Friday, November 19, 2021

Shri Hanumath Laangula Asthira Mandhiram | ஶ்ரீ ஹனுமத் லாங்கூல அஸ்திர மந்திரம் | தமிழில்


 

Shri Hanumath Laangula Asthira Mandhiram | ஶ்ரீ ஹனுமத் லாங்கூல அஸ்திர மந்திரம் | தமிழில்



ஹே ஹனுமாரே அஞ்சனா தேவியின் மகனே, மிகுந்த பலமும் வீரமும் பொருந்தியவரே உம்முடைய அசைந்து ஆடுகின்றவாலாகிய அஸ்திராயுதத்தினால் எனக்கு உபத்திரவம் தருகின்ற எனது எதிரிகளை அடித்து தள்ளி விழச் செய்ய வேணும்.

வானர சேனைக்கு அதிபதியும் சூர்யமண்டலத்தையே
கவளமாக்கி உண்டவருமாகிய மாருதியே உம்முடைய வாலாகிய அஸ்திரத்தினால் என் சத்ருக்களை வீழ்த்துவாயாக
அட்சய குமாரன் என்கிற அரக்கனை அழித்தவரே, பொன்னிற கண்களையுடையவரே, திதி தேவியினிடமிருந்து உண்டாகிய அரக்கர்களை அழித்த அனுமந்தரே உம்முடைய வால் அஸ்திரத்தினால் என் எதிரிகளை வீழ்த்திவிடுவாயாக.


சிவனுடைய அவதாரமாகவும் ஸம்ஹார மூர்த்தியும், வாட்டுகின்ற மனச்சுமையினின்றும் மீட்பவரே, தங்கள் வாலாகிய ஆயுதத்தினால் எனது எதிரிகளின் தீய சக்திகளை முறியடிப்பாயாக,
ஸ்ரீராமருடைய பாத கமலமாகிய தாமரைபூவினில் தேன்உண்டு மகிழும் வண்டு போன்று மனதோடு எப்போழ்தும் உள்ளவரே, எனது எதிரிகளை உம்முடைய வாலாகிய அஸ்திரத்தினால் அடித்து விழச்செய்வாயாக.


வாலியினால் துன்புறுத்தப்பட்டு மனம் வருந்திய சுக்ரீவன் முதலியவர்களை காப்பாற்றி விடுவித்திருந்த ப்ரபுவே. உம்முடைய அஸ்திரமென்கிற வாலால் என் எதிரிகளை நாசம் செய்வாயாக.
சீதைபிராட்டியின் பிரிவினால், துக்க சமுத்திரத்தில் மூழ்கிய ராமனை, அவ்விதத்திலிருந்து காத்தவரே, உம்முடைய வாலினால் என் எதிரிகளை வீழ்த்துவாயாக.


ராக்ஷஸர்களின் அரசனாகிய இராவணனுடைய ஆசை என்கிற அக்னியால் எரிந்த உலகங்களை, தேவரீர் கருணை மழையினால் குளிரச் செய்தவரே. உம்முடைய வாலாகிய ஆயுதத்தினால் எனது எதிரிகளை நசிப்பீராக.
அரக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, தீங்குகளுக்கு உட்பட்ட, அமைதியான அகில உலகங்களையும், ராக்ஷச சமுத்திரதினின்று மந்தரமலை போன்று கடைந்து காத்தவரே உம்முடைய வாலாகிய அஸ்திராயுதத்தால் எனது எதிரிகளை வீழ்த்துவீராக.


உம்முடைய வாலின் நுனியில் ஜொலிப்புடன் பிரகாசிக்கின்ற குஞ்சத்தினால் வீரனாகிய இராவணனின் பட்டணத்தின் அஹங்கார அழகினை ஒட்டு மொத்தமாக விவேகத்துடன் எரித்தவரே. உம்முடைய வால் அஸ்திரத்தால் எனது எதிரிகளை நாசம் விளைவிப்பீராக.


உலகினில் தோன்றிய யாராலும், மனத்தினாலும் தாண்ட முடியாத பெருங்கடலை தாண்டியவரே, ஆடுகின்ற உமது வாலால் அடித்து என் சத்ருக்களை வீழ்த்திடுவாயாக.


உம்மை நினைத்த மாத்திரத்தில் உடனே நமக்கு எல்லாவித மனோபீஷ்டங்களை அளிப்பவரே, உம்மை வணங்கியவரை பிரியங்ககொண்டு நிறைவுகள் அளித்து, நிறைவு அடைபவரே, ஆடி அசைந்து கொண்டிருக்கின்ற உமது வாலால் எனது சத்ருக்களை வீழ்த்துவீராக.
இரவில் அலையும் அரக்கர்களாகிய இருளைப் போக்குவதில் சூரியனுக்கு நிகரானவரே, ஆடிக்கொண்டு இருக்கின்ற உமது வாலால் எனது எதிரிகளை வீழ்த்துவீராக.


ஸ்ரீ ஜானகியின் கருணைக்கும், ஸ்ரீ ஜானகியின் வரனாகிய ஸ்ரீ ராமரின் அன்பிற்கும் பாத்திரமாகிய வரும், அத்தகைய அன்பிலிருந்து மீழாமலிருக்க சதா தவமிருப்பவரும், மிகுந்த தபோ வலிமையுள்ள மஹேசனே, உமது ஆடுகின்ற வாலால் என் சத்ருக்களை அடித்து வீழ்த்துவீர்.
வீமனைவிட அதிக உறுதி படைத்தவரே, வீரஆவேசமாக அவதரித்தவரே, மஹாதேவனின் அம்சமாகிய ஹனுமந்தராயரே, உமது ஆடுகின்ற வாலாகிய அஸ்த்ரத்தினால் எமது சத்ருக்களை வீழ்த்தி தண்டிப்பாயாக.

சீதையின் பிரிவினால் மிக வருந்திய ஸ்ரீராமனின் கோபத்தின் மறு உருவமாகி, மிகுந்த கோபாக்னியாக இருந்தவரே, உமது ஆடுகின்ற வாலால் எனது எதிரிகளை அடித்து தண்டிப்பாயாக

வைரம் போன்று உறுதியான தேஹம்படைத்தவரும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்கு ஒப்பான வரும். இந்திரனுடைய வஜ்ராயுதத்தை வீணாக்கியவரும், ஆகிய ஹனுமரே! உமது வஜ்ராயுதம் போன்ற வாலினால் எமது சத்ருக்களை அடித்து வீழச் செய்து தண்டிப்பீராக.
நேர்மையற்ற கர்வம் கொண்ட கந்தவர்களின் வசிப்பிடமான மஹேந்திர பர்வதத்தினை தகர்த்தி பிளவுபடுத்தி கர்ஜித்தவரே, உமது கர்ஜனையுடன், உமது உறுதி மிகுந்த வாலால் எமது எதிரிகளை அடித்து தள்ளி வீழ்த்துவீராக.


லக்ஷ்மணனுடைய உயிர்காத்தவரும், உம்மை சரணடைந்தவரை அபயமளித்தும், நமது எதிரிகளை குலைநடுங்க வைக்கும் கூரிய நகங்களுடன் அமைந்த கைகளுடன் உடையவரே, உமது பலம் மிகுந்த வாலால் எமது சத்ருக்களானவர்களை அடித்து தள்ளி வீழச் செய்வீராக.


ஸ்ரீராமரின் கட்டளையினால் திருப்பி அனுப்பப்பட்டதினால் உண்டான பரதசத்ருக்னர்களுடைய மனக்கவலைகளை போக்கியவரே! உமது அஸ்த்திரமான பலம் பொருந்திய வாலால் எமது எதிரிகளை அடித்துத் தள்ளி தண்டிப்பீராக.


ஸஞ்ஜீவினி மலையை தூக்கி வந்ததினால் ஏற்பட்ட அரக்கர்களின் வலிமை குறைந்ததாக அவநம்பிக்கை உணரும் பொருட்டு காரணமாக இருந்து சுபத்தை அறிவித்தவரும். விழா விசேஷங்களின் முடிவுகளில் நிறைவான வைபவத்தினை ஏற்படுத்தி சுபசொரூபமாகவும் உள்ளவரே, உமது வாலால் எமது சத்ருகளை அடித்து தள்ளி தண்டிப்பீராக.


ஸ்ரீ சீதாதேவியின் பரிபூரண ஆசியினால் குறைவற்ற சமஸ்தலக்ஷணங்களோடு திகழ்பவரே. உமது வீரம்மிகுந்து ஆடி அசைகின்ற வாலால் எமது பயங்கர சத்ருகளை அடித்து சாய்த்து. அடியேனைக் காப்பீராக!


நல்லவர்கள் யாராகிலும் இந்தசுலோகங்களை அரசமரத்தடியில் அமர்ந்து, துதிக்கின்றார்களோ, அவர்களுக்கு சகலசத்ரு பீடைகள் நீங்கி ஸ்ரீ ஹனுமந்தராயரின் அருட்கடாக்ஷதிற்கு பாத்திரமாகி எல்லாவிதமான சம்பத்துக்களினால் நன்மைகள் பல பெற்று ஆனந்தமடைவீர்கள் என்பது நிச்சயம்.

Listen to this Tamil translation here : https://www.youtube.com/watch?v=mTfIaKrFh68

 


Hanuman Salisa Tamil translation| ஹனுமான் சாலிஸா தமிழில்

Hanuman Salisa Tamil translation| ஹனுமான் சாலிஸா தமிழில்



எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப்படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிகலகமான ஸ்ரீ ராமனின் களங்கமற்ற புகழை விளக்கத் தொடங்குகிறேன்.


எனது அறிவோ குறுகியது; வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன்; எனக்கு வலிமை, அறிவு. உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.
ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன்; வானரர்களின் தலைவன்; மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்!


நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர் பெற்றவன்.
மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன். இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. தீய சிந்தனைகளை விரட்டுபவன் நீ: நற்சிந்தனைகளின் நண்பன் நீ.
பொன்னிறம் பொருந்தியவன் நீ. சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.


உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.
நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன். உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது
நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன். ஸ்ரீ ராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.


https://www.youtube.com/watch?v=-5bvt9cEe4I


இறைவனின் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.


நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய்; மிகவும் பயங்கர உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.
மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தைக் நிறைவேற்றினாய்.


சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!
ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.


ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைக் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்த படியே கூறினார்.
ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள், சிவபெருமான், நாரதர் கலைமகள், ஆதிசேஷன்..


எமன், குபேரன், திசைக் காவலர்கள். கவிஞர்கள், புலவர்கள்- எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.
ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக் கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.


உனது அறிவுரைகளின் படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம். 

பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.


எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதில் நிறைவேறிவிடும்.

ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கியபடியே நீ கடலைக் கடந்து விட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.


ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.
உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகிறார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும்போது எதற்காகப் பயப்பட வேண்டும்?

உனது ஆற்றலைக் கட்டுப்படுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.


மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை, அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

மகாவீரன் என்னும் உனது திருநாமத்தைக் சொல்பவர்களின் அருகில் பூதங்களும் பேய்களும் வருவதில்லை.


உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது; துன்பம் விலகுகிறது.
தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.


மேலும் பக்தனின் ஆசைகள் நிறைவேறுவதுடன் அவன் அழியாக் கனியாகிய இறையனுபூதியையும் பெறுகிறான்.
சத்திய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகின்றது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.
நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.


எட்டுவிதசித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவர்க்கு அளிக்கும் ஆற்றலைசீதா தேவி உனக்கு அருளினாள்.
ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவனாகவே இருப்பாய்!


உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான்; எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன...
அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான்; அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.


அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.
எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.


ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே, எங்களுக்கு அருள் புரிவாயாக!
இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவன் உலகத் தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கிறான்.


இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவனுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார்; அவன் பரிபூரண நிலையை அடைகிறான்.
என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான் துளஸீதாசன் பிரார்த்திக்கிறான்.

துன்பங்களைப் போக்குபவனும் மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும் 


Listen to Hanuman Chalisa tamil translation here : https://www.youtube.com/watch?v=-5bvt9cEe4I&t=209s


தாமோதராஷ்டகம் தமிழில்| Damodarashtakam (Tamil translation)

 


A popular verse that celebrates Lord Krishna as Damodara is the Shri Damodarashtakam (from Padma Purana) ஸ்ரீ தாமோதராஷ்டகம்: ஸ்ரீ கிருஷ்ண துவைபாயண வியாசரால் எழுதப்பட்ட பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஸ்ரீ தாமோதராஷ்டகம் சச்சிதானந்த ரூபம் மற்றும் ஊஞ்சலாடும் குண்டலங்கள் காதில் கொண்ட கோகுலத்தின் ஒளியான பரமபுருஷர் தாமோதரருக்கு வணக்கங்கள், அன்னை யசோதை கடைந்து கொண்டிருந்த தயிர்ச் சட்டியை உடைத்து, அதில் இருந்த வெண்ணெய்யைத் திருடிக் கொண்டு, பின் பயந்து மர உரலில் இருந்து அவர் குதித்து ஓட அவரை விட வேகமாக ஓடி அவரைப் பின்புறமாக பிடித்த அன்னை யசோதையிடம் பிடிபட்ட பரம்பொருள் தாமோதரருக்கு என் வணக்கங்கள். அன்னையின் கரங்களில் அடிக்கும் தடியைக் கண்ட தாமோதரர் தன் தாமரைக் கரங்களால் கண்களை மீண்டும், மீண்டும் கசக்கிக் கொண்டு அழுகிறார். அவருடைய கண்களில் அச்சம் நிறைந்திருந்தது. சங்கின் வரிகள் போன்று மூன்று புரிகளை உடைய அவருடைய கழுத்தில் இருந்த முத்தாரம், அவர் அழுது கொண்டு மூச்சு விட்டதால் அசைந்து கொண்டிருந்தது. கயிற்றால் அல்ல, அவருடைய அன்னையின் தூய அன்பினால் கட்டப்பட்ட அந்தத் தாமோதரருக்கு என் வணக்கங்கள்..


https://www.youtube.com/watch?v=ZRKy3rcqe0w&list=PLs4TE8o6KSL8hMFbuFgJHksJeu_0OYO_k&index=1 இது போன்ற பால லீலைகளினால் கோகுல வாசிகளை ஆனந்தக் கடலில் அமிழ்த்தினார். தன்னுடைய ஐஸ்வர்யங்களை உணர்ந்து, அதில் ஆழ்ந்த பக்தர்களுக்கு, மாறாத தூய பக்தியால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்று காட்டிய அந்தத் தாமோதரருக்கு. அன்புடனும், பக்தியுடனும் மீண்டும். மீண்டும் நூற்றுக்கணக்கான வந்தனங்களைச் சமர்ப்பிக்கிறேன். தேவனே. நீவீர் மோட்சம் மற்றும் வைகுண்டம் முதற்கொண்டு எல்லாவித வரங்களையும் அளிக்க வல்லீர் ஆயினும், எவ்வித வரத்தையும் உம்மிடம் நான் வேண்டவில்லை. நாதா! விருந்தாவனத்தில் உள்ள உமது பால கோபால வடிவம், சதா என்னுடைய மனதில் நிலைக்கட்டும். மற்றவற்றால் என்ன பயன்? பசுவானே! கருநீலக் கூந்தலால் சூழப்பட்ட உம்முடைய தாமரை முகம், அன்னை யசோதையால் மறுபடியும், மறுபடியும் முத்தமிடப்பட்டு சிவந்து காணப்படுகிறது. பிம்பப் பழம் போல் உமது உதடுகள் சிவந்து காணப்படுகிறது. இத்தகைய திருமுகம் என்றென்றும் என் மனதில் நிலைக்கட்டும். ஆயிரக்கணக்கான வேறு வரங்களால் என்ன பயன்? நமோ தேவா! தாமோதரா, அனந்தா, விஷ்ணோ பிரபு என் மீது திருப்தி கொள்ளுங்கள். துக்க ஜால கடலில் மூழ்கி மிக வீழ்ந்து கிடக்கும் என்னை, கிருபா திருஷ்ட மழை பொழிந்து. அனுகிரஹித்து, அஞ்ஞானம் நிரம்பிய என்னுடைய கண்ணுக்கு காட்சி அளியுங்கள். ஓ தாமோதரா! மர உரலில் கட்டுண்ட குழந்தை வடிவத்தில், குபேரனின் பிள்ளைகளை நாரதரின் சாபத்திலிருந்து விடுவித்து, உமது பக்தர்கள் ஆக்கினீர்கள். அத்தகைய பிரேம பக்தியை எனக்கு அளித்தருளும்! வேறு எந்தவித மோட்சத்திற்கும் நான் ஆசைப்பட வில்லை. ஓ பிரபு தாமோதரா நான் முதலில் உமது உதரத்தை கட்டிய ஒளிநிறைந்த பிரகாசமான கயிற்றை வணங்குகின்றேன். பின் உமது உதரத்தை வணங்குகின்றேன். உமது உதரமோ அண்ட சராசரம் அனைத்தையும் அடக்கியுள்ளது. அடுத்ததாக உமக்கு மிக பிரியமான உமது அருமை ஸ்ரீமதி ராதா ராணியை வணங்குகின்றேன். இறுதியாக எண்ணற்ற லீலைகளைப் புரியும் பரமபுருஷரும் பரம் பொருளுமாகிய உம்மை வணங்குகின்றேன்.

Listen to this beautiful translation on YouTube : https://www.youtube.com/watch?v=ZRKy3rcqe0w

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...