ஐஸ்வர்யம் மிகுந்தவரும், குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியையும் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும், ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.
பரணி
யமனுக்குப் பயந்திருந்த குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும், அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமானவருமாக விளங்கும் சிவபெருமானே, நமஸ்காரம்.
கிருத்திகை
இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் கருணையுள்ள வரும், முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி, ஆகாயம், நீர், அக்னி, காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவபெருமானே நமஸ்காரம்.
ரோஹிணி
மலைபோல வரும் ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் தரித்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவநதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவபெருமானே நமஸ்காரம்.
மிருகசீர்ஷம்
ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், சிவ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் உடையவரால் அடையமுடியாதவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.
திருவாதிரை
ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாக அணிந்தவரும், வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
புனர்பூசம்
தன்னலம் கருதாது செய்யப் படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு, ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் ஸௌக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் ஸௌக்கியமுற்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
பூசம்
பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானமனைத்தும் ஒரே உருவமாயுடைய வரும், மன விருப்பத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவபெருமானே நமஸ்காரம்.
ஆயில்யம்
யட்சர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயை மிகுந்தவரும், பொன் மயமான வில்லை வலக்கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக் கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
மகம்
பொருள். வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், அட்சரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாட்சர தீட்சை பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
பூரம்
வெள்ளி மலை என்று பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சிபோன்று சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழனாக விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.
உத்திரம்
ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேருமலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குப் பிரகாசமான கதிரவன் போன்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
ஹஸ்தம்
'ஸர்வமங்களை' எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
சித்திரை
குறைந்த அளவே பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வதளத்தை அர்ப்பணித்தாலேயே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
ஸ்வாதி
எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களை அரவணைத்துக் காப்பவரும், தவறான செயல்களில் ஈடுபடும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடைய வரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
விசாகம்
உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பரே, ஈசனே, எனக்கு வரம் அருளும். மஹரிஷிகளின் மனைவியரை மோகிக்கச் செய்தவரும், உம்மிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
அனுஷம்
மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் தரித்தவரும், போரில் சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்குப் பகையானவரும், கையில் மானை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
கேட்டை
பக்தர்கள் கோருவதைக் கொடுப்பவரும், யாகம் இயற்றுபவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் பேரொளி மிக்க உடலை உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
மூலம்
முக்கண்ணரும், எளியவர்களிடத்தில் கருணையுடையவரும், தட்ச ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் செய்தவரும், சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரும், வணங்கிய பக்தர்களை தாமதமில்லாமல் காப்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.
பூராடம்
மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்கவைப்பதில் மிகச் சிறந்த படைவீரன் போன்றவரும், சம்சாரக் கடலுக்கு பயந்தவர்களின் அச்சத்தைப் போக்கடிப்பவரும், தாமரைக் கண்ணரும், சுகத்தை அருள்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.
உத்திராடம்
கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரும், சுகத்தைக் கொடுப்பவரும், சிறந்த திருநீற்றை கழுத்தில் தரித்தவரும், தன்னுடையது எனும் எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை அருகில் கொண்டவரும், விஷ்ணுவால் வணங்கப்பட்டவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
திருவோணம்
சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் போற்றப்பட்டவரும், ஒழுக்கமுள்ள பக்தர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரம்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவரும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
அவிட்டம்
அளவிடமுடியாத தெய்வீக மகிமை பொருந்தியவரும், தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதில் நாட்டமுற்றவரும், தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரும், மார்க்கண்டேயருக்குத் தன் அன்பைக் காட்டியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
சதயம்
பரமேஸ்வரா! உம்முடைய வேலைக்காரனான என்னிடம் கருணை காட்டும். இதயத்தில் பாவனை செய்யும் அளவுக்கு அருள்புரிபவரும், நெருப்பைக் கண்ணாக உடையவரும், தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரும். தன்னுடைய திருவடியைச் சரணடையும் பக்தர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
பூரட்டாதி
இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் ஆழ்ந்த கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனத் தாமரையில் வசிக்கும் யோகியுமான சிவபெருமானே நமஸ்காரம்.
உத்திரட்டாதி
காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய ஸௌக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
ரேவதி
சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரும், தம்மை வணங்கும் ஜீவர்களைக் காப்பவரும், பிரம்மாவின் கபாலத்தை உடையவரும், ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும், நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடிய வருமான சிவபெருமானே நமஸ்காரம்.
No comments:
Post a Comment