செம்பொன் சுடராக ஒளிரும் அருணாசலனே! சித்திரமாகத் தோன்றும் மாயா காரியமான நாம-ரூபப் பிரபஞ்சம் எல்லாம் உன்னிடத்தில் தோன்றி, விளங்கி, உன்னிடத்திலேயே மறைந்து விடுகின்றன. நீயோ என்றென்றும் நான்-நான் என்று இதயத்தில் உள்ளுணர்வாக நடம் புரிவதால் உன் பெயர்தான் இதயமென்று உன்னை உணர்ந்த தபோதனர்கள் சொல்லுவார்கள்.
உள்முக நோக்கத்தோடு கூடிய ஏகாக்கிரமான, குற்றமற்ற மனத்தினால், நான் என்ற தற்போதம் எங்கிருந்து உண்டாகிறதென்று நன்கு ஆராய்ந்தால், அந்த நான் என்னும் தன்மை, கடலில் கலந்துவிடும் நதியைப் போல தன்னுருவை உன்னில் இழந்து, அருணாசலா, உன்னிடத்திலேயே ஒடுங்கிவிடும்.
சுயம்பிரகாச சொரூபமாய் விளங்கும் அருணாசலா! வெளிமுக விஷயங்களை நீக்கிவிட்டு, பிராணாயாமாதி யோகாப்பியாசத்தினால், நிச்சலமாக நிற்கக்கூடிய சாத்வீக மனத்தினால் இதயத்தில் பொருந்தி, இடைவிடாமல் உன்னை தியானித்து யோகியானவன் உன்னை சித்சொரூபமாகிய ஜோதி வடிவில் தரிசனம் பெற்று மிக உயர்ந்த ஜீவன் முக்தி நிலையினை அடைகிறான்.
அருள்மிகு அருணாசலா! உன்னையே சரணாகதி யடைந்து, அனைத்தையும் உனக்கே ஒப்படைத்து தூய்மை நிறைந்த உள்ளத்தினால் சதாகாலமும், காணக்கூடிய அனைத்தையும் உன் சொரூபமாகவே கருதி, உன்னிடம் அனன்ய பக்தி செலுத்தும் உத்தம பக்தன், சுக சொரூபமான உன்னில் இரண்டறக் கலந்து பேரின்ப நிலையை எய்துகிறான்.
அருணாசல க்ஷேத்திர பகவான் ரமணன், வடமொழியில் ஆர்யாகீத விருத்தத்தில் இயற்றிய இந்த அருணாசல பஞ்சரத்னம் உபநிஷத்துக்களின் கருத்தேயாகும். இதனை இனிய செந்தமிழ் வெண்பாவாக உலகத்தோருக்கு மகிழ்ச்சியுடன் மீண்டும் அருளினான்.
விஷ்ணு முதலான அனைத்து ஜீவர்களின் இதயத்தாமரை என்னும் குகையில் பிரகாசித்து, ஆத்ம சொரூபமாய் ரமித்துக் கொண்டிருக்கும் பரமாத்மாவே அருணாசல ரமணனாகும். அவனை அடைய வேண்டுமானால் பக்தியினால் நெஞ்சுருகி, இதய குகையை அடைந்து, மெய்யறிவாகிய ஞானக் கண்ணைத் திறந்து நோக்கினால் அவ்வருணாசல ரமணனின் உண்மை சொரூபத்தை உள்ளபடி அறிவாய்.
No comments:
Post a Comment