Friday, November 19, 2021

Hanuman Salisa Tamil translation| ஹனுமான் சாலிஸா தமிழில்

Hanuman Salisa Tamil translation| ஹனுமான் சாலிஸா தமிழில்



எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப்படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிகலகமான ஸ்ரீ ராமனின் களங்கமற்ற புகழை விளக்கத் தொடங்குகிறேன்.


எனது அறிவோ குறுகியது; வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன்; எனக்கு வலிமை, அறிவு. உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.
ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன்; வானரர்களின் தலைவன்; மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்!


நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர் பெற்றவன்.
மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன். இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. தீய சிந்தனைகளை விரட்டுபவன் நீ: நற்சிந்தனைகளின் நண்பன் நீ.
பொன்னிறம் பொருந்தியவன் நீ. சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.


உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.
நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன். உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது
நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன். ஸ்ரீ ராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.


https://www.youtube.com/watch?v=-5bvt9cEe4I


இறைவனின் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.


நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய்; மிகவும் பயங்கர உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.
மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தைக் நிறைவேற்றினாய்.


சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!
ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.


ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைக் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்த படியே கூறினார்.
ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள், சிவபெருமான், நாரதர் கலைமகள், ஆதிசேஷன்..


எமன், குபேரன், திசைக் காவலர்கள். கவிஞர்கள், புலவர்கள்- எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.
ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக் கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.


உனது அறிவுரைகளின் படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம். 

பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.


எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதில் நிறைவேறிவிடும்.

ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தாங்கியபடியே நீ கடலைக் கடந்து விட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.


ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.
உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகிறார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும்போது எதற்காகப் பயப்பட வேண்டும்?

உனது ஆற்றலைக் கட்டுப்படுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.


மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை, அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

மகாவீரன் என்னும் உனது திருநாமத்தைக் சொல்பவர்களின் அருகில் பூதங்களும் பேய்களும் வருவதில்லை.


உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது; துன்பம் விலகுகிறது.
தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.


மேலும் பக்தனின் ஆசைகள் நிறைவேறுவதுடன் அவன் அழியாக் கனியாகிய இறையனுபூதியையும் பெறுகிறான்.
சத்திய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகின்றது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.
நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.


எட்டுவிதசித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவர்க்கு அளிக்கும் ஆற்றலைசீதா தேவி உனக்கு அருளினாள்.
ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவனாகவே இருப்பாய்!


உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான்; எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன...
அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான்; அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.


அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.
எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.


ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே, எங்களுக்கு அருள் புரிவாயாக!
இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவன் உலகத் தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கிறான்.


இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவனுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார்; அவன் பரிபூரண நிலையை அடைகிறான்.
என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான் துளஸீதாசன் பிரார்த்திக்கிறான்.

துன்பங்களைப் போக்குபவனும் மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும் 


Listen to Hanuman Chalisa tamil translation here : https://www.youtube.com/watch?v=-5bvt9cEe4I&t=209s


No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...