நீர் வாழ் உயிரினங்களிடம் இருந்தும், வருணனின் பாசக் கயிற்றில் இருந்தும், மத்ஸ்ய மூர்த்தி என்னைக் காக்கட்டும்.
நிலத்தில், குள்ள வடிவமெடுத்த வாமனர் என்னைக் காக்கட்டும். வானில், விஸ்வரூப வடிவமெடுத்த திரிவிக்கிரமர் என்னைக் காக்கட்டும்.
பயணிக்க கடினமான இடங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் போர் முனை போன்ற இடங்களில், அசுர பத்தினிகளின் கர்ப்பம் கலையும் படியாகவும், சகல திசைகளிலும் எதிரொலிக்கும் படியாகவும், மகா அட்டகாசமாக சிரித்த, அசுரத் தலைவனின் (ஹிரண்யகசிபுவின்) எதிரியான பகவான் நரசிம்மர் என்னைக் காக்கட்டும்.
வீதிகளில், தன்னுடைய சொந்த தந்தங்களால் பூமியை நீரிலிருந்து உயர்த்திய யக்ஞ கல்பராகிய பகவான் வராஹர் என்னை காக்கட்டும். மலைச் சிகரங்களில், பரசுராமர் என்னைக் காக்கட்டும். அன்னிய தேசங்களில், பரதனின் மூத்த சகோதரரான பகவான் ராமர், அவருடைய சகோதரர் லஷ்மணனுடன் என்னைக் காக்கட்டும்.
உக்ர-தர்மத்தாலும் மதிமயக்கத்தாலும் நான் செய்த அனைத்து தவறுகளில் இருந்தும், பகவான் நாராயணர் என்னைக் காக்கட்டும். தற்பெருமையில் இருந்து, நரர் என்னைக் காக்கட்டும். யோகப் பாதையில் இருந்து நான் தவறி விடாமல், யோக நாதராகிய தத்தாத்ரேயர் என்னைக் காக்கட்டும். கர்ம பந்தத்தில் இருந்து, குண ஈசராகிய கபிலர் என்னைக் காக்கட்டும்.
காம தேவனிடம் இருந்து, சனத் குமாரர் என்னைக் காக்கட்டும். தெய்வ குற்றங்களில் இருந்து, ஹயக்ரீவர் என்னைக் காக்கட்டும். புருஷ அர்ச்சனக் குற்றங்களில் இருந்து, தேவரிஷி நாரதர் என்னைக் காக்கட்டும்.
எல்லையற்ற நரகங்களில் வீழ்வதில் இருந்து, கூர்ம பகவான் என்னைக் காக்கட்டும்.
பத்தியமற்ற உணவு வகைகளால் உண்டாகும் துன்பங்களில் இருந்து, பகவான் தன்வந்தரி என்னைக் காக்கட்டும். இருமைகளினால் உண்டாகும் பயத்தில் இருந்து, முற்றிலும் ஜிதாத்மாவான ரிஷபதேவர் என்னை விடுவிக்கட்டும். ஜனங்களால் உருவாக்கப்படும் இகழ்ச்சி மற்றும் உலக துயரங்களில் இருந்து, பகவான் யக்ஞர் என்னைக் காப்பாற்றட்டும். குரோதம் மிகுந்த பாம்புகளிடம் இருந்து, பகவான் பலராமர் சேஷனாக என்னைக் காப்பாற்றட்டும்.
சாஸ்திர அறியாமையில் இருந்து, பகவான் துவைபாயன வியாசர் என்னைக் காக்கட்டும். பாஷண்டிகளால் உருவாக்கப்படும் புத்தி மயக்கத்தில் இருந்து, புத்த பகவான் என்னைக் காக்கட்டும். கலியுக களங்கங்களில் இருந்து, தர்மத்தை நிலை நிறுத்த வரும் கலியுக அவதாரமான கல்கி பகவான் என்னைக் காக்கட்டும்.
நாளின் முதல் பகுதியான அதிகாலையில், பகவான் கேசவன் தன்னுடைய கதையால் என்னைக் காக்கட்டும்.
நாளின் இரண்டாம் பகுதியில், வேணு காணம் இசைக்கும் பகவான் கோவிந்தன் என்னைக் காக்கட்டும்.
நாளின் மூன்றாம் பகுதியில், சகல சக்திகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகவான் நாராயணன் என்னைக் காக்கட்டும். நாளின் நான்காம் பகுதியான மத்தியானத்தில், பகைவர்களை வெல்ல சக்ராயுத பாணியாக விளங்கும் பகவான் விஷ்ணு என்னைக் காக்கட்டும்.
நாளின் ஐந்தாம் பகுதியில், உக்கிரமான சாரங்க வில்லை ஏந்தி இருக்கும் பகவான் மதுசூதனன் என்னைக் காக்கட்டும். நாளின் ஆறாம் பகுதியான சாயந்தரத்தில், பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரானகத் தோன்றும் பகவான் மாதவன் என்னைக் காக்கட்டும்.
இரவின் முதல் பகுதியில், பகவான் ஹிருஷிகேசர் என்னைக் காக்கட்டும். இரவின் இரண்டாம் பகுதியான அர்த்த- ராத்திரியிலும் இரவின் மூன்றாம் பகுதியான நசீதத்திலும், பத்மநாபர் மட்டும் என்னைக் காக்கட்டும்.
இரவின் நான்காம் பகுதியான அபர ராத்திரியில், ஸ்ரீவத்சத்தை தன் மார்பில் தாங்கிய அந்த ஈசன் என்னைக் காக்கட்டும்.
இரவின் ஐந்தாம் பகுதியான ப்ரதியூசாவில், வாளை கையில் ஏந்திய ஜனார்தனன் என்னைக் காக்கட்டும்.
இரவின் ஆறாம் பகுதியான அதிகாலையில், தாமோதரன் என்னைக் காக்கட்டும்.
சந்தியா நேரங்களில், கால மூர்த்தியான விஸ்வேஸ்வர பகவான் என்னைக் காக்கட்டும்.
காற்றின் சகாவான அக்கினி எவ்வாறு காய்ந்த சருகுகளை எரித்து அழிகின்றதோ, அது போல, பகவானால் இயக்கப்படும் கூர்மையான விளிம்புகளைக் கொண்ட பகவானின் சுதர்சன சக்கரம், யுக முடிவில் உண்டாகும் ஊழிக் கால நெருப்பு போல, எல்லா திசைகளிலும் பரவி எதிரிகளின் சைன்யத்தை உடனே எரித்து அழிக்கட்டும். எரித்து அழிக்கட்டும்.
பட்டாலே இடி போல் தீப்பொறி பறக்க வைப்பதும், வெற்றி கொள்ள முடியாதவரான பகவானுக்கு பிரியமானதும் ஆகிய கதாயுதம், எதிரிகளான குஸ்மான்ட, வைனகாயக, யக்ஷ, ராக்ஷ, பூத, மற்றும் கிரகங்கள் ஆகியவற்றின் தீய சக்திகளை கண்டந் துண்டமாக வெட்டிப் போடு. அவர்களை எல்லாம் தூள் தூளாக்கி விடு.
பகவான் கிருஷ்ணரின் சுவாசக் காற்றினால் முற்றிலும் நிரப்பப்பட்டு, அவர் கைகளில் திகழும் பாஞ்சஜன்யமே, மிகப் பயங்கரமான ஓசையை நீ எழுப்பி, எதிரிகளான ராக்ஷஸர்கள், பிரமதர்கள், பிரேதங்கள், மாத்ருக்கள், பிசாசுகள், கோர திருஷ்டி கொண்ட பிரம்ம ராக்ஷசர்கள் ஆகியவர்களின் இதயங்களை நடுங்கச் செய்து அவர்களை விரட்டி அடிப்பாயாக.
பகவானால் பயன்படுத்தப்படும் கூரிய விளிம்புகளை உடைய வாளே, நீ என்னுடைய எதிரிகளின் சைன்யத்தை கண்டந்துண்டங்களாக வெட்டு, கண்டந்துண்டங்களாக வெட்டு.
ஓ நிலவை ஒத்த நூற்றுக் கணக்கான வளையங்களைக் கொண்டிருக்கும் கேடயமே. தயவு செய்து பொறாமை கொண்ட எதிரிகளின் பார்வையை மறைத்து விடு; பாபகரமான அவர்களின் பார்வையை எடுத்து விடு.
தீயகிரகங்கள் மற்றும் எரிநட்சத்திரங்கள் இவற்றின் தாக்கத்தில் இருந்தும், பொறாமை கொண்ட மனிதர்களிடம் இருந்தும், கொடிய விஷம் கொண்ட பாம்பு, தேள் போன்றவைகளிடம் இருந்தும், கொடூரமான பற்களைக் கொண்ட சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்தும், பூதகனங்கள் மற்றும் பஞ்ச பூதங்களிடம் இருந்தும், பாவச் செயல்களில் இருந்தும், பகவானின் நாம, ரூப அனுகீர்த்தனமே எங்களைப் பாதுகாத்து எங்களுடைய நல்வாழ்வுக்கு இடைஞ்சலாக உள்ள இவை அனைத்தையும் உடனடியாக முற்றிலும் அழிந்து போகச் செய்.
ஸ்தோத்திரங்களால் துதிக்கப்படுபவரும், வேதம் உருவெடுத்தவருமான, கருட பகவானும், தன்னுடைய சுய நாம மகிமையால் விஷ்வக்ஷேனரும், எல்லையற்ற ஆபத்துக்களில் இருந்து எங்களைக் காக்கட்டும்.
பகவான் ஹரியின் அந்தரங்க சகாக்களாக இருந்து கொண்டு அவரை அலங்கரிக்கும் அவருடைய நாமம், ரூபம், வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் இவை அனைத்தும் எங்களுடைய புத்தி, இந்திரியங்கள், மனம் மற்றும் பிராணன் ஆகியவைகளை சர்வ ஆபத்துக்களில் இருந்தும் காக்கட்டும்.
தோன்றிய மற்றும் தோன்றாத அனைத்திற்கும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் மூல காரணமாக பகவான் இருப்பதால், அவற்றிலிருந்து வேறுபடாத அந்த பகவான் அவற்றால் உருவாக்கப்படும் சர்வ உபத்திரவங்களையும் நாசம் செய்து அழிக்கட்டும்.
பகவானே பலவித வெளிப்பாடுகளாக தோன்றியிருப்பதை உணர்பவர்கள், பகவானுக்கும் அவருடைய சுய மாயையின் சக்திகளான அவருடைய அலங்காரங்கள், ஆயுதங்கள், அவரைக் குறிக்கும் அடையாளங்களான நாம, ரூப, குணங்கள் அனைத்திற்கும் இடையில் வேறுபாடு ஏதும் காண்பதில்லை. ஆதலால் எங்கும் ஊடுருவி இருக்கும் சர்வக்ஞ பகவான் ஹரி அவருடைய அனைத்து சுய ரூபங்களாலும் எங்களை எப்போதும், எங்கும் காக்கட்டும்.
எல்லா மூலைகளிலும், எல்லா திசைகளிலும், மேலும், கீழும், எல்லாப் பக்கங்களிலும், உள்ளும், புறமும் தன்னுடைய கர்ஜிப்பால், தன்னுடைய சுய தேஜஸால், மற்ற எல்லா தேஜஸ்களையும் ஒடுக்கி லோக பயத்தை முற்றிலும் நீக்கும் பகவான் நரசிம்மர் எங்களைக் காக்கட்டும்.
No comments:
Post a Comment