அளவிட முடியா அழகுடையாளே அடியவர்க்கென்றும் அருள்வாய் நீயே வளமுடன் நாங்கள் வாழ்ந்திட நீயே வரம் தர வேண்டும் அலைமகள் தாயே
தேவர்கள் அடைந்த இன்னல் விலக பாற்கடல் தன்னில் அவதரித்தாயே தூயவர் நெஞ்சில் குடியிருப்பவளே தொழுதிடுவோமே உன் மலர் பதமே
அல்லும் பகலும் உழைப்பவர் உயர ஆனந்த வாழ்வு பூமியில் மலர
தொல்லை துயரம் இருளென விலக திருமகள் தாயே நீயே அருள்க
குறுநகை பூக்கும் குடும்பத்தின் விளக்கே குறையில்லாத குன்றா அழகே நறுமலர் சூடிய நாயகி நீயே நலம் தரும் உன்னை வணங்கிடுவோமே
செந்நிறத் தாமரை பூவினில் அமர்ந்து செழிப்புடன் ஜகத்தை வைத்திருப்பவளே உன் தாள் பணிந்தால் ஊழ்வினை இல்லை உன்திருவருளே உயர்வின் எல்லை
அழகிய திருமால் மார்பினில் உறையும் அன்னையும் நீயே அருள் புரிவாயே மெழுகாய் உருகும் மனமுடையாளே மேன்மைகள் யாவும் நீயருள்வாயே
கரங்கள் நான்கு உடையவள் நீயே கருணை இதயம் கொண்டவள் நீயே வறுமை நீக்கும் வள்ளலும் நீயே வழிபடுவோமே அனுதினம் உன்னை
ராஜலக்ஷ்மி வடிவம் கொண்டு ராஜ்யம் எமக்கு அருள்பவள் நீயே தீபலக்ஷ்மி கோலம் கொண்டு தீவினை போக்கும் தெய்வமும் நீயே
சாந்தலக்ஷ்மி உருவினில் நீயே சாந்தி தந்து அருள் செய்வாயே ஆதிலக்ஷ்மி தோற்றம் கொண்டு அகிலம் ஏழும் காப்பவள் நீயே
வீரலக்ஷ்மி தரிசனம் தந்து வெற்றிக்கு வழியைக் காட்டிடுவாயே கிரகலக்ஷ்மி பெயரினைத் தாங்கி மனைகள் தோறும் தங்கிடுவாயே
வித்யாலக்ஷ்மி நீயே அன்றோ வித்தைகள் பயில செய்திடுவாயே விஜயலக்ஷ்மி வடிவாய் வந்து எதிலும் ஜெயமே விளைந்திடச் செய்வாய்
தான்யலக்ஷ்மி வடிவாய் நின்று பஞ்சம் பசியைப் போக்கிடும் தாயே தனம் தரும் லக்ஷ்மி வடிவம் நீயே தரணியை செழிக்க வைத்திடுவாயே
சௌந்தர்யலக்ஷ்மி உருவினில் நீயே பேரழகுடனே ஜொலிப்பவள் நீயே சௌபாக்யவதியாய் என்றும் எமக்கு சகல நலன்களும் நீ தருவாயே
நரசிம்மரோடு ஒன்றாய் இணைந்து லக்ஷ்மி நரசிம்மர் நாமம் பெற்றாய் திருவடி பணியும் பக்தருக்கெல்லாம் குறையா செல்வம் தருகின்றாயே
திரு எனும் நாமம் உனக்கே பொருந்தும் உன்னுடன் மாலவன் ஒன்றாய் சேர திருமால் என்றே அழைத்தடலானார் நிறைவுடன் வாழ நீயருள்வாயே
அழகுடன் தைரியம் அமைந்திடும் இடத்தில்
அம்மா நீயும் ஆட்சி செய்வாயே அடக்கமும் பக்தியும் நிறைந்தவர் நெஞ்சில் நீங்காதென்றும் நீயிருப்பாயே
காலம் தன்னை கண்ணாய் நினைப்போர் கடமை செய்வதை பொன்னாய் மதிப்போர் ஞாலம் தனிலே சிறப்புகள் காண நாளும் நீயே வரமருள்வாயே
ஐம்புலன் தன்னை அடக்கிடுவோரை அன்னை நீயும் அரவணைப்பாயே த்யானம் செய்வோர் வேதம் படிப்போர் யாவரும் மகிழ ஆதரிப்பாயே
கணவனை மதிக்கும் குலமகள் வாழும் குடிசையில் நீயும் கொலுவிருப்பாயே பெரியவர் தம்மை துதிக்கும் நெஞ்சில் பிரியாதென்றும் நிறைந்திருப்பாயே
சந்தனம் குங்குமம் இவற்றுடன் நீயே ஒன்றென கலந்து உறைந்திருப்பாயே வந்தனம் செய்து வழிபடுவோரை வழி வழியாக வாழவைப்பாயே
வாசனை மிகுந்த மலர்களை சூடி தலைமுடி கலையாதிருப்போர் இடத்தும் நேசம் கொண்டு நீயிருப்பாயே நெஞ்சம் மகிழ்ந்து நீயருள்வாயே
திருமகள் உந்தன் அருளினை பெறவே தினமும் உன்னை வணங்கிடுவோமே எங்கள் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் நிலையாய் இருக்க வேண்டிடுவோமே
ஸ்ரீ சூக்தம் என்னும் வேள்வி செய்து அன்னை உன்னை மகிழ்விப்போமே கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி கனிந்தருள் செய்ய கைதொழுவோமே
வில்வ மரத்தின் கீழே அமர்ந்து ஹயக்ரீவ மந்த்ரம் உச்சரிப்போமே செல்வம் செழிக்க எம் குலம் தழைக்க திருவடி பணிந்து வணங்கிடுவோமே
சம்பத் கௌரி விரதம் இருந்து சௌபாக்யம் உன்னால் பெற்றிடுவோமே மங்கள கௌரி விரதமிருந்து மலைபோல் நவநிதி அடைந்திடுவோமே
விருத்த கௌரி விரதம் இருந்து வேண்டிய செல்வம் பெற்றிடுவோமே கஜ கௌரி விரதம் கடைபிடித்தாலே கவலை நீக்கி நீயருள்வாயே
லலிதா கௌரி விரதம் இருந்து கோரிக்கை பலவும் உன்னிடம் வைப்போம் துளசி கௌரி விரதம் இருந்து துயரம் விலகி வளம் பெறுவோமே
கேதாரி விரதம் இருந்தால் நீயும் கேட்டதை எமக்கு அன்புடன் தருவாய் பத்ரி கௌரி விரதம் இருந்தால் பக்தரைத் தேடி நீயே வருவாய்
சௌபாக்ய கௌரி லாவண்ய கௌரி சம்பா கௌரி விரதம் இருப்போம் சகல நலன்களும் உன்னால் அடைவோம்
வரலக்ஷ்மி விரதம் நாங்கள் இருந்து உன்னை வணங்கி வளமை பெறுவோம் நிரந்தரமாக எங்கள் நெஞ்சில் நீயும் தங்கிட உன்னைப் பணிவோம்
ஒவ்வொரு வெள்ளிக் கிழமை தோறும் உன் பெயர் சொல்லி விரதமிருந்தால் ஒப்பில்லாத செல்வம் தந்து உலகில் எம்மை உயர்த்திடுவாயே
காலையில் எழுந்து வாசலை பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு உந்தன் நாமம் சொல்லிய படியே திருவிளக்கேற்றி கை குவிப்போமே
புத்தம் புதிய பூக்களினாலே அம்மா உன்னை பூஜிப்போமே சித்தம் குளிர்ந்து நீயும் மகிழ்ந்து சேயாம் எமக்கு அருள்புரிவாயே
சர்க்கரை பொங்கல் வடையுடன் உனக்கு பாயசம் வைத்து படையல் போட்டு அக்கறையுடனே எங்களை காக்க அன்னலக்ஷ்மி உனை வணங்கிடுவோமே
கிழக்கினை பார்த்து உணவு உண்ணும் வழக்கம் இருந்தால் உனக்கது பிடிக்கும் மஞ்சள் பூசி குங்குமம் இட்ட மங்கையர் வடிவாய் நீயே இருப்பாய்
பூவும் போட்டும் சூடிய மாதர் புன்னகை தவழ வலம்வரும் வீட்டில் கேட்கும் வரங்கள் எளிதாய் கிடைக்கும் திருமகள் உந்தன் அருளே நிலைக்கும்
நயமுடன் பேசும் நல்லோர் வாக்கில் நாயகி நீயே குடியிருப்பாயே வன்சொல் விடுத்து இன்சொல் பேச வாழ்வில் ஆயிரம் வளம் தருவாயே
அன்றாடம் தனது கடமை தன்னை குறையில்லாமல் செய்பவர் இடத்தில் அன்போடு நீயும் தங்கிடுவாயே வேண்டிய செல்வம் வழங்கிடும் தாயே
மனிதனுக்குரிய வாழ்நாள் கடமை பற்பல உண்டு என்பதை அறிவோம் இன்றியமையா ஐந்தினை இங்கே நெஞ்சினில் நிறுத்தி நினைவினில் கொள்வோம்
இறைவன் திருவடி சேர்ந்தவர் தம்மை மறவாது தினமும் வணங்குதல் வேண்டும் இஷ்ட தெய்வம் மகிழ்ந்திடும் வண்ணம் பூஜைகள் செய்து பணிந்திட வேண்டும்
உறவுகள் தம்மை அரவணைத்திடவும் உளம் கோணாமல் உரையாடிடவும் மறவாதிருக்கும் அடியார் வீட்டில் மஹாலக்ஷ்மி தான் தங்கிடுவாளே
சுற்றம் தன்னை பேணிடவேண்டும் நெறிதவறாமல் தன்னையும் காத்து பற்றுதலோடு இருப்பவர் தன்னை பாக்யலக்ஷ்மி தான் விரும்பிடுவாளே
பூமியில் நீயும் தங்கிட தானே திருத்தலம் ஒன்றை தேர்ந்தெடுத்தாயே திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் உண்டு உந்தன் கோவில்
திருவெள்ளறை எனும் நாமம் கொண்டு வருவோர்க்கெல்லாம் அருள்வாய் நீயே மூலவர் இங்கே செந்தாமரைக் கண்ணன் முகமலர்ந்திங்கே வீற்றிருப்பாரே
செண்பகவல்லி பங்கஜவல்லி தாயார் இருவர் தயை புரிவாரே அன்பரின் வாழ்வில் அல்லல் விலக ஆலயம் வந்து உன்னை தொழுவார்
கோவில் நிலத்தின் பத்திரம் கூட தாயே உந்தன் பெயரில் தானே உற்சவம் பூஜை திருவீதி உலா எதிலும் உனக்கே முதலிடம் இங்கே
பிறவியின் பயனை பெற்றிடத் தானே ஒருமுறையேனும் உன் தலம் வருவோம் கருணை வடிவாய் உன் முகம் கண்டு கவலை நீங்கி களிப்பினைப் பெறுவோம்
தேவரும் அசுரரும் அமிர்தம் பெறவே பாற்கடல் தன்னை கடைந்திடலானார் மத்தாயிருந்த மந்தர மலையோ நிலைகொள்ளாமல் தத்தளித்ததுவே
இதனைக் கண்ட நாராயணனும்
கூர்மவதாரம் எடுத்திடலானார்
கடலின் உள்ளே ஆழம் சென்று தோளில் தாங்கி நிலைபெறச் செய்தார்
அப்போது அங்கே தாமரை மலரில் அம்மா நீயும் அவதரித்தாயே திருப்பாற்கடலில் விலகிடும் இடத்தில் ஸ்ரீஹரி விஷ்ணு மறைந்திடலானார்
அவரைத் தேடி அன்னை நீயும் அங்கு சென்றாயே அன்புடன் தானே இருவரும் அங்கே திருவிளையாடல் புரிந்தீரன்றோ அடியார் வியக்க
அங்கும் இங்கும் இருவரும் ஒடி ஆடல் புரிந்த காரணத்தாலே தீவினில் உள்ள எள் செடியாவும் எள்ளை உதிர்த்து எண்ணெய் ஆக்கின
திலம் எனச் சொன்னால் எள் என்றாகும் அதனால் தானே தீவின் பெயரே திலத்தீபமென்றே ஆனது இன்று முன்னோர் சொன்ன கதை பல உண்டு
இறுதியில் நீயே மாலவன் தனக்கு மாலை சூட்டி மனம் புரிந்தாயே அதுவே இன்றைய தீபாவளியென ஆன்றோர் எமக்கு எடுத்துரைத்தாரே
எள்ளால் விளைந்த எண்ணெய் நதியில் இருவரும் நீராடி கழித்ததாலே மானிடர் நாங்கள் நல்லெண்ணெய் தேய்த்து மகிழ்ந்தே குளித்து கொண்டாடுவோமே
புத்தம் புதிய ஆடை உடுத்தி ஸ்ரீதேவி உந்தன் திருவடி பணிவோம் தொட்டது துலங்க நீயருள்வாயே தொடர்கதையாக வளம் தருவாயே
லக்ஷ்மி தேவி அம்மா வருக லட்சியம் அடையத் துணையாய் வருக
அஷ்ட ரூபிணி இணைந்தே வருக அழகின் உருவே அன்பாய் வருக
உடல் பிணி கவலை யாவும் தடுத்து கவசம் போலே எம்மை காக்க தடைகளை அகற்றி தைரியம் தந்து நலமுடன் எங்களை நீயே காக்க
உன் திருவடியே உதவும் சரணம் உலகோர் போற்றும் திருமகள் சரணம் பொன்னும் பொருளும் குவிப்பாய் சரணம் பொன்மலர் பாதம் பணிந்தோம் சரணம்
No comments:
Post a Comment