அர்த்த ஜாம வேளையில் அகிலம் தூங்கும் காலையில் உக்கிரமாய் வருகிறார் உலக நாதன் தளபதி! கச்சை கட்டி வருகிறார்! கையில் தண்டம் ஏந்தியே! கர்ச்ச னையும் புரிகிறார் கடலைப்போல பொங்கியே!
உச்சரிக்கும் மந்திரம் ஓம் கார நாதமாம்! மெச்சு கிற வாத்தியம் மேலைக்கடல் இடிகளாம்! அர்ச்சனைகள் புரிவது ஆடி அடங்கும் தலங்களாம்! இத்தனைக்கும் அதிபதி கால தேவன் தளபதி!
சங்கு நாதசே கண்டி தாரை பரை வாத்தியம் மங்கள மாய் முழங்கிட மகிமை யோடு வருகிறார்! தொங்கும் மீசை கத்தியாம்! துடிக்கும் கண்ணில் சக்தியாம் இங்கி தமாய் நெற்றியில் ஒளிரும் நீறு வெண்மையாய்!
துட்டமிகு தேவதை துடுக்கு செய்யும் யட்சிகள் அத்தனையும் அடக்கவே ஆவேசம் கொண்டு வருகிறார்! கட்டளைகள் போடுவார்! கடுமையாகச் சாடுவார்! அத்தனைக்கும் அதிபதி! ஆனவர்தான் நம்பதி!
காளி ஆடும் வேளையில் கூடத் தாளம் போடுவார்! கால காலன் பூசையில் தாளமோடு ஆடுவார்! சாமமான வேளையில் கோணங் கியாய் மாறுவாய்! சேம நலம் கூறிடச் சித்தர் கோலம் சூடுவார்!
இரவு காலை இடைவெளி இருளும் ஒளியும் சேர்வெளி புரவி மீது ஏறியே புயலைப் போல வருகிறார்! அரியும் அரன் அயனுடன் அன்னை மூவர் போற்றிட புரியும் கடமை விளங்கவே புன்னகையும் புரிகிறார்!
அஞ்செழுத் தை ஓதிடும் அனைவருக்கும் அடிமையாம்! நெஞ்ச மதில் ஈசனை நினைத்த வர்க்கும் அடிமையாம்! தஞ்சமென ஈசனைப் பணிபவர்க்கும் அடிமையாம்! வஞ்ச மின்றி அவர்களை ஆதரிக்கும் வள்ளலாம்!
தில்லை நாதன் சேவடி தினமும் நாடும் எந்தனின் தொல்லை போக்க வருபவர்! தொடர்ந்து என்னைக் காப்பவர்! பிள்ளை களாம் எங்களைப் பெருமையோடு காக்கவே எல்லைக் காவல் தெய்வமாய் என்றும் வாழ்ந்து அருள்பவர்!
என்று வந்த போதிலும் எந்தன் மனம் விழித்திடும்! நன்று ஓதும் மந்திரம் எந்தன் செவி கேட்டிடும்! அந்தப் புரவிக் குளம்பொலி எந்தன் இல்லம் கடக்கையில் சிந்தை யாவும் ஈசனின் சேவடியில் நிலைத்திடும்!
No comments:
Post a Comment