Sunday, September 1, 2024

Veda Sara Shiva Stotra Tamil| வேத ஸார சிவ ஸ்தோத்திரம்‌ தமிழ்

அனைத்து தெய்வங்களுக்கும் மேலான மஹாதேவா, 'பசு' என்று அறியப்படும் அனைத்து ஆத்மாக்களுக்கும் அதிபதியான ஆத்மநாதா, அனைத்துயிரினங்களின் பாபங்களை எல்லாம் நாசம் செய்யும் பாபவிநாசா, முதன்மையான பிரபுவே, கஜேந்திரன் என்னும் யானையின் தோலை ஆடையாகத் தரித்தவரே, அடர்ந்து வளர்ந்து மகுடம் போல் தங்கள் தலைமேல் அமைந்த ஜடாமுடியிலிருந்து ஓடும் கங்கையைக் கொண்டவரே, காமதேவனின் பாணத்தை வென்றவரே, தங்களை மானசீகமாக வணங்குகிறேன்.

தேவர்களுக்கெல்லாம் ஈசனான மஹேசனே! தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவரே! அனைத்துயிரினங்களுக்கும் தலைவரே! பரந்த பிரபஞ்ச வெளியெங்கும் எதிலும் வியாபித்திருக்கும் விஸ்வநாதா! திருமேனியெங்கும் திருநீறு அணிந்தருளுபவரே! சந்திரன், சூர்யன் மற்றும் அக்னி சொரூபமான மூன்று த்ரிநேத்திரங்களை உடையவரே! எப்பொழுதும் தன்னை மறந்து மோன நிலையான ஆனந்த லயத்தில் ஆழ்ந்திருப்பவரே தங்களை வணங்குகிறேன்.

பர்வதங்களின் தலைவனான பர்வதராஜனே, திருக்கைலாயத்தின் கணங்களுக்கு அதிபதியான கணநாதா, தேவர்களைக் காக்கவென பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த, வாசுகி என்னும் நாகத்தின் ஆலகால‌ விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீ அருந்தியவுடன், தேவி பார்வதி தன் திருக்கரத்தை வைத்து, அந்த விஷத்தை உனது திருக்கழுத்திலேயே நிலைபெற செய்ததால் கழுத்து நீல நிறமாக உருமாற நீலகண்டன் எனும் நாமகரணம் பெற்றவரே! ரிஷபத்தை வாகனமாக கொண்டவரே,சத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட உருவத்தை கொண்டவரே, அனைத்திற்கும் மூலமான ஆதிநாதா, திருநீறால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களை உடையவரே, தேவி பவானியை அர்த்தாங்கினியாகக் கொண்டவரே, ஐந்து திருமுகங்களை உடைய நமசிவாயா, தங்களை வணங்குகிறேன்.

பார்வதி தேவியின் மணாளனே!, சம்போ சதாசிவா!, தலையில் பிறைச்சந்திரனை அணிந்தவரே, மகிமை வாய்ந்த ஈசனான மஹேசா, ஜடாமுடியுடன் திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்தியவரே, எப்பொழுதும் தனிமையில் தியானத்தில் அமர்ந்திருந்தாலும், எங்கும், எதிலும் வியாபித்திருப்பவரே, பூர்ணமான பிரபுவே, தாங்களே எழுந்தருளி எங்களுக்கு அருளவேண்டும்.

அனைத்திற்கும் மேலான பரம்பொருளே, பிரபஞ்சத்தின் முதல் ஆதாரமே, ஆசை எனும் மாயையிலிருந்து விடுபட்டவர் என்றதால் ஈசன் எனும் திருநாமம் கொண்டவரே, உருவமில்லாதவரே, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தியானத்தின் மூலமாக அறியத் தக்கவரே, இப்பிரபஞ்சமானது தங்கள் சித்தப்படி படைக்கப்படுகிறது, தங்களால் காக்கப்பட்டு திரும்பவும் தங்கள் சித்தப்படி தங்களிடமே லயமடைகிறது.

நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதத்திற்கு அப்பாற்பட்டவரே, தாங்கள் செயலும் அல்ல சோம்பலும் அல்ல, வெப்பமும் அல்ல தண்மையும் அல்ல, இடமும் அல்ல கற்பனையும் அல்ல, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்று மும்மூர்த்திகளாக வடிவெடுத்தாலும் உண்மையில் ஒரு வடிவமும் இல்லாத பரம்பொருளே தாங்கள். அத்தகைய மகிமை வாய்ந்த ஈசனான தங்களை வணங்குகிறேன்.

தேவர்களில் உன்னதமானவரான சிவனிடம் புகலிடம் தேடித் தஞ்சம் அடைகிறேன். அவர் அழிவற்றவர்,  நிலையானவர், எல்லா காரண காரியங்களுக்கும் காரணமானவர், இணையில்லாதவர், ஒளிக்கெல்லாம் ஒளியான‌ ஞான ஒளியானவர், விழிப்பு, கனவு மற்றும் ஆழ் உறக்கம் எனும் மூன்று நிலைகளையும் கடந்து நின்றவர். அறியாமை என்னும் இருளுக்கும் அப்பால் இருப்பவர், ஆதியும், அந்தமும் இல்லாதவர், பாவனமான‌  நிர்குணமானவர், இரு வேறு நிலைகளைக் கடந்த ஒரே பரம்பொருளானவர், அவரை வணங்குகிறேன்.

இப்பிரபஞ்சமே உருவாக வடிவெடுத்தவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம், விழிப்பு நிலையில் ஆனந்த லயமே முழு உருவாக வடிவெடுத்தவருக்கு நமஸ்காரம், தவம் மற்றும் தியானத்தினால் அறியத் தக்கவருக்கு நமஸ்காரம், வேத நூல்களில் வகுத்துள்ள அறிவுப் பாதையின் மூலமாக அறிய முடிந்தவருக்கு நமஸ்காரம்.

ஹே பிரபு ! திரிசூலத்தை திருக்கரங்களில் ஏந்தியவரே, பிரபஞ்சத்தின் அதிபதியான விஸ்வநாதா, மஹாதேவரே, நன்மையின் ஆதாரமே, த்ரிநேத்திரங்களை உடைய உன்னதமான பகவானே, பார்வதி மணாளா, அமைதியே வடிவானவரே, காமனையும் திரிபுரங்களையும் எரித்தவரே, அசுரர்களின் பகைவரே, ஈடு இணையற்றவரே, தாங்களே பக்தர்களின் நாடுதலுக்கும், போற்றுதலுக்கும், புகலுக்கும் சிறந்தவர்.

நன்மையின் வடிவான சம்போ மஹாதேவா, திரிசூலத்தை கரங்களில் ஏந்தி இருந்தாலும் கருணையே வடிவானவரே, தேவி கெளரியின் பதியானவரே, அனைத்து ஆத்மாவிற்கும் இறைவனே, பந்தம், பாசம் என்னும் தளைகளிலிருந்து ஆத்மாக்களை விடுவிப்பவரே, வாரணாசி என்று அழைக்கப்படும் காசியின் தலைவனே, இவ்வுலகமே தங்கள் திருவிளையாடல் அன்றோ? தங்களின் அளவில்லாத அபரிமிதமான பெருங்கருணை, இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து பின்னர் மீண்டும் தங்களில் இணைத்துக்கொள்கிறது.

பிரபு ! அனைத்திற்கும் மூலாதாரமே, காமனை எரித்தவரே, ஜகதீசா, கருணை வடிவினனான கருணாகரனே, பாபங்களை அழிப்பவரே, இப்பிரபஞ்சம் தங்களிலிருந்தே பிறந்து, நிலைபெற்று, பின்னர் தங்களில் லயமாகிறது. பிரபஞ்சத்தின் இருக்கும் அசையும் மற்றும் அசையா வஸ்துகளின் சங்கமமாக லிங்க உருவில் வடிவெடுத்தவரே தங்களை வணங்குகின்றேன்.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...