முப்பிறவி பிணிதீர்க்கும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே !
மங்கலத்தின் அடையாளம் மென்மைமிகு வில்வதளம் ! பக்தியுடன் செய்திடுவேன் சிவபூஜை அதனாலே…!
நல்லவைகள் தந்தருளும் ஒரு வில்வம் கரமெடுத்து' எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!
முழுதான மூன்றுதளம் வில்வ இலை அதனாலே தொழுதேனே பூஜையிலே நந்தியெனும் ஈஸ்வரனை!
பாவமெலாம் அழித்துவிடும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!
சோம யாகம் செய்தபலன் சாளக்கிராம தானபலன் யாவையுமே தந்திடுமே வில்வமெனும் மூன்று தளம்!
சேமமெல்லாம் சேர்த்துவிடும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!
வாரணங்கள் ஆயிரமாய் தரும் பலனைத் தந்திடுமே ! ஆயிரமாய் திருமணங்கள் செய்துதரும் பலனுடனே!
பூரணமாய் பலன்கொடுக்கும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே !
திருமகளின் திருமார்பில் தோன்றியதாம் வில்வமரம் ! பெருமானாம் ஈசனவன் மனம்விரும்பும் வில்வமரம்!
பெருமைமிகு தருவதனில் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!
வில்வமரம் கண்டாலே வினைதீரும் கண்டேனே ! வில்வமரம் தொட்டாலோ பாவமெலாம் விட்டோடும்!
பெரும்பாவம் தீர்த்துவிடும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!
காசியிலே பைரவனை ப்ரயாகையில் மாதவனை ஆசிபெற வேண்டியதன் அரும்பலனைத் தந்திடுமே!
நல்லபலன் தந்தருளும் ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!
அடிமுனையில் ப்ரம்மனுமே நடுவினிலே திருமாலும் மேல்முனையில் ஈசனுமே உறைகின்ற வில்வ இலை!
மும்மூர்த்தி வாழ்கின்ற ஒரு வில்வம் கரமெடுத்து எம்பெருமான் சிவனுக்கு செய்திடுவேன் சமர்ப்பணமே!
வில்வாஷ்டகம் இதை ஈசன் சன்னிதியில் பக்தியுடன் துதிப்போர்கள் முக்தியுடன் சிவனடியைச் சேர்ந்திடிவார் நிச்சயமாய் !
No comments:
Post a Comment