Saturday, January 25, 2025

கல்பக கணேச பஞ்சரத்னம் தமிழ்| Kalpaga Ganesha Pancharathnam Tamil

சீர்மிக்க சிதம்பரத்தில் நடராஜரது கோயிலின் மேல் கோபுரத்தின் அழகிய கோட்டத்தில் விளங்குபவர், கற்பக மரமாகி அடியார் விரும்புவதை நிறைவேற்றுபவர், நடனத்தில் அடங்கா ஆனந்த மதம் கொண்டவர், துர்வாசர் முதலிய முனிவர்களால் வணங்கப் பெற்றவர், எல்லோருக்கும் மூத்தவர், குறைவற்றவர், அந்த கணபதி நம்மைக் காக்கட்டும்.

தில்லைக்காடு என்ற நகரம் உயிரினம் அனைத்தின் பசியைப் போக்குகிறது என முனிவர்கள் கூறுகிறார்கள். அதன் உண்மை நிலையை அறிய இரவில் வந்த துறவிகளில் சிறந்த துர்வாசரைத் திருப்திப்படுத்தி அவர் விரும்பிய தன் நடனத்தைக் காட்டிய கற்பகமரம் போன்ற கணபதி நம்மைக் காக்கட்டும்.
சிவபெருமானின் நடனம் காண விரும்பி வந்த இந்திரன் முதலான தேவர்களுக்குத் தன் வலது திருவடியைத் தூக்கிக் காண்பித்து அவர்கள் விரும்பியதை அருளி, சொர்க்கம் முதலிய அவரவர் உலகிற்கு அனுப்பினார். அந்த சிவகாமி சிதம்பரநாதனின் மகன் நமக்கு மங்களத்தைத் தரட்டும்.

அமிர்தம் பெற கோவிந்தன் முதலானோரால் வேண்டப் பெற்ற யானைமுக கற்பக கணேசர், நம் முன் தோன்றட்டும். அவர் எல்லோருக்கும் மூத்தவர். நல்ல வாக்கையும், அகலாத செல்வத்தையும், உயர்ந்த ஆத்ம ஞானத்தையும், நன் மனைவி மக்களையும் பெருமையையும் அந்த காத்யாயனீ - சிவனின் மகன் தந்தருளட்டும்.

கற்பக கணபதி, யானைமுகன், தில்லை வாழ் அந்தணர்களால் வேத மந்திரங்களால் திருவடிகளில் பூஜிக்கப் பெற்றவர், உயிரினத்தின் பந்தத்தை நீக்குபவர், தந்தம் முதலிய ஆறு ஆயுதங்களை ஏந்தியவர். விரும்பியதைத் தருபவர் என்ற தகுதியைப் பெற காமதேனுவால் அணுகிப் போற்றப் பெற்றவர், செல்வம் முதலிய வேண்டிய எல்லாம் தரும் கணேசரை வணங்குகிறேன்.

உமாபதி சிவாச்சாரியாரால் செய்யப் பெற்ற, விரும்பியதைத் தருகிற இந்தத் துதியை இரவும் பகலும் படிப்பவன் ஸ்ரீகற்பக விநாயகரின் கருணைக் கடைக்கண் பார்வையால் நாடியது அனைத்தையும் தடையின்றிப் பெறுவான். தன் இறுதி நாட்களில் எல்லா புருஷார்த்தத்தையும் நிறைவுறச் செய்கிற கைவல்யத்தையும் பெறுவான்.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...