நான்கு முகங்களையும் நான்கு கைகளையும் உடையவளும், மஞ்சள் நிற ஆடை, மாலை இவற்றால் மிகவும் பிரகாசிக்கின்றவளாயும், வரத, அபய முத்திரைகளைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், உத்திராக்க மாலையை அணிந்திருப்பவளும், கையில் மணியைத் தரித்திருப்பவளும் ஜடா மகுடத்தைக் கொண்டவளும், அன்ன வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், எல்லாவித ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பவளுமான பிராம்மி தேவியைத் தியானம் செய்து பூஜிக்கிறேன்.
மாகேசுவரி தியானம்
ஒரு முகம், மூன்று கண்கள், நான்கு கரங்கள் கொண்டவளும், ஜடாமகுடத்தைத் தரித்திருப்பவளும், வெண்மை நிறத்துடன் மிக அழகாக ஒளிர்பவளும், வரத, அபய முத்திரைகளைக் கொண்டவளும், மான், உடுக்கை இவற்றைக் கைகளில் ஏந்தியிருப்பவளும், வ்ருஷப வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், மகாதேவியும் மங்கள வடிவினளும் ஆன மாகேஸ்வரியை தியானம் செய்து பூஜிக்கிறேன்.
கௌமாரி தியானம்
ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் உடையவளும், ஜடாமகுடத்தை அணிந்திருப்பவளும், நீலநிற மேனியை உடையவளும், இளம் வயதுடையவளும், வரத, அபய முத்திரைகளுடன் வஜ்ராயுதம், சக்தி வேல் ஆயுதம் இவற்றைக் கைகளில் கொண்டவளும், சாமுத்ரிகா லக்ஷணங்கள் யாவும் ஒருங்கே அமையப் பெற்றவளுமான கௌமாரி தேவியை தியானிக்கிறேன்.
வைஷ்ணவி தியானம்
ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் உடையவளும், அபய, வரத முத்திரை, சங்கம் (சங்கு), சக்கரம் இவற்றைக் கைகளில் ஏந்தியவளும், இளம் வயதுடையவளும், கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், சாமுத்ரிகா லக்ஷணங்களை ஒருங்கே அமையப் பெற்ற வைஷ்ணவீ தேவியை வணங்குகிறேன்.
வாராகி தியானம்
ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் இவற்றைப் பெற்றிருப்பவளும், கருப்பு நிற ஆடையை உடுத்தியவளும், வஜ்ரம், சக்கரத்தை ஏந்தியிருப்பவளும், உலக்கை, தடி ஏந்தியவளும், வரத அபய முத்திரைகளைத் தனது தாமரைப் போன்ற கைகளில் தாங்கியவளும், சிம்மவாஹனத்தில் பவனி வருபவளும், கிரீட மகுடத்தை அணிந்து ஒளிர்பவளும், சகல அலங்காரங்களுடன் விளங்குபவளும் சான்றோர்களால் பூஜிக்கப்படும் வாராகி தேவியை பூஜிக்கிறேன்.
இந்திராணி தியானம்
ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகளை உடையவளும், ரத்தினங்களால் ஆன மகுடத்தை அணிந்திருப்பவளும், பொன்னிற மேனியை உடையவளும், வரத அபய முத்திரைகளைத் தனது தாமரைப் போன்ற கைகளில் தாங்கியவளும், வஜ்ராயுதம், சக்தி ஆகியவற்றைக் கரங்களில் கொண்டவளும், யானை வாகனத்தின் மீது வீற்றிருப்பவளுமான மாகேந்திரி தாயை இந்திராணியை) பூஜிக்கிறேன்.
சாமுண்டா (சாமுண்டி)
நான்கு கைகள், மூன்று கண்கள் ஆகியவற்றை உடையவளும், கருத்த மேகம் போன்ற மேனியை உடையவளும், கடைவாய்ப் பல் நீட்டிக் கொண்டிருக்கும் முகமுடையவளும், புலித்தோலை ஆடையாகக் கொண்டு ஒளிர்பவளும், கத்தி, சூலம், கபாலம், அபய முத்திரை இவற்றைக் கைகளில் பெற்றிருப்பவளும், கரண்ட மகுடத்தைத் தரித்திருப்பவளும், சிறிய மணிகள் மற்றும் தலைகளால் ஆன மாலையை அணிந்திருப்பவளும், ப்ரேத (சவம்) வாகனத்தின் மீது வீற்றிருப்பவளும், பருத்த முலைகளும் இளைய வயதுடையவளுமான சாமுண்டியை எப்போதும் தியானிக்கிறேன்.
No comments:
Post a Comment