Saturday, August 10, 2024

லக்ஷ்மிநரசிம்ம கராவலம்பம் வரிகளுடன்| Lakshmi Narasimha Karavalambam (Tamil)

திருப்பாற்கடலை உறைவிடமாகக் கொண்டவனே! சக்ராயுதத்தை கையில் தாங்கியவனே! ஆதிசேஷனின் தலையில் உள்ள ரத்னங்களினால் ஒளிரும் புண்யமான வடிவை உடையவனே! யோகிகளுக்கெல்லாம் தலைவனே! நிலையானவனே! தஞ்சமடையத் தக்கவனே ! ஸம்ஸாரமெனும் கடலைக் கடக்க ஓடம் போன்றவனே ! லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானே! எனக்குக் கை கொடுத்து அருள வேண்டும்.



நான்முகன், இந்திரன், ருத்ரன், மருத்துக்கள், சூரியன் முதலானவரின் கிரீடங்களின் முனைகளால் உறையப்பெற்று மாசற்று ஒளிரும் தாமரை போன்ற சரணங்களை உடையவனே! லக்ஷ்மீ தேவியின் ஸ்தனங்களாகிற தாமரை மலருக்கு ராஜ ஹம்ஸம் போன்றவனே ! லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மீந்ருஸிம்ஹனே!
ஸம்ஸார மென்னும் காட்டுத்தீயினால் எரிக்கப்பட்டு அல்லல் படுபவனும், அச்சுறுத்தும் பரந்த தீயின் ஸமூஹங்களால் கருகிய ரோமங்களை உடையவனுமான எனக்குக் கைகொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! எங்கும் வியாபித்திருப்பவனே ! ஸம்ஸாரமென்னும் வலையில் விழுந்தவனும், தூண்டிலால் இழுக்கப்பட்ட மீன்போல பொருளாசையால் ஈர்க்கப் பட்ட புலன்களை உடையவனும், துண்டிக்கப்பட்ட தாடைகளையும் தலையையும் உடையவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மீந்ருஸிம்ஹனே! தேவனே! ஆழமான அடித்தலத்தை உடையதும் மிகவும் பயங்கரமானதும் ஸம்ஸாரமென்னும் கிணற்றை அடைந்து நூற்றுக்கணக்கான இன்னல்களான அரவங்களால் துன்புறும் கதியற்றவனான இரங்கத்தக்க நிலையை அடைந்த எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! இன்னல்களனைத்தையும் போக்குபவனே! ஸம்ஸாரமென்னும் பயங்கரமான யானையின் துதிக் கையினால் அடிபட்டு நசுக்கப்பட்ட நுண்ணிய உறுப்புகளைக் கொண்டவனும், பிறப்பு இறப்பு என்னும் வாழ்க்கையாகிற அச்சத்தினால் அல்லுறுபவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப்பெருமானே ! கருடனை வாஹனமாகக் கொண்டவனே! அமுதக் கடலில் வசிப்பவனே! வசுதேவன் புதல்வனாய் அவதரித்தவனே! வாழ்க்கை என்னும் பாம்பின் விரிந்த வாயிலுள்ள அச்சுறுத்தும் கடுமையான வலிவான பற்களிலுள்ள கொடிய நஞ்சினால் பொசுக்கப் பட்டு உருவிழந்த எனக்குக் கைகொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய நரஸிம்ஹப் பெருமானே ! இரக்கமுடையவனே ! பாவங்களை விதையாகவும், அளவற்ற செய்கைகளை எண்ணற்ற கிளைகளாகவும், புலன்களை இலைகளாகவும், காமனை மலராகவும், துயரங்களைப் பழங்களாகவும் உடைய வாழ்க்கை என்னும் மரத்தின்மீது ஏறி விழுகின்ற எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! வாழ்க்கைக் கடலில் பரந்த அச்சுறுத்தும் காலமென்னும் முதலைகளால் பிடிக்கப்பட்டு விழுங்கப்படுகின்ற உடலை உடையவனும், பலவிதமான கவலை உடையவனும், பலவிதமான ஆசைகள் என்னும் அலைகளால் அல்லல் படுபவனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

மிகவும் வல்லமை உடையவனே! கருணை நிதியே! பிரஹ்லாதனின் இன்னலைப் போக்க அவதாரம் செய்தவனே ! வாழ்க்கைக் கடலில் முழுகி மயங்குகின்ற எளியோனான என்னை (கடைக்கண்ணால்) பார்க்க வேண்டும். லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே ! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! முரனின் பகைவனே! வாழ்க்கை என்னும் அச்சுறுத்தும் காட்டில் திரிகின்றவனும், விலங்குகளில் தலைசிறந்த (சிங்கம்) போன்ற உக்கிரமான அச்சுறுத் தும் காமனால் பீடிக்கப்பட்டவனும், மிகவும் துன்ப முற்றவனும், பொறாமை என்னும் கோடையினால் பீடிக்கப்பட்டவனுபான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப்பெருமானே! இரக்கமுடையவனே! வாழ்க்கையின் நூற்றுக்கணக்கான பாசங்களால் சூழப்பட்ட என்னை யமனின் ஆட்கள் கழுத்தில் (பாசக்கயிற்றால்) கட்டி மிகவும் அதட்டுபவர்களாக எங்கேயோ இழுத்துச் செல் கிறார்கள். தனித்திருப்பவனும், பிறர் வயப்பட்ட வனுமான எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

லஷ்மியின் நாதனே! தாமரையை தொப்புளில் உடையவனே! தேவர்களின் தலைவனே! வியாபித்திருப்பவனே! வைகுண்டனே! கிருஷ்ணனே! மது என்ற அசுரனைக் கொன்றவனே! தாமரைக் கண் ணனே! பிரம்மனே! கேசவனே ! ஜனார்த்தனனே! வஸு தேவனின் மைந்தனே! தேவர்களின் தலைவனே! இந்த எளியோனுக்குக் கை கெர்டுத்தருள வேண்டும்.

ஒரு (கையினால்) சக்ராயுதத்தையும் மற்றொரு கையினால் சங்கையும் மற்றும் இன்னொரு கையால் லக்ஷ்மியை அணைத்துக் கொண்டும் வலது கையால் வரமளித்தல், காத்தருளல், பத்மமுத்திரை முதலியவைகளை குறிப்பிட்டுக் கொண்டு நிற்கும் லக்ஷ்மி யுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! எனக்குக் கை கொடுத்தருள வேண்டும்.

தேவனே ! லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! புலன்கள் என்னும் பெயருடைய வலிமையுடைய திருடர்களால் குருடான என்னுடைய பகுத்தறிவு என்னும் பெருஞ்செல்வம் கவரப்பட்டு மோஹம் என்னும் இருண்ட பாழும் கிணற் றில் தள்ளப்பட்ட எனக்குக் கை கொடுத்தருள வேண்டும். 

பிரஹ்லாதன், நாரதர், பராசரர், புண்டரீகன், வியாஸர் முதலான சிறந்த பக்தர்களின் இதயத்தில் குடியிருப்பவனே! பாரிஜாதம் (மரம்) போன்று பக்தர்களை பரிவுடன் காத்தருள்பவனே! லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப் பெருமானே! எனக்கு கை கொடுத்தருள வேண்டும்.

லக்ஷ்மியுடன் கூடிய ந்ருஸிம்ஹப்பெருமானின் திருவடித்தாமரைகளில் (அமர்ந்த) தேனீ போன்ற சங்கரரால் இப்புவியில் நன்மை பயக்கும் இத்துதியானது செய்யப்பட்டது. எவர்கள் திருமாலிடம் பக்தி உடையவர்களாக இத்துதியைப் படிக்கின்றார்களோ அவர்கள் இன்பமயமான அந்தத் திருவடித்தாமரையை அடைகின்றார்கள்.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...