Saturday, March 29, 2025

Hanumath Bhujanga Stotra Tamil| அனுமன் புஜங்க ஸ்தோத்திரம் தமிழ்

பொன் போன்ற மேனியன். கற்றோன். ராஜ சிம்மம் போல தைரியம், கம்பீரம் நேர்மை ஆகியவற்றைக் கொண்டு உலகத்தை குறையேதுமில்லாமல் காப்பவன். ஆன்ம நேயன். அப்படிப்பட்ட வாயு புத்திரனாகிய எங்கள் அனுமா போற்றி.


பேரொளி கொண்டவனாயினும் அன்பர்க்குத் தென்றலாய் வருடிக் கொடுப்பவன். பாலனாக இருக்கையிலே சூரியனை பழமென்று எண்ணிப் பாயந்தவன். தீமைகளை அடியொடு சங்காரம் செய்வதில் சங்கரனே இவன். அந்த ராமதாசனான அனுமனைப் போற்றுவோம்.


லஷ்மணனின் உயிரை மீட்டதால் ரகுவம்ச நாசத்தைத் தவிர்த்தவன். ஞானி. சிவ நேசச் செல்வனாய் புவனம் காத்து ஸ்ரீ ராமனையே (அவனே வியக்கும் வண்ணம்) நெஞ்சில் சுமந்து நிற்கும் அனுமனே போற்றி.

சிம்ம கர்ஜனை செய்பவன். அழகான பாதங்களைக் கொண்டவன். வியக்கும்படியான அழகான நடையினை உடையவன். வனப்பான கேசத்தை உடையவன். அவன் தாவல் அசாத்ய அழகு. அத்தகைய சீதாராம தாசனைப் போற்றுவோம்.


ஆஞ்சநேயா போற்றி. வஜ்ரம் போன்ற உடல் வலிமையுள்ளவனே போற்றி. சிம்ம நாதா போற்றி. உனது ஒப்பற்ற வாலின் துணை கொண்டு விண்ணில் ஏகி, கருடனைப்போல் பறந்தாய். இலங்கையில் அட்டஹாசம் செய்தாய். நீயே சத்திய ஞான சொரூபன். மூவுலகும் நடுங்கும் சிங்கநாதா போற்றி.


போரிலே நீ ருத்ரனாக எரிப்பாய். மேகநாதனுடன் நடந்த போரிலே, இலக்குவனாக வந்த ஆதிசேஷனே உயிரற்ற சடலம் போல் வீழ்ந்து கிடந்தபோது-ஆதர்ஷ பூமியைத் தாங்குபவனாகிய அவனே பூமியில் கிடந்தபோது -நுண்ணறிவின் உதவியாலே விண்ணில் பாய்ந்து சென்று பல்லாயிர லட்ச யோசனைக்கப்பால் இருந்த சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்து வந்து இளவலின் உயிர் காத்த அனுமந்தன் பெருமையை யாரால் எப்படிக் கூற இயலும் ?! எவராலும் முடியாது!

பொன்முடி தரித்தவா போற்றி. மாண்பு மிக்க செல்வா போற்றி. நீ வானரத் தலைவன். நல்ல மதி யூகி. மந்திரி. நீ ஐம் பூதங்களிலும் நின்றவன். நேர்த்தியுடன் செயல்படுபவன். உயர்வான பொன்னாடை தரித்தவன். சாகா நிலை பெற்றவன். உன்னை போற்றுகின்றோம்.

ராமனுக்கு இனியனே, ராக சொரூபனே, நோய் தீர்க்கும் சஞ்சீவியே, உலக ரட்சகனே, பத்ம பாதனே, வானர சிரேஷ்டனே, குமுதனே, உன்னைப் போற்றுகிறோம்.

பேரருளும் பெருமையும் கொண்ட கபீந்தரா (வானரத் தலைவனே). நீ தானே தேடி வந்து எம்மை ரட்சிக்கும் தெய்வம். நீ பெரும் புகழ் நாயகனின் தூதன். மலைகளையும் குகைகளையும் ஆராய்வதில் வல்லவன். வலிமையில் மிக்கவனே. உமை வணங்குகிறேன்.

பொன்னாலான இலங்காபுரியை பொடிப் பொடியாக்கிய பிரபு நீயே ! தீயில் கருகிய இலங்கையும் வெந்தீயில் அழிந்தவற்றுள் நதிகள், கடல் என, எதுதான் உன் வெஞ்சினத்திற்குத் தப்பியது ? உன் சினம் கண்டால் மடிவோம் என எண்ணும்படி நீலமேக ஸ்யாமளனின் கோபத்தை உன்னுடையதாக்கிக் கொண்டாயோ மாருதி

ராம நாமத்தையே சதா மனதில் கொண்டவனே! ராம பிரம்மத்தின் நாத பிரம்மமே. அசோகவனத்தின் சோகத்தை மாற்றிய தீரா. ராமனின் பிராணனாகிய சீதா பிராட்டியின் அன்பைப் பெற்றிட்ட அரிய பேறை பெற்ற தவசீலனே! இதற்கு என்ன தவம் செய்தனை ?

குருவே ஸ்ரீ ஹனுமனே ! என இவ்வையகமே போற்றி மகிழ்வோடு போற்றிடும் பெருமைக்கு உரியவன் நீ. உன்னுடைய பூப்போன்ற மென்மையான உடல் பூமியைப் போன்று வலியது. உன் மேனி ரோமாஞ்சனம் தரக்கூடியது. (உன் திருமேனி கண்டால் சிலிர்ப்பு ஏற்படும்) நீ நாவுக்கரசன். சொல்லின் செல்வன். ராமதாசனே, அனைத்தையும் அவனிலிருந்தே பெற்று அவனுக்கே அளிக்கும் பிரபுவாக உள்ளவன் நீயே ! உன்னைத் துதிக்கிறோம்.

ருத்ரனும் பிரும்மனும் கூடப் போற்றும் மஹா யோகி நீயே ! தத்துவமும் தர்க்கமும் அறிந்தவன் நீ ! இசையில் லயிப்பவன் ! எங்கெல்லாம் சத்தியத்திற்குக் கெடுதல் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் வலியச் சென்று சத்தியத்தை ரட்சிப்பவன் நீயே ! உன்னைப் போற்றுகிறேன்.

சத்யவடிவினனே போற்றி. வஜ்ரதேகனே போற்றி ஞான சூரியனே போற்றி. சிரஞ்சீவி பதம் பெற்று வாழும் மைந்தனே போற்றி. தீய்க்கும் கனலினைக் கொண்டவா போற்றி.

நித்ய பிரம்மசாரியே போற்றி ! வாயு மைந்தனே போற்றி ! எப்போதும் ராமநாம சங்கீதத்தில் திளைத்திருக்கும் நீ ராகங்களின் நுட்பத்தை உணர்ந்தவன். என்றும் நிரந்தர ராமதாஸன் நீயே.

இந்த அனுமனது புஜங்க ஸ்தோத்திரத்தை மனம் வாக்கு காயத்தை சுத்தமாக வைத்துக் கொண்டு பிரதோஷ காலங்களில் (தினமும் மாலை நேரத்தில்) ஜபித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். எதிரி பயம் விலகும். நியாயமான கோரிக்கைகள் ஈடேறும். சத்திய வழி நடப்பதால் கிட்டும் நன்மைகள் தடையின்றிச் சேரும் சர்வமங்களம் கூடும். நேர்வழியில் சென்று அனைத்திலும் வெல்லும் திறனும் தானே வரும்.

ஸ்ரீ ஹனுமத் புஜங்கம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...