Sunday, May 30, 2021

முருகன் புஜங்கப் பாமாலை | Murugan Bujanga paamaalai (In Tamil)

முருகன் புஜங்கப் பாமாலை | Murugan Bujanga paamaalai (In Tamil)



1. காலமெல்லாம் பாலனவன் கணேசன் திருவுடையோன் 
சூல மொடு ஐம்முகத்தோன் சுரனோடு நான்முகனும்
சீல மிகு திருமாலும் தேடிவரும் கரிமுகத்தோன்
மூலவினை மலைநீீீீீக்கி முழுச் செல்வமருள் புரிவான்

2. கவியறியேன் வசனமோ கண்டறியேன் யென்றன்
செவியறியா தொலியெதை செப்பியுமறியேன் பொருள்
புவிபுகழும் ஆறுமுகா! உன் புனிதமுகம் நோக்குங்கால்
தெவிட்டாத தேன் தமிழ்ச்சொல் தெளிந்து வரும் நெஞ்சிருந்து

3. உலகமெல்லா காக்கும் கந்தா! உளம் மகிழும் ஒளி உருவே!
நலமுடை சான்றோர் நெஞ்சில் நாளெல்லாம் வாழும் தேவே!
பலர் போற்றும் சிவன் மைந்தா! பக்தி மிகு அந்தணர் தம்
குலதேவா! வேதத்தின் தத்துவமே! கோலமயில் வாகனனே! பணிகின்றேன்

4. செந்திற்கடலுடையோன் சேவடி துணையென்றே
வந்தவர்தம் பிறவியெனும் வரையில்லாக் கடலினிலே
கந்தன் திருவருளால் கடந்திடுவார் பராசக்தி
மைந்தன் பதம்பணிவோம் மால் மருகன் சொன்னபடி 

5. "ஓங்கி உயர்ந்தடிக்கும் ஒய்யாரக் கடலலையும் 
ஆங்கென அடிபணிந்து அமர்ந்திடுமாம் விந்தைபோல
ஏங்கும் கவலையோடு என்முன்னே வந்திட்டால் 
நீீீீங்கும் தீங் " கென்பான் நெஞ்சிலுறைச் செந்தூரான்

6. " எந்தன்மலை வந்தவர்கள் எந்தைமலை போனவர்கள் 
கந்தமலை வந்தவர்கள் கைலைக்கு வந்தோ " ரென்பான்
சிந்தும் ஒளி மதிமுகத்தோன் செந்திலுறை ஆறுமுகம்
செந்தாமரை மலரொக்கும் சேவடிகள் தாம்வாழ்க

7. எத்தனையோ பாவமெல்லாம் எளிதினிலே போக்கவல்ல 
சித்தர் வாழ்கந்தமலை சீீீீரலைவாய் ஓரத்தினில்
புத்தொளியாய்க் குகையினிலே புனிதகுகன் வீற்றுள்ளான். 
புத்துயிராய் விளங்குமவன் பொன்னடிகள் போற்றிடுவோம்

8. மாணிக்கக் கட்டிலென்ன மாசறுபொற் கோயிலென்ன
நாணக்கண்டிடலாம் நாற்கோடி ரவிஒளியும் 
வானத்துத்தேவதேவன் வரம்வேண்டத் தான்தருவான் 
காணக்கண்குளிரும் கார்த்திகேயன் தாள்பணிவோம்

9. செந்நிறப் பாதமலர் சிந்தும் தேனமுதமலர்
இன்னொலி பாதரசம் இன்பமயமாக்கும் மனம்
உன்னினைவில் நினைவாக உலவிவரும் வண்டெனவே
என்னிதயம் இருந்தங்கே எப்போதும் களித்திடுமே

10. தங்கமய ஒளிவீசும் தகதகக்கும் பட்டாடை
அங்க அசைவினிலே அரைஞானும் ஒட்டியாணம்
கிண்கிணிக்கும் சலங்கை ஒலி கிறங்கவைக்கும் இடுப்பழகும்
எங்கும் ஒளி வடி வாம் எழில்முருகன் தாள் பணிவோம்

11. மங்கை குறவள்ளிதனை மால்மருகன் ணைந்ததுமே
கொங்கையழகிட்ட குங்குமமும் மார்புறைந்தே
அங்கும் செவ்வொளிவீச அன்பர்தமையாட் கொள்வான்
தங்கநிற மார்புடையோன் தாரகனைக் கொன்றவனாம்

12. சூரபதுமனைக் கொன்றே சுரன் பகை தான்வென்றே
தூரயமனை ஒட்டி துண்டித்த யானைதந்தம்
பாருலகம் படைத்தவனைப் பணியவைத்த வேலவனைச்
சேரும் உயிர்க்காக்கச் செந்தூரான் கரம் துணையே

13. பனிக்காலச் சந்திரனும் பருவமெலாம் நிறைந்தாலோ
தனித்தாறு முழுமதியின் தண்ணொளிபோல் ஆறுமுகம்
தனக்குள்ளே மாசுற்றும் தரணியிலே தோணும் மதி
கனிக்காக வலம்வந்த கந்தனுக்கு நிகராமோ?

14. அன்னப்பறவைகளோ ? ஆறுமுகா புன்சிரிப்பு
இன்னமுத இதழழகால் இன்சொற்கள் தாம்வருமே
வண்ணமலர்த் தமரையில் வண்டுலவும் விழியழகை
என்னசொல்ல? சிவபாலா? எழில் தாமரைமுகனே!

15. கண்விழிகள் பன்னிரண்டும் காதுவரை நீண்டிருக்கும்
நின்கருணைப் பெருவெள்ள நீர் துளிதான் கிட்டாதோ
அன்பரெனத் தொழுவோர்க்கு அருள்புரிந்தால் குறைந்திடுமோ?
உன்பார்வை படுமாயின் உய்வேனே உமைபாலா

16. முன்னின்ற பாலகனை முகர்ந்திட்டு மகிழ்ந்த சிவன்
" என்னின்றுதித்த மைந்தா என்றென்றும் வாழ்க " வென
சொன்னதுமே ஆறுமுறை சுகவாழ்வை நிலையாக்கும்
மன்னுலகின் சுமைதாங்கும் மணிக்கிரீடசிரம் பணிவோம்

17. மாலைமணியணிகள் மார்பில் அசைந்தாட
கோலமிகு காதணியும் குண்டலமும் தோள்வளையும்
மேலிடைப்பட்டாடை மேன்மையொளி வீசிடுமே
வேலன், புரமெரித்தோன் வேதமைந்தா நீீ வருக

18. "இங்கு வா " வென்றதுமே இளையத் திருக்குமரன்
சங்கரிதன் மடியிருந்து சங்கரன் கரம் தழுவும்
தங்கநிற இளம்மேனி தவழும் குழந்தையவன்
திங்கள் முகமாறும் தினமும் பணிந்திடுவேன்

19. குமரா! ஈசன் திருமகனே! குகனே! திருமயில் வாகனனே!
அமரர்பதியே! ஆறுமுகா! அடியார் துயர்கள் நீக்குபவா!
சமரில்தாரகனை கொன்றவனே! சரவணபவனே வள்ளிமணாளா!
உமையாள் உருவாம் வேல்முருகா! உம்மைப் பணிந்தோம் காத்திடுவாய்

20. புலனடங்கி நினைவிழந்து பொறிகலங்கி கபமடைக்கப்
பலம்நலிந்து செயல்மறந்து பயம்மிகுந்து உடல்நடுங்க 
நலம்நசிந்து உயிர்மறைந்து நமனை நாடும் போதினில்
உலகறிந்த துணைகள்வேறு உதவிடுமோ உனையல்லால்

21. வெட்டு, பிள, பொசு க்கென்று வெஞ்சினமாய் யமதூ தர்
கிட்டவரும் காலமதில் திருமயிலும் வேலுடனே
கெட்டலைய விட்டிடாமல் கிட்டவந்து அஞ்சேல் எனத்
தொட்டுக் காத்தருளத் தோன்றிடுவாய் வேலவனே

22. உனைப்பணிந்து கேட்கின்றேன் "ஓம் முருகா" என்றுனையே
கணப்பொழுதும் சொல்லாமல் கைகளையும் குவிக்காமல்
நினைவிழந்து தவிப்பேனே நெஞ்சிலுயிர் நீங்குகையில்
துணைபுரிவாய் அப்போது, துதித்திடுவேன் இப்போதே

23. தாரகன், சிங்கமுகன், தம்பிகளின் தமையனவன்
சூரபத்மன் என்பவனும் சூழும் அண்ட மாயிரத்தை
வீரமோடு ஆளுகையில் வீழ்த்தியதும் வேலதனால்
பாரமன நோய்நீக்கிப் பார்த்தருள்வாய் வேலவனே

24. உமையாள் திருமகனே! உன்னடியேன் துக்கமெனும்
சுமையால் தளர்ந்தவன்நான் சுந்தரவடிவேல் கொண்டு,
இமையா அமரர்தேவா! ஏழைக்கிரங்கும் வேலா!
உமையன்றி வேறறியேன், உளநோய் நீீீீக்கிடுவாய்

25. காசம்கபம் குட்டமொடு காக்கைவலி காய்ச்சலெனும்
நாசம்செயும் பெருநோயும் நலியவைக்கும் பைசாசம்
வாசம்செய்ய என்னுடலில் வந்திட்டால் வேலாஉன்
பூசுமிலைத் திருநீற்றால் போக்கிடுவாய் தீீீீீீீவினையாம்

26. கந்தனைக் காணவேகண்கள், கரங்களும் அவன்பணிக்கே
செந்தில் முருகன் புகழ் செவிபடைத்த பயனாகும்
சந்ததமும் அவன் சரிதம் சந்தமொடு வாய்ப்பாடும்
சிந்தனையும் உடல்வாழ்வும் சீரலைவாய் கந்தனுக்கே

27. பக்திநெறி மனிதர்க்கும் பரதத்துவ முனிவர்க்கும்
முக்தி யளித்திடுவர்  மும்மூர்த்தி தெய்வங்களாம்
எத்தையுமறிந்திடாத எளியநிலைப் பஞ்சமரின்
சித்தமருள் முருகனன்றி சிறியேனெதையுமறியேனே

28. மனைவியோடு மக்களும் மனையில்வாழும் பசுக்களும்
மனிதனோடு பெண்களும் மற்றுமுள்ள சுற்றமும்
நினைந்துமையே வணங்கவும், நித்தமும் துதிக்கவும்
வினைகள் நீீீீீங்க வேள்வியை விதிப்படி நடக்கச்செய்வீீர்!

29. நெடியமலைக் கிரௌஞ்சமதை நினைத்ததுமே வேல்கொண்டே
பொடி செய்தவேலவனே! புண்படுத்தும் நோய்களையும்
கொடியவிடப் பிராணியோடு கொத்தவரும் பறவையினம்
கடுகியோடச் செய்திடுவீர் கைகள் தாங்கும் வேலதனால்

30. தன்மகன் செய்தபிழை தந்தைதாய் மன்னியாரோ?
உன்மகன் நானன்றோ? உலகத்தின் தந்தையே நீ
தென்பரம் கிரிதேவா! தேவசேனா பதியே!
என்பிழை மலையெனினும் எளியேனைப் பொருத்தருள்வாய்

31. கந்தா! உன்மயில் போற்றி! கடம்பா வேல்போற்றி! சிவன்
மைந்தா சேவல்போற்றி! மறியாடும்தான் போற்றி!
சிந்தா குலந்தீீர் செந்தூரா! சிந்தும்சேவடியும் போற்றி!
வந்தே வரமருள்வாய் வணக்கம் வணக்கமையா

32. வெற்றிதரும் இன்பவடி வேலவனே! சிவன்மகனே!
வெற்றியின் திருஉருவே! விளங்கும் புகழுடையோய்!
வெற்றிகொண்ட திருக்கடலே! வெள்ள பெருக்கினைபோல்
வெற்றிபுகழ் இன்பமெலாம் வேண்டுவோர்க் கருளிடுவீர்!

33. கந்தனின் புஜங்கமதை கவிபாடி பக்தியோடு
வந்தித்து வழிபட்டால் வாழ்ந்திடலாம் நெடுங்காலம்
சிந்தைக்குகந்த இல்லாள், செல்வம், நன் மக்களுடன்
தந்திடும் பேரின்பநிலை தரணிபுகழ் குகனருளே


https://www.youtube.com/watch?v=JryFek6w0VU

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...