அன்புக்கரங்களில் சக்கரம், கதையும் அழகுச் சங்கும் தாங்கியவளாம்
மாயா சக்தியை தோற்றுவிக்கும் மஹாமாயை அவளாவாள்
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியை வணங்குகின்றேன்.
முதலும் இல்லா முடிவும் இல்லா முழுமுதற் கடவுள் நிச்சயம் நீ !!
மூவுலகுக்கும் ஆதாரமாய் நிற்கும் மூலப் பொருளும் பத்மினி நீ !!
அலைகடல் துயிலும் திருமால் விரும்பும் அற்புதப் பொக்கிஷம் தேவி நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
எங்கும் நிறைவாள் எதற்கும் சாட்சி என்னுயிர் நீயே ஸ்ரீலக்ஷ்மி!!
தூய நன் மனதில் குடி கொண்டருள்வாள் மன்னுயிர் மாதா ஸ்ரீலக்ஷ்மி!!
சாந்தரூபிணி சகலமும் அறிவாள் பாற்கடல் தந்த ஸ்ரீலக்ஷ்மி!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்
விழிகள் தாமரை, அமர்வதும் தாமரை, நிறமும் தாமரை, தாமரை நீ!!
மாதவன் கருணை உயிர்களுக்களித்திடும் மங்கல உருவாம் அம்பிகை நீ!!
முக்தியளித்திடும் மூலமும் நீயே மூவுலகும் தொழும் அற்புதம் நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
தூயநல் ஆடை அணிந்தே அருள்வாய், தூயவள் நீயே திருமகளே!!
திறமிகு கருடனைக் கொடியில் கொண்டாய் திருவருள் நீயே திருமகளே!!
அலங்கார ரூபிணி, அன்புக் கடல் நீ, கருணை பொழிவாய் திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
துக்கக் கடலில் மூழ்கிடுவோரின் துயரம் தீர்ப்பாய் பொன்மகளே!!
அரவினில் துயிலும் அன்பன் மனதில் அகலாதுறையும் அலைமகளே!!
பகவதி நீயே பாக்கியம் தந்திடும் பரம்பொருள் நீயே திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்
சித்தியும் புத்தியும் தந்திடுவாய் நீ சிறப்புகள் தருவாய் அருளமுதே!!
இகபர சுகமும் இனிதான ஆயுளும் இணையாய் அருள்வாய் இன்னமுதே!!
மழலை பாக்கியமும், மனம்நிறை வாழ்வும் மகிழ்ந்தே தருவாய் தெள்ளமுதே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
பொருளை அருளும் பொற்செல்வி, புகழும் அருள்வாய் தாயே நீ!!
ஏழ்மை அகற்றி ஏற்றம் தருவாய் என் துணை வருவாய் தாயே நீ!!
வைபவம் அருளும் வைபவ லக்ஷ்மி வளங்கள் தருவாய் தாயே நீ !!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.
நல்லன அருளும் நமனாஷ்டகம் இதை நாளும் துதித்து நலம் பெறுவோம்!!
பக்தியாய் படித்தாலும் படிப்பதைக் கேட்டாலும் பவவினை தீரும் சுகமடைவோம்!!
நிதமும் துதித்து நமஸ்கரித் தெழுந்தால் நிலமெல்லாம் போற்றும் நிச்சயமே!!
நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் திருமகள் அருள்வாள் சத்தியமே!!
No comments:
Post a Comment