Friday, November 19, 2021

தாமோதராஷ்டகம் தமிழில்| Damodarashtakam (Tamil translation)

 


A popular verse that celebrates Lord Krishna as Damodara is the Shri Damodarashtakam (from Padma Purana) ஸ்ரீ தாமோதராஷ்டகம்: ஸ்ரீ கிருஷ்ண துவைபாயண வியாசரால் எழுதப்பட்ட பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஸ்ரீ தாமோதராஷ்டகம் சச்சிதானந்த ரூபம் மற்றும் ஊஞ்சலாடும் குண்டலங்கள் காதில் கொண்ட கோகுலத்தின் ஒளியான பரமபுருஷர் தாமோதரருக்கு வணக்கங்கள், அன்னை யசோதை கடைந்து கொண்டிருந்த தயிர்ச் சட்டியை உடைத்து, அதில் இருந்த வெண்ணெய்யைத் திருடிக் கொண்டு, பின் பயந்து மர உரலில் இருந்து அவர் குதித்து ஓட அவரை விட வேகமாக ஓடி அவரைப் பின்புறமாக பிடித்த அன்னை யசோதையிடம் பிடிபட்ட பரம்பொருள் தாமோதரருக்கு என் வணக்கங்கள். அன்னையின் கரங்களில் அடிக்கும் தடியைக் கண்ட தாமோதரர் தன் தாமரைக் கரங்களால் கண்களை மீண்டும், மீண்டும் கசக்கிக் கொண்டு அழுகிறார். அவருடைய கண்களில் அச்சம் நிறைந்திருந்தது. சங்கின் வரிகள் போன்று மூன்று புரிகளை உடைய அவருடைய கழுத்தில் இருந்த முத்தாரம், அவர் அழுது கொண்டு மூச்சு விட்டதால் அசைந்து கொண்டிருந்தது. கயிற்றால் அல்ல, அவருடைய அன்னையின் தூய அன்பினால் கட்டப்பட்ட அந்தத் தாமோதரருக்கு என் வணக்கங்கள்..


https://www.youtube.com/watch?v=ZRKy3rcqe0w&list=PLs4TE8o6KSL8hMFbuFgJHksJeu_0OYO_k&index=1 இது போன்ற பால லீலைகளினால் கோகுல வாசிகளை ஆனந்தக் கடலில் அமிழ்த்தினார். தன்னுடைய ஐஸ்வர்யங்களை உணர்ந்து, அதில் ஆழ்ந்த பக்தர்களுக்கு, மாறாத தூய பக்தியால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்று காட்டிய அந்தத் தாமோதரருக்கு. அன்புடனும், பக்தியுடனும் மீண்டும். மீண்டும் நூற்றுக்கணக்கான வந்தனங்களைச் சமர்ப்பிக்கிறேன். தேவனே. நீவீர் மோட்சம் மற்றும் வைகுண்டம் முதற்கொண்டு எல்லாவித வரங்களையும் அளிக்க வல்லீர் ஆயினும், எவ்வித வரத்தையும் உம்மிடம் நான் வேண்டவில்லை. நாதா! விருந்தாவனத்தில் உள்ள உமது பால கோபால வடிவம், சதா என்னுடைய மனதில் நிலைக்கட்டும். மற்றவற்றால் என்ன பயன்? பசுவானே! கருநீலக் கூந்தலால் சூழப்பட்ட உம்முடைய தாமரை முகம், அன்னை யசோதையால் மறுபடியும், மறுபடியும் முத்தமிடப்பட்டு சிவந்து காணப்படுகிறது. பிம்பப் பழம் போல் உமது உதடுகள் சிவந்து காணப்படுகிறது. இத்தகைய திருமுகம் என்றென்றும் என் மனதில் நிலைக்கட்டும். ஆயிரக்கணக்கான வேறு வரங்களால் என்ன பயன்? நமோ தேவா! தாமோதரா, அனந்தா, விஷ்ணோ பிரபு என் மீது திருப்தி கொள்ளுங்கள். துக்க ஜால கடலில் மூழ்கி மிக வீழ்ந்து கிடக்கும் என்னை, கிருபா திருஷ்ட மழை பொழிந்து. அனுகிரஹித்து, அஞ்ஞானம் நிரம்பிய என்னுடைய கண்ணுக்கு காட்சி அளியுங்கள். ஓ தாமோதரா! மர உரலில் கட்டுண்ட குழந்தை வடிவத்தில், குபேரனின் பிள்ளைகளை நாரதரின் சாபத்திலிருந்து விடுவித்து, உமது பக்தர்கள் ஆக்கினீர்கள். அத்தகைய பிரேம பக்தியை எனக்கு அளித்தருளும்! வேறு எந்தவித மோட்சத்திற்கும் நான் ஆசைப்பட வில்லை. ஓ பிரபு தாமோதரா நான் முதலில் உமது உதரத்தை கட்டிய ஒளிநிறைந்த பிரகாசமான கயிற்றை வணங்குகின்றேன். பின் உமது உதரத்தை வணங்குகின்றேன். உமது உதரமோ அண்ட சராசரம் அனைத்தையும் அடக்கியுள்ளது. அடுத்ததாக உமக்கு மிக பிரியமான உமது அருமை ஸ்ரீமதி ராதா ராணியை வணங்குகின்றேன். இறுதியாக எண்ணற்ற லீலைகளைப் புரியும் பரமபுருஷரும் பரம் பொருளுமாகிய உம்மை வணங்குகின்றேன்.

Listen to this beautiful translation on YouTube : https://www.youtube.com/watch?v=ZRKy3rcqe0w

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...