Saturday, February 15, 2025

விநாயகர் சரண மாலை| Vinayagar Sarana Malai

விநாயகர் சரண மாலை

அருளே சரணம்! அன்பே சரணம்! அன்னை மீனாள் மகனே சரணம்! இருளைப் போக்கி ஒளியைச் சேர்க்கும் ஈசன் மகனே சரணம்! சரணம்! உருகிப் பணியும் அடியார் மனதில் ஒளிரும் ஞானச் சுடரே சரணம்! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம்! சரணம்! 
திருவே சரணம்! தெளிவே சரணம்! திகழும் யோக வடிவே சரணம்! கருவாய் விளங்கிக் கவிஞர் மனதில் கவியாய்ச் சுரக்கும் தமிழே சரணம்! அருவம் உருவம் இவைகள் கடந்த அருளே உயிரே சரணம்! சரணம்! அருகப் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம்! சரணம்!

அழகன் மருகன் முருகன் போற்றும் ஆனை முகனே சரணம்! சரணம்! கழல்கள் அதிரக் களித்தே ஆடும் காளித் தாயின் சுதனே சரணம்! திருவாம் ஈசன் பாதம் பணியும் தெய்வக் களிறே சரணம்! சரணம்! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம்! சரணம்!

உழலும் மனிதர் நலமாய் வாழ உன்னத அருளைத் தருவாய் சரணம்! மழையைப் போல கருணைப் பொழிந்து மங்களம் அருள்வாய் சரணம்! சரணம்! தருவாய் உந்தன் அருளை என்றுன் தாள்கள் பணிந்தேன் சரணம்! சரணம்! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம்! சரணம்!

ஊழின் வினையும் உலகத் துயரும் ஒருங்கே ஒழிய அருள்வாய் சரணம்! வாழி என்றுன் பதங்கள் பணிந்தோம்! வந்தே நலங்கள் தருவாய் சரணம்! தருமி போலத் திரியும் எனக்கும் தமிழைத் தருவாய் சரணம்! சரணம்! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்புச் செல்வா சரணம் சரணம்!

மலரே! மணமே! மனதுள் அருளே! மலையே! மடுவே! மகிமை ஒளியே! அலையே! கடலே! அடங்காப் புயலே! அன்பில் தாயே! அருமைச் சேயே! நிலையாய் விளங்கும் நீதிக் கனலே! நெகிழும் பக்தர் விழியின் நீரே! அருகம் புல்லைச் சூடி மகிழும் அன்பே அருளே சரணம்! சரணம்!

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...