Wednesday, February 5, 2025

அவனிதனிலே பழநி திருப்புகழ்| Pazhani Thirupugazh Meaning Lyrical

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

அர்த்தம் 

இந்த பூமியிலே பிறந்து
குழந்தை எனத் தவழ்ந்து
அழகு பெறும் வகையில் நடை பழகி
இளைஞனாய்
அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர
குதலை மொழிகளே பேசி
அதிக விதமாக வயதுக்கு ஒப்ப
வளர்ந்து
வயதும் பதினாறு ஆகி,
சைவ நூல்கள், சிவ ஆகமங்கள்,
மிக்க வேதங்களை ஓதும்
அன்பர்களுடைய
திருவடிகளையே நினைந்து
துதிக்காமல்,
மாதர்களின் மீது ஆசை மிகுந்து
அதன் காரணமாக மிக்க கவலையுடன்
அலைந்து
திரிகின்ற அடியேனை,
உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா?
சும்மா இரு என்ற மெளன உபதேசம்
செய்த சம்பு,
பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை,
தும்பைப்பூ
தன் மணி முடியின்
மேலணிந்த மகாதேவர்,
மனமகிழும்படி அவரை
அணைத்துக்கொண்டு
அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த
பார்வதியின் குமாரனே
பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை
உடையவனே
இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு
மயிலின் மேல் ஏறி விளங்கி
பூமி அதிரவே வலம் வந்த
வீரக் கழல் அணிந்த வீரனே
மோட்ச வீட்டில் பொருந்தி நின்று
முருகன் என விளங்கி
பழனிமலையில்
வீற்ற பெருமாளே.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...