Friday, August 16, 2024

Sani Bhagwan Kavasam | பக்தரைக் காக்கும் பகலவன் மகனே

பக்தரைக் காக்கும் பகலவன் மகனே நித்தமும் உன்னை நான் துதிப்பேனே காகம் ஏறும் கரியவன் நீயே சோகம் நீக்கி அருளிடுவாயே

மையென்னும் நிறத்தை உடையவன் நீயே தைரியம் நெஞ்சில் கொண்டவன் நீயே சரசரவென்று சடுதியில் வருக சங்கடம் தீர்க்க நீயே வருக 

உன்னருள் பெறவே உலகோர் முனைய எண்ணில்லாத நலமே விளைய ஈசன் பட்டம் சூடிய உன்னை என்றும் வணங்க நீயருள்வாயே

யோகம் பலதந்து காப்பவன் நீயே பாவம் விலக உனைப்பணிவோமே கருணை காட்ட காரி வருக கைத்தொழுவோமே சனியே வருக

அசுப கிரகம் என்றிருந்தாலும் முயற்சியும் பக்தியும் ஒருங்கே கொண்டு காசியில் நீயும் லிங்கம் அமைத்து ஈசனை நோக்கி கடுந்தவம் புரிந்தாய்

அருந்தவம் அறிந்து சிவனும் தோன்றி விரும்புவதென்ன என்றே கேட்க மகிழ்வுடன் நீயும் ஈசனை பணிந்து மனதினில் இருப்பதை எடுத்துரைத்தாயே

ஒன்பது கோளில் உயர்ந்தவன் நான் என உலகம் உணர்ந்திட வேண்டும் என்று ஈஸ்வரன் என்ற பெயரும் தன்னுடன் இணைந்திட வேண்டும் என்றுரைத்தாயே

பரமனும் உந்தன் கோரிக்கையேற்று அருள்புரிந்தார் அகம்மகிழ்ந்தாரே அதுமுதல் நீயும் சனீஸ்வரன் என்று அகிலம் அழைக்க உயர்வடைந்தாயே

வாழ்வில் உன்னை வணங்குவதாலே வரும் இடர் குறைந்து வளம்பெறுவோமே ஏழ்மை விலக ஏற்றம் தொடர என்றும் எமக்கு நீயருள்வாயே

தீராத நோயும் தீமை பலவும் காரி உன் அருளால் கரைந்தே போகும் அல்லலை அகற்றும் அற்புதன் நீயே அதனால் உன்னை வணங்கிடுவோமே

துர்கையை வணங்கும் தூயவன் நீயே.. எமதர்மராஜனின் சோதரன் நீயே எள்ளு தீபம் ஏற்றியே உந்தன் இணையடி வணங்கி நலம்பெறுவோமே

கருநிற ஆடை அணிந்தவன் நீயே கருநீல மலரை சூடிடுவாயே இரும்பு உலோக அதிபதி நீயே எங்களை காக்க உளம்கனிவாயே

மகரம் கும்பம் ஆட்சி வீடு ரிஷபம் மிதுனம் நடு வீடு கடகம் சிம்மம் பகையல் கொண்டு கைத்தொழுதோரை காப்பவன் நீயே

குருவின் சிறிதாய் தோன்றிய போதும் உதவியில் பெரிதாய் உயர்த்திடுவோனே திருநள்ளாறில் தலமுடையோனே திருவடிபணிந்தேன் காத்திடு நீயே

சன்னதி தனியே கொண்டவன் நீயே சங்கடம் தீர்க்கும் மன்னவன் நீயே வாராய் வாராய் வரம் தர வாராய் தாராய் தாராய் நலமே தாராய்

நிடதநாட்டு நளமகாராஜன் இடர் பல அடைந்து தோஷம் நீக்க உன்னிடம் வந்து உனைத்தொழுதானே இன்னலை விடுத்து நிலை உயர்ந்தானே

உன்னிடம் வந்து குறைகளைச் சொன்னால் உதவிடும் நல்ல உயர்குணத்தோனே பண்ணிய பாவம் பனியென மாற தந்திடுவாயே நீ உன் அருளே

தோஷம் கண்ட பலரும் உந்தன் ஆலயம் வந்து நிவர்த்தி கண்டார் க்ஷேமம் தந்து சிறப்புகள் தந்து ஜகமதில் நீயே வாழ வைப்பாயே

அவந்தி மன்னன் குருசீராஜன் ஒருமுறை மனதில் மையம் கொண்டான் தானத்தில் உயர்ந்த தானம் எதுவென பரத்வாஜ முனிவரை பணிவுடன் கேட்டான்

தானம் யாவிலும் உயர்ந்தது என்றும் அன்ன தானம் என்றவர் சொன்னார் காலம் அறிந்து அதனை செய்வது சாலச்சிறந்தது என்றுரைத்தாரே

திருநள்ளாறு திருத்தலம் சென்று அங்கே செய்யும் அன்ன தானமே உலகில் பெரிதும் சிறந்தது என்று மாமுனி சொல்ல மன்னன் மகிழ்ந்தான்

ரிஷியின் வாக்கை சிரமேல்கொண்டு உன் தலம் வந்து அறமே புரிந்தான் அதனால் அரசன் ஆயிரமாயிரம் நன்மை அடைந்து நலமுற்றானே

வாழ்க வாழ்க சனைச்சரன் வாழ்க 
வாட்டம் போக்கும் காரி வாழ்க சூழும் இடரை கலைவோன் வாழ்க சூத்திரதாரி நீயே வாழ்க

உன்பதம் பணியும் அடியார் வாழ்க உன்னருள் வேண்டும் அன்பர்கள் வாழ்க துன்பம் தீர்க்கும் தூயோன் வாழ்க துணிவை அதிகம் கொண்டோன் வாழ்க

திருச்செங்கோடில் அருள்வோன் வாழ்க திருவையாற்றில் இருப்பான் வாழ்க ஓமாம்புலியூர் சனியே வாழ்க உன்புகழ் சொல்லும் உத்தமர் வாழ்க.

கணிந்தருள் செய்யும் கதியோன் வாழ்க கைத்தொழுதோரை காப்போன் வாழ்க கடும்பிணி நீக்கி அருள்வோன் வாழ்க

மேற்கு திசையை உடையவன் நீயே மேன்மைகள் வாழ்வில் தருபவன் நீயே தங்கக்கவசம் ஒன்பது கொண்டு தாழ்பணிந்தோரை காப்பது நன்று

கேட்கும் வரங்களை தருபவன் நீயே கேடுகள் களைந்து காப்பதும் நீயே உன்னைப்போல் கொடுப்பாரில்லை உனக்கொரு ஈடு எங்கும் இல்லை.

தவறுகள் செய்தால் தண்டிப்பவனே தருணம் பார்த்து நலம் புரிபவனே அவதிகள் விலக அருள்பவன் நீயே அனைவரும் வாழ வரம்கொடு நீயே

கெடுபலன் குறைத்து நற்பலன் தருக நடுநிலையோடு நீதி தருக கொடுமைகள் அழிய காற்றாய் வருக குவலயம் செழிக்க நீயருள் புரிக

இந்திரன் முதலாய் அனைவரும் உந்தன் பார்வையில் படவே நடுங்கிடுவாரே அன்பரைக் காக்க அருள் கரம் தருக வந்திடும் பேர்க்கு அபயம் தருக

நற்றுணையாக வருபவன் நீயே நலமே நாளும் தருபவன் நீயே பற்றிட வந்தேன் உன்திருப்பதமே பரிவுடன் நீயும் பார்த்திடுவாயே

வேலனை வேங்கை மரமெனச் செய்தாய் விறகினை சிவனாய் விற்கவும் செய்தாய் பாலனை உரலுடன் கட்டிட வைத்தாய் ஈசனை காலனால் உதைபட வைத்தாய்

யாவும் உந்தனின் திருவிளையாடல் போதும் போதும் நீ தரும் ஆடல் வாழ்வில் என்றும் வளமை தரவே வணங்கிடுவேனே நின்திருவடியே

யாரும் உந்தன் பார்வையில் இருந்து விலகுதல் அரிது என்பது நியதி வேதம் இன்றி அவரவர் புரிய வினையின் பலனை தருபவன் நீயே

தலைமுதல் கால்வரை உடலின் உறுப்பை தடையற என்றும் நீயே காக்க நரம்பும் சதையும் நலமுடன் விளங்க நல்லருள் தந்து எந்தனை காக்க

இருவிழிதன்னை இதமாய் காக்க இருதயம் சிறந்த இயந்திட காக்க இருகை கால்களை திடமுடன் காக்க எல்லா திசுவும் செயல்பட காக்க

செவிகள் இரண்டை சிறப்புடன் காக்க செப்பும் வாயினை சீருடன் காக்க நறுமணம் நுகரும் நாசியை காக்க நலிவடையாமல் நீயே காக்க

வலியுடை தோள்களை வளமுடன் காக்க
இரு தொடை முழங்கால் இதனுடன் காக்க 
ஆண் பெண் குறிகளை அன்புடன் காக்க 
பேரிடர் இன்றி பரிவுடன் காக்க

தீவினை எதுவும் தீண்டாமல் காக்க தெய்வம் போலெ நீயே காக்க பாவம் யாவும் பொடிபட காக்க பலவித இடரை தடுத்தெனை காக்க

மழையினில் இருந்து மக்களை காக்க புயலில் இருந்து உயிர்களை காக்க நெருப்பினில் இருந்து நித்தம் காக்க நிலநடுக்கம் எதும் நேராமல் காக்க

கோள்களின் இயக்கம் குறைவற காக்க இயற்க்கை சீற்றம் நிகழாது காக்க
போர்குணம் நெஞ்சில் பொசுங்கிட காக்க புவிவாழ் மக்களை பொறுப்புடன் காக்க

வாகன விபத்து வருவதை தடுத்து வாஞ்சையுடனே பக்தரை காக்க ஞாபக சக்தி நாளும் கூட்டி நலமே பெறுக எங்களை காக்க

திதியின் பிடிகள் தளர்ந்திட காக்க வேற்றுமை நினைவை விரட்டியே காக்க மதியின் கூர்மை மலையென பெறுக மலரடி நானும் பணிந்திடுவேனே

வாழ்க வாழ்க நின்புகழ் வாழ்க! வரும் வினை போக்கும் வல்லோன் வாழ்க காரியென்னும் சனீச்சரன் வாழ்க காக்கும் கரங்கள் உடையோன் வாழ்க

சாயாதேவியின் மைந்தன் வாழ்க சமநிலையுடையோன் குணத்தோன் வாழ்க தேவரை மூவரை மானிட இனத்தை நியாய தராசில் இடுவோன் வாழ்க

அஞ்சா நெஞ்சம் உடையவன் வாழ்க அண்டங்கள் நடுங்கச் செய்பவன் வாழ்க நெஞ்சார துதித்தால் நன்மைகள் வழங்கும் நீதியின் அரசன் நித்தம் வாழ்க

பிணிகளை நீக்கும் பெரியவன் வாழ்க! பிழைகளை பொறுக்கும் நல்லவன் வாழ்க இணையில்லாத ஈஸ்வர பட்டம் ஏந்திய எங்கள் இறையே வாழ்க

திருநள்ளாறு தலமே வந்து தீர்த்தம் தனிலே நீராடி உன்னை இருக்கரம் குவித்து பணிந்தவர்க்கெல்லாம் இன்பம் ஒன்றே நீதருவாயே

அடியவர் வாழ்வில் தோஷம் நீக்கி தடைகளை அகற்றி தருவாய் பலனே விடியலை வழங்கும் வேந்தனும் நீயே வெற்றிகள் தந்து காத்திடுவாயே

கருந்துணியெடுத்து எள்ளினை முடிந்து நல்லெணெய் தீபம் நாளும் ஏற்ற வழிபடும் அன்பரை வளமுறச் செய்து வையகத்தோரை உயர்த்திடுவாயே

எல்லாக் குறையும் எல்லா இடரும் நில்லாதோட நீயருள் புரிக பொல்லா பில்லி சூனியம் விலக்கி பொங்கும் மகிழ்வை நீயே தருக

திருவுளம் கொண்டு தீமைகள் அகற்றி திருவருள் தந்து காத்திடு நீயே சிவனை வணங்கும் அடியவர் தம்மை சீக்கிரம் நீயே பெற்றிடுவாயே

அனுமனை நினைக்கும் அன்பரையெல்லாம் அழகாக நீயும் அரவணைப்பாயே ஐங்கரன் பாதம் தொழுதிடுவோரை ஆபத்திலிருந்து காத்திடுவாயே

கரியவன் உந்தன் பாதம் போற்றி காக்கை வாகனன் சனியே போற்றி உருவினில் சிறிய வடிவே போற்றி உதவியே அருளும் உத்தமா போற்றி

சரணம் சரணம் உன்தாழ் சரணம் சரணம் சரணம் உன்னருள் சரணம் சரணம் சரணம் சனீஸ்வரா சரணம் சரணம் சரணம் சனீஸ்வரா சரணம்

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...