Sunday, February 16, 2025

சீரடி சாய்பாபா நட்சத்திர மாலை| Shirdi Sai Baba Nakshatra Malai

சீரடி வாசனே! ஸ்ரீ சாயிநாதனே! அரியவரம் அருளும் அழகு முகத்தோனே! உலகை உருவாக்கிய வெற்றிச் செல்வனே உனை நினைந்திருப்பதுவே ஓர் இனிய சுகம்!
தலையைச் சுற்றி துணிப்பின்ன லிட்டாய் அணிந்தாய் மேனியில் கிழிந்தவோர் அங்கி வறியவன் போல் வெளித் தோற்றம் ஏற்பினும் இறைவனே நீயென உலகுணர வைத்தாய்

தொலைந்த தன் குதிரையை இருமாதமாய் தேடி
அலைந்த சாந்த படேலதை மீட்க அருளினாய் 
சீரடிமண்ணில் வருகசாயி என்றுனை 
வரவேற்ற பரிவினில் மகல்சாபதிக்குப் பதிலும் உரைத்தாய்

கோதுமை மாவை ஊரெல்லையில் கொட்டி காலரா நோயை கடுகவே விரட்டினாய் புயல் மழை தீ சீற்றங்களை அடக்கி பயந்த மக்களின் துயரையும் போக்கினாய்

ஐவர்தம் வீட்டில் உணவை இரந்தாய் அவர்முந்தைய வினைகள் முற்றும் அழித்தாய் பயஜா அன்னையின் சேவையை மெச்சியே பரகதி அவள்பெற பரிவுடன் அருளினாய்

நீரை எண்ணெயாக மாற்றி வைத்தாய் தீபங்கள் முழுஇரவிலும் ஒளிரவைத்தாய் பன்றியின் செய்கையைச் சுட்டிக்காட்டி பழிதூற்றும் இழிகுணம் தவிர்க்க வைத்தாய்

உதியைக் கொடுத்து நல்வைத்தியம் செய்தாய்
தொலையாப் பிணிகளைத் தொலைத்திடச் செய்தாய் இறைநாம சங்கீர்த்தனம் இடையறாது செய்யச் சொல்லி குறைவற்ற மன அமைதி அவர்கட்குக் கூட்டினாய்

குட்க ரோகியையும் அணைத்துக் கொண்டாய் அடைக்கலம் தந்துநல் ஆதரவு அளித்தாய் மனிதகுலப் பண்பின் மாண்பினை உணர்த்தி புனித மகாத்மாவென புவிபோற்ற நின்றாய்

எரியும் தீயினுள் உன்கையை நுழைத்தாய் எங்கோ ஓர் கொல்லன் குழந்தையைக் காத்தாய் பாம்பின் கடியால் பரிதவித்த சாமாவின் பயத்தைப் போக்கி விஷம் இறங்க வைத்தாய்

உயரே தொங்கும் சாண் அகலப் பலகையில் வியத்தகு வண்ணமே படுத்து உறங்கினாய் பல்லி ஒன்றின் வரவை முன்னமே சொல்லி எல்லையற்ற உன் திருஷ்டியை எடுத்துக் காட்டினாய்

லெண்டியில் நன்மலரத் தோட்டம் வளர்த்தாய் பொங்கும் இனிமையை எங்கும் பரப்பினாய் மனிதர் தம் கடமையில் மாறாதிருக்கச் சொல்லி சோம்பற் குணத்தை மக்கள் துறக்கச் செய்தாய்

நாய்பெற்ற அடியால் நெஞ்சம் வெதும்பினாய் அடியின் தழும்பை உன் உ<டம்பில் காட்டினாய் எவ்வுயிராயினும் நம் அன்பிற்குரியதென்று எல்லையற்ற கருணையை எடுத்துக் காட்டினாய்

அனைத்து உயிர்களிலும் அணுவாய் நின்றாய் அளப்பரிய ஆகாயத்தையும் விஞ்சியே உயர்ந்தாய் தீய குணமுடையோர் திருந்தவே வழிநடத்தித் தூய மனத்தவரிடையே அவர்சேரக் கூட்டினாய்

அடியவன் மகல்சாபதி மடியில் கிடந்து துடிக்கும் நாடித்துடிப்பை நிறுத்தினாய் மூன்றாம் நாளிலே மீண்டும் எழுந்தாய் மரணத்தை வென்றவனென மாநிலம் போற்றவே

சலங்கையைக் கால்களில் அணிந்து கொண்டாய் சந்தங்களுக் கொப்பவே நர்த்தனம் புரிந்தாய் மதுரக் குரலால் கீர்த்தனங்கள் இசைத்து மகா ஆனந்தம் எங்கும் பெருக வைத்தாய்

தற்பெருமை செருக்கு அகந்தைகளை வெறுத்தாய் சற்றேஉனை நகரச்சொன்ன நானாவலியையும் மதித்தாய் மனிதகுல மேன்மைக்கே மாளாது நிதம் உழைத்தாய் மேம்பட்டதோர் ஆத்மாவென்று மேதினியில் உலவினாய்

அண்ணா தாமுவின் பக்தியில் மகிழ்ந்து அவர் வேண்டிய மக்கட்பேறு வரமும் ஈந்தாய் தாஸ்கணு மேல் நீ கொண்ட கருணையினாலே கால் விரலில் காட்டினாய் கங்கையோடு யமுனையை

வேதாந்த சாரத்தை விரிபட உரைத்து நானாவின் நெஞ்சத்தை மிகநெகிழ வைத்தாய் காகா தீட்சித் பக்தியைச் சோதித்து அதை மேற்கொள் காட்டினாய் குருபக்தியின் மேன்மைக்கே

கொதிக்கும் உலையில் கைவிட்டுக் கிளறி அதிருசி அமுது ஆக்கிப் படைத்தாய் பசியால் வாடிய மக்களை கூட்டி அவர் பசியின் வாட்டம் முற்றும் போக்கினாய்

ஏமதுவின் கோரிக்கையை ஏற்று ஆசி கூறினாய் உந்தன் அருஞ் சரிதையை அவர் வரையச் செய்தாய் எழுதிய சரிதையைப் பாராயணம் செய்யச் சொல்லி ஏக்க தாபங்களை அவர் மனத்தே போக்கினாய்

அன்னை லட்சுமிபாயை அருகே அழைத்து ஐந்தும் நான்குமாய் நாணயங்களை அளித்தாய் நவவித பக்தியைக் குறிப்பால் உணர்த்தி பரகதி நாம்பெறும் பாதையைக் காட்டினாய்

பூட்டியின் கனவில் ஒருநாள் தோன்றி கோவில் ஒன்றினை அவர்கட்டவே செய்தாய் தாத்யாவின் மரணத்தைத் தடுத்து நிறுத்தித் தானே பதிலுக்கு மகாசமாதி அடைந்தாய்

பூத உடலை நீத்தபின்னும் சமாதியினின்று குரல் கொடுத்தாய் பூசை ஆரத்தி நிவேதனம் தொடர்ந்து கொடுக்கவும் கூறினாய் முரளீதரனின் சிலைக்குப் பதிலாக நீயே அங்கு நிலை நின்றாய் கர்ணாமிர்தத்தின் மாற்றாக கருணை அமுதம் பொழியவே

சொன்னவழியே உலகில் வாழ்ந்து காட்டியவன் நீ
உன் வாழ்க்கை நெறியையே உபதேச மாக்கினாய்
அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டாய் அனைத்துலகம் தொழ புகழேந்தி நின்றாய்

வணங்கும் தெய்வங்கள் யாவும் நீயே வளங்கள் அனைத்தும் எமக்கு அருள்வாயே சற்றும் மறவாமல் உனை நினைத்து நிற்போம் சற்குருவாய் எம்நெஞ்சை வழிநடத்து

பக்தியில் தொடுத்த சாயி நட்சத்திர மாலையிது
புவியில் பாவப்பிணிகளை முறிக்க அருமருந்து பன்முறைப் பகன்றிடப் பாராயணத்திற்கே எளியது
நன்வரம் நல்கும் சாயிநாமாவளிகளில் சிறந்தது.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...