லோகக்ஷேமமே சிந்தனையாய் என்றும் இருக்கின்ற நாரணனே! கோமாதா இயற்கையுடன் சான்றோரை காக்கும் காவலனே! ஏழை எளியோரை அரவணைத்து ஏற்றம் தருகின்ற எழிலோனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!
புண்ணிய கங்கையாள் ஒரு புறமும்! மங்கல லக்ஷ்மி மறுபுறமும்! என்றும் சூழ்ந்துன்னை அழகூட்ட அற்புத கோலம் கொண்டவனே மின்னிடும் திருமுக சுந்தரனே! மோகன உருவே நாரணனே ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!
சங்கடம் வந்திடும்போதெல்லாம் நினைத்திட வேண்டிய நாரணனே! பொங்கிடும் உள் மனக் கவலைகளே! பொடித்திடும் புண்ணிய பூரணனே! தங்கிடும் முழுமன அமைதியினைத் தந்திடும் தெய்வமே மோகனனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாரயணனே நமஸ்காரம்!
பக்தியை விரும்பிடும் நாரணனே! பக்தரை விரும்பிடும் நாரணனே! நம்பி வாஞ்சையுடன் தொழுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் வேதியனே! பூதகணங்களதன் ஆண்டவனே! அகிலமே ஆடையாய்க் கொண்டவனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!
ப்ராமணர் க்ஷத்ரியர் வைசியரும் பெருமை பெற்றதும் உன்னாலே! அகிலம் பெரிதாக விரிந்ததுவும் உந்தன் லீலைகள் அதனாலே! நீக்கம் இல்லாமல் எங்கணுமே நிறைந்து நிற்கின்ற நாரணனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!
பச்சை புல்போல் எளியதுவாம் இச்சகம் அதனைப் படைத்தவனே! பாலனம் செய்வதும் நீதானே! பக்தி பாவத்தை ரசிப்பவனே! சான்றோரை காக்கும் காவலனே கருணை என்பதன் சாகரமே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!
தேவர் முனியோர்கள் பணிபவனே!வேண்டும் வரமளிக்கும் நாரணனே! என்றும் சத்திய நெறியோர்கள் தொழுது போற்றிடும் தலைமகனே! பிள்ளைச் செல்வமும் நலங்களுமே அள்ளித் தந்திடும் ஸ்ரீதரனே! ஸ்ரீவிஷ்ணுவின் திருவடிவே! சத்யநாராயணனே நமஸ்காரம்!
சத்திய நாராயணன் அஷ்டகத்தை! நித்தியம் மூன்று வேளையுமே! பக்தி உணர்வோடு படிப்பாரின் பாவங்கள் யாவும் அழிந்திடுமே!
No comments:
Post a Comment