Thursday, August 15, 2024

துளசி அஷ்டோத்திர சதநாம ஸ்தோத்திரம் தமிழ்| Shri Tulasi Ashtothra Sathanama Sthothram Tamil

தனது வேரின் அடியில் சகல தீர்த்தங்களையும், நடுவில் சர்வ தேவதைகளையும், நுனியில் சர்வ வேதங்களையும் கொண்ட ஸ்ரீதுளசியை நமஸ்கரிக்கிறேன்.


தன்னை தரிசிப்போரது சகல பாவங்களையும் போக்குபவள். தன்னை ஸ்பரிசிப்போரது  மேனியைத் தூய்மைப்படுத்துபவள். தன்னை வணங்குவோரது சகல நோய்களையும் தீர்ப்பவள். தனக்கு நீர் வார்ப்போரைக் கண்டு எமனும் நடுங்குமாறு செய்பவள். தன்னை விதிப்படி பிரதிஷ்டை செய்பவர்களை, ஸ்ரீகிருஷ்ணரது அன்புக்குரியவர்களாகச் செய்பவள். தன்னை பூஜித்தால் மோக்ஷத்தை நல்குபவள். அத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீதுளசியை வணங்குகிறேன்.

 ஸ்ரீ துளசி, பவித்ரமானவள், பூஜிக்கத் தகுந்தவள், பிருந்தாவனத்தை வாசஸ்தலமாகக் கொண்டவள், ஞானம் நல்குபவள், ஞானமயமானவள், எவ்விதக் களங்கமும் அற்றவள், எல்லோராலும் பூஜிக்கப்படுபவள்.

ஸ்ரீ துளசியானவள், கற்புக்கரசி, பதிவிரதை. பிருந்தா என்ற ரூபமுடையவள். பாற்கடலைக் கடைந்த போது தோன்றியவள், கறுப்பு, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வித வண்ணங்களை உடையவள். எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவள்.

ஸ்ரீ துளசி தேவி, ஸ்ரீதேவியின் தோழி. எப்போதும் சுத்தமானவள். அழகிய பற்கள் உடையவள், பூமியைப் புனிதமாக்குபவள், எப்போதும் ஸ்ரீஹரியையே தியானிப்பவள், பகவானது பாதத்தையே தன் இருப்பிடமாகக் கொண்டவள்.

ஸ்ரீ துளசி, புனிதத்தின் திருவுருவமானவள். மிகச் சிறந்தவள், நல்ல வாசனையுள்ளவள், அமிர்தத்தோடு கூடவே தோன்றியவள், நல்ல தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் தருபவள், மகிழ்ச்சியானவள். துர்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி ஆன மூன்று சக்திகளின் திருவடிவானவள்.

ஸ்ரீ துளசி தேவி மிகப் பிரகாசமானவள், தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்படுபவள், அழகிய திருவுருவம் உடையவள், ஸ்ரீவிஷ்ணுவின் மனதிற்குப் பிரியமானவள், பூதம், வேதாளம் முதலியவற்றால் உண்டாகும் பயத்தை நீக்குபவள், மஹா பாபங்களைப் போக்குபவள்.

ஸ்ரீ துளசி தேவி, விருப்பங்களை நிறைவேற்றுபவள். மேதைத் தன்மை மற்றும் நுண்ணறிவு அவற்றின் வடிவமானவள், ஒளி ரூபமானவள், வெற்றியை அளிப்பவள், சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றைத் தரித்திருப்பவள்,  தன் விருப்பத்திற்கேற்ற ரூபத்தை எடுக்கும் சக்தியுடையவள்.

மோட்சத்தைத் தருபவள், கரும்பச்சை வர்ணம் உள்ளவள், என்றும் இனிமையானவள், மெல்லிய இடை உடையவள், அழகான கேசமுள்ளவள், வைகுண்டத்தை வாசஸ்தலமாக உடையவள், ஆனந்தத்தை அளிப்பவள், கோவைப்பழம் போன்ற உதடுகள் உள்ளவள், குயில் போன்ற குரல் உடையவள்.

பொன்னிறமானவள், கண்டகி நதி உண்டாகக் காரணமானவள், ஆயுள் விருத்தியைத் தருபவள், வன ரூபமானவள், துக்கத்தை நசிப்பவள், மாறுதல் இல்லாத, இறைவனைப் போன்றவள், நான்கு திருக்கரங்களை உடையவள்.

கருடனை வாகனமாக உடையவள், சாந்தமானவள், புலனடக்கம் நிரம்பியவள், துன்பங்களைப் போக்குபவள், ஸ்ரீவிஷ்ணுவின் மூலிகையாக உள்ளவள். நன்கு வளர்ந்த தேகமுடையவள், தர்ம, அர்த்த காம பலன்களைத் தன்னை உபாசித்தவர்களுக்கு அளிப்பவள்.

மூன்று சக்திகளுக்கும் மேலான சக்தியானவள். மஹாமாயையின் ஸ்வரூபமானவள், லக்ஷ்மீயாலும், சரஸ்வதியாலும் பூஜிக்கப்படுகின்ற‌வள், சுமங்கலிகளைப் பூஜித்தால் சந்தோஷமடைபவள். சகல மங்கலங்களையும் விருத்தி செய்பவள்.

சாதுர்மாஸ்ய உத்சவ காலத்தில் விசேஷமாகப் பூஜிக்கத் தக்கவள்.  சாதுர்மாஸ்யத்தில் தன்னை பூஜிக்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சந்நிதானமான வைகுண்டத்தை அடையும் பாக்கியம் அளிப்பவள், உத்தான துவாதசியில் விசேஷமாகப் பூஜிக்கத்தக்கவ‌ள். சகல தேவர்களாலும் பூஜிக்கப்படுகின்றவள்.

கோபியர்களுக்கும் அவர்கள் ப்ரேமை கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கும் இடையில் அன்பு பாலமாக இருப்பவள். அழிவற்றவள், முக்குணங்களுக்கப்பாற்பட்டவள், பார்வதி தேவிக்குப் பிரியமானவள், துளசிவனம் உள்ள இடத்தில் அகால மரணம் ஏற்படாது, ராதா தேவிக்கு மிகவும் பிரியமானவள், மான் போன்ற விழிகளை உடைய‌வள்.

வாடாத ரூபமுள்ளவள், அன்னம் போன்ற நடையழகை உடையவ‌ள், கமலாசனத்தில் வீற்றிருக்கும் பிரம்ம தேவரால் வணங்கப்படுகின்றவ‌ள், பூலோகத்தில் வாசம் செய்பவ‌ள், சுத்தமானவள், ராமகிருஷ்ணாதிகளால் பூஜிக்கப்பட்டவள்.

சீதா தேவியால் பூஜிக்கப்பட்டவள், ஸ்ரீராமனது மனதிற்குப் பிரியமானவள், ஸ்வர்க்கத்தை அடைவிப்பவளாக இருப்பவள், சகல புண்ணிய தீர்த்த மயமானவள், மோட்ச வடிவானவள், உலகை சிருஷ்டிப்பவள்.

காலையில் தரிசிக்கத்தக்கவள், உடல் மற்றும் மனதின் களைப்பை அகற்றுபவள்.

ஸ்ரீவிஷ்ணுவின் பத்தினியாக விளங்குபவள், சகல சித்திகளையும் தருபவள், நாராயண ஸ்வரூபமானவள், சந்ததியை நல்குபவள், தன் வேரின் மண்ணை பக்தியுடன் அணிபவரைப் புனிதப்படுத்துபவள்.

அசோகவனத்தில் உள்ளவள், சீதையால் தியானம் செய்யப்பட்டவள், தானே தனக்குப் புகலிடமானவள், கோமதீ, சரயூ ஆகிய புண்ணிய நதிகளின் கரையில் தோன்றி வளர்பவள். சுருண்ட கூந்தலை உடையவ‌ள்.

தகாதவர் உணவைப் புசித்த பாவத்தைப் போக்குபவள், தானம் செய்யும் போது விடும் நீரைச் சுத்தமாக்குபவள் பிரசாதமாகக் காதில் அணிந்தால் மிக்க சந்தோஷம் அடைபவள், மங்களமானவள், விரும்பிய எல்லாம் அனைவருக்கும் அளிப்பவள். அத்தகைய மகிமை பொருந்திய துளசி தேவியை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...