அலை கடல் போலவே சங்கம் முழங்கி படையுடன் வந்து போர் செய்த ,
அடமிகு சூரன் சிரமதைத் துணித்த ஆறெழுத்துண்மை பொருளோனே!
திடமுடன் பணிவார் சித்தம் இனித்திடும் தேனே தெள்ளமுதப்பெருக்கே !
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடி வளர் குமரேசா !!
தந்தையான ஜகதீஸருக்கு உயர் மந்திரம் அதனை விந்தையாக
சிந்தை குளிர உபதேசம் செய்த சுந்தர மன்மத சுகுமாரா !
வெந்துயர் வாத பித்தமொடு பல வயிற்றினில் உறைந்திடும் பிணி தீர்ப்பாய்
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடி வளர்குமரேசா !!
ரவிகுல தசரன் மகனாய்வந்து ராவணனை
யொழித்தாதரித்த,
புவிபுகழ் கோதண்டராமன் மனம் மகிழ் புனித மருமகன் ஆனவனே! வெவ்வினை தீர்த்திடும் விக்ன வினாயகன் சோதர ஞானக்ருபாகரனே
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடி வளர் குமரேசா !!
முருகனுக்கிணையாய் மற்றொரு தெய்வம் மூவுலகம் தனில் உண்டோ சொல் !
தருணம் அறிந்து மெய் அடியவர்க்கு அருள் தந்தருள் புரியும் தயாபரனே !!
உருகி குகா என்று ஒருதரம் உரைப்பவர் உளம்தனில் நின்றருள் நடம் புரியும்
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!
வாசமலர் கொண்டு நின் திருமலரடி பூஜித்தனுதினம் புகழ்ந்திடவே,
நேசமுடன் பவ பாசம் அகன்றிட, நீவரம் மீதெனக்கு ஈந்தருள்வாய் !
காசினி அனைத்தும் காத்தருள் புரியும் கருணை வாரிதி நீயன்றோ
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடிவளர் குமரேசா !!
திருப்பரங்குன்றம், திருத்தணிகை, உயர் சுவாமிமலை பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திரு ஆவினன்குடி முதல் குன்றுகளில் உறை குமரோனே!
மறலியின் தூதுவர் கொடுமையுடன்வந்து வருத்திடாதிருக்க நீ வரம் தருவாய்
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடிவளர் குமரேசா !!
அல்லல் படுத்தும் பலபல பேய்கள், பில்லியொடு பல சூனியங்கள்,
நில்லாது அகன்றிட நீ அருள் புரிவாய் நிகிலம் துதிக்கும் ஸ்ரீமாநே,
வல்லவனே மயில்வாகனனே, திறல் தாரகாசுரன் சிரம் துணித்தாய்,
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!
அம்பிகை சாம்பவி அகிலாண்டேஸ்வரி, துன்பம் தவிற்கும் ,
சிவகௌரி, ஆதிபராசக்தி அருமை பாலா, அன்பர்தமக்கு அனுகூலா !
வம்புசெய் க்ரௌஞ்ச மலை உரம் பிளந்திட , வடிவேல் தன்னை விடுத்தோனே ,
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!
நெஞ்சம் கனிந்து நினைப்பவர் தம்முன், செஞ்சிலம்பணிந்து மாமயிலேறி,
அஞ்சாதே என்று ஆறுதல் சொல்ல , குஞ்சரி உடனே வருவாயே !
தஞ்சமென வந்த இந்த்ராதி தேவர் வெஞ்சிறை அகற்றி அருள் செய்தாய்
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி
வளர் குமரேசா !!
பெருங்கடல் தன்னைக் கரம்தன்னில் ஏந்தி அருந்திய கும்ப முனிவருக்கு ,
அருமையுடந் உபதேசமது செய்த , பெருமைமிகுந்த பெருமானே !
மறைகள் நான்கும் தேடிக்காணாத மாமகள் வள்ளி மணவாளா ,
ஜெய ஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!
ரத்தின கதிர்மலி மௌலி யிலங்கிட, சக்தியருள் வடி வேலுடனும் ,
ரத்தினக் கோவை மார்பினில் விளங்கிட , சித்தர் அமரர் துதித்திடவே ,
பக்தர்கள் குறைதனை தீர்த்தருள் புரிய இத்தருணம் வந்து ஆதரிப்பாய்
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!
விருப்போடு சொன்ன முருகன் துதி மாலை பன்னிரண்டும், மறவாது அனுதினம் பாடிக்கொண்டாடி துதித்திடும் அன்பர் சிந்தைதனை அறிந்து நல்லவரங்களும் மிகவேதந்து ஆதரித்தருள்வாய் தயாபரனே
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!
No comments:
Post a Comment