்சத்தால் எல்லா நற்பலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பது நிச்சயம்!
No comments:
Post a Comment