Monday, January 20, 2025

Thandapani Potri Panchagam Tamil| தண்டபாணி போற்றி பஞ்சகம் தமிழ்

1. தமிழ் மண்ணைத் தமிழ் ஆளத் தரணி எங்கும் தமிழ்பரவச் செய்தவனே! போற்றி! போற்றி!! தமிழ் மொழியை உலகம் எல்லாம் ஏத்திப் போற்றத் தனிப் பெருமை தந்தவனே போற்றி! போற்றி!! தமிழ் மக்கள் கடைப் பிடிக்கும் தனிப்பண்பாட்டைத் தலை நிமிரச் செய்தவனே போற்றி! போற்றி!! தமிழ் உருவே! தவநகராம் சிரவை யூரில் தமிழ்த்தண்ட பாணியனே போற்றி! போற்றி!!

2. திரு விரிஞ்சை வேலவனே போற்றி! போற்றி! திகழ் விராலிமலையவனே போற்றி! போற்றி!! வெருவு பகை வினை ஒழிய விரை வாய் வந்தே வெற்றிகளைத் தருபவனே போற்றி! போற்றி!! திருவருளின் தனியுருவாய் அமைந்த சிக்கல் சிங்கார வடிவேலா போற்றி! போற்றி!! மருவு மொரு மயிலவனே சிரவை யூரில் வளர் தண்ட பாணியனே போற்றி! போற்றி!!

3. அடியார்கள் மிகப் போற்ற அருவி சூழ்ந்த அனுவாவி சுப்பிரமணியா போற்றி! போற்றி!! குடியாளும் வேந்தர்களும் குனிந்தே போற்றும் குன்றக்குடிக் குணக்குன்றே போற்றி! போற்றி!! மடிமீது மாதிருவர் அமர்ந் திருக்க மயிலில் உலா வருபவனே போற்றி! போற்றி!! தடியூன்றித் தலை நிமிர்ந்து சிரவை யூரில் தண்டபாணித்திருப்பாதம் போற்றி! போற்றி!!

4. ஓதிமலை ஒண்பொருளே போற்றி! போற்றி!! ஒளிர்குருந்த மலைமன்னா போற்றி! போற்றி!! நீதி நெறி தவறாதோர் நேர்மை யாளர் நெஞ்சில் நிலை நிற்பவனே போற்றி! போற்றி!! பாதிமதி தவழ்கங்கை பாம்பு உலாவும் பரமசிவன் தன்மகனே போற்றி! போற்றி!! சோதிமணிச் சுடர்உருவே சிரவை யூரில் சுவைதண்ட பாணியனே போற்றி! போற்றி!!

5. சென்னிமலைச் செவ்வேளே போற்றி! போற்றி!! செங்கோட்டு வேலவனே போற்றி! போற்றி!! தன்னிகரில் சிவன் மலையில் நெஞ்சை அள்ளும் தனியழகா! சிவகுமரா! போற்றி! போற்றி!! புன்னகையின் பொருள் காட்டிக் கந்த கோட்டம் பொலிகின்ற வளர்பொருளே போற்றி! போற்றி!! இன்னல் ஏதும் வாராமல் சிரவை யூரில் எழில் தண்ட பாணியனே போற்றி! போற்றி!

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...