அண்டமெலாம் ஆக்கிவைத்து ஆட்டிவைக்கும் நாடகத்தை நன்றாக இயக்குகின்ற நாதன் அந்தஈஸ்வரனே நின்றாடும் உந்தன்மெய் ரூபமதை அறியாமல் திண்டாடும் போதினிலே உன்புகழை பாடலெனக் கொண்டாடிப் பாடிடவே யாருள்ளார் அன்னையளே? வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்
அண்டமதே திருமுகமாய் கொண்டவளின் நாமமதை அன்றாடம் உரைப்பார்க்கு காலபயம் கிடையாதே!
உந்தன் திருநாமமதை உச்சரிக்கும் நொடியினிலே சம்சாரக் கடல்தன்னை சரளமெனக் கடப்பாரே !
நின்நாமம் அதுபோதும் நெடும்பாடல் வேண்டிடுமோ?
வாராகி தாள் சரணம்! வார்த்தாளியே சரணம்
மாறாத நின்நினைவை மனதோடு கொண்டதினால் தீராத ஆனந்தம் கொண்டேனே அம்பிகையே !
கூராக உரோமங்கள் சிலிர்ப்புடனே நின்றிடவே ஓயாமல் இந்தநிலை தொடர்ந்திடவே வேண்டுகிறேன்!
தாயே!நீ தருவாயே! தயவுடனே வரமதனை !
வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்
இந்திரனும் மூவருமே உந்தன்மலர் பதங்களதை வந்தனங்கள் செய்கையிலே 'அவர்மகுடரத்தினங்கள்.
சுந்தரமாய் உந்தன்கரு மேனியிலே மின்னிடுமே! சிந்தையெலாம் நின்றவளே! துன்பமெலாம் தீர்ப்பவளே!
உந்தன் திருச் சேவையினை உளமாரச் செய்வேனே !
வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்
பந்தெனவே பூமியதை விளையாட்டாய் தாங்கியொரு விந்தையினை செய்தவராம். வாராக மூர்த்தியவர்
மேனியென ஆனவளே! மங்கலத்தின் வடிவினளே! ராணியென ஈசனவன் மேனியிலே இடமாகி
நானிலத்தை ஆள்பவளே ! நிலவணிந்த நாயகியே !
வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்
பெண்ணுருவம் கழுத்துவரை மின்னுகின்ற தங்கம்போல் ! கண்மூன்று, பன்றிமுகம் கரம்தாங்கும் சக்கரமே !
அன்னையளே ! வாராகி ! அன்புடனே ஒருமனதாய் உன்னைதினம் பணிவோரின் பதங்களதை இன்பமுடன்
விண்ணகத்து தேவரெலாம் வாழ்த்திடுவார் ஆசியுடன்!
வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்
எளியோன்யென் பாவமெலாம் கரைந்தோடிப் போனதுவே! வலியவளே ! வாராகி ! நின்சேவை செய்வதனால்…!
மன்னவரும், தேவர்களும், அசுரர்களும், நாகர்களும் என்னடியைப் பணிந்திடுவார் உன்பக்தன் என்பதனால்
என்கின்ற போதெனக்கு முக்தியதும் முக்கியமோ?
வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்
சிந்தையிலே உனைவைத்தார் சேராத இடமுண்டோ? வந்தனங்கள் செய்வார்க்கு வாய்க்காத பொருளுண்டோ?
நெஞ்சோடு வைத்தார்க்கு "ஆகாது" எனவுண்டோ? தஞ்சமென்று வந்தார்க்கு தோல்வியதும் இங்குண்டோ?
வாராகி தாள் சரணம் ! வார்த்தாளியே சரணம்
No comments:
Post a Comment