Sunday, August 18, 2024

சந்தோஷி மாதா துதி | Santhoshi Matha Thuthi

1.தேவிவந்தாள் தேவி வந்தாள் சந்தோஷம் தந்திட தேவி வந்தாள் தேடிவந்தாள் என்னைத் தேடி வந்தாள் ஸ்ரீதேவி என்னைத் தேடி வந்தாள்

2.ஆவணி மாதத்து பௌர்ணமியில் அன்புடன் தேவி அவதரித்தாள் தூமணி தீபமாய் அவதரித்தாள்
துன்பங்கள் ஓட்டிட அவதரித்தாள்


3.கணேச புத்திரர் தங்களுக்கே ரட்சை அணிவிக்க தேவி வந்தாள் லக்ஷ்மி வாணி பார்வதியின் அருள்தனைப்பெற்று அவதரித்தாள்

4.சித்தி புத்தியின் புதல்வியாக சித்தத்தை மகிழ்விக்க அவதரித்தாள் நித்தியம் அவளை நினைத்திடவே சக்திதேவியாய் அவதரித்தாள்.

5. வெள்ளி கிழமையில் தேவி வந்தாள் வேதனை தீர்க்க தேவி வந்தாள் கொள்ளை அழகுடன் விளங்குகின்றாள் குழந்தைகள் மனதைக் குளிர்விப்பாள்.

6. உணவினில் புளிப்பை நீக்குகின்றாள் மனதினில் களிப்பை வழங்குகிறாள் கணவனைப் பிரிந்த காரிகைக்கே கஷ்டத்தை நீக்கி கூட்டுவிப்பாள்

7. கொடுமைகள் நடப்பதை தடுத்திடவே கும்பிடுவோரைக் காத்திடவே கடுமையுடன் விரதம் செய்வோர் கஷ்டம் நீக்க வருகின்றாள்

8. மனைவியை மறந்த மனம் அதனை மாற்றி நினைவில் வரவழைப்பாள் வினைகளை நீக்கி தம்பதிகள் சுகமாய் வாழ அருள் செய்வாள்.

9.செல்வத்தை நாடும் எளியோருக்கு சிந்தை குளிர பணம் அளிப்பாள் கல்வியைத் தேடும் இளையோருக்கு கண்ணாய் கல்வியைத் தருகின்றாள்

10. பகைதனை அழிக்க வீரம் கொண்டு பதிவிரதைகளைக் காக்கின்றாள். நகையுடன் நல்ல உடையளித்து சுமங்கலியாக வாழவைப்பாள்.

11.உதாரணம் சொல்ல முடியாத - அழகைக் கொண்டாள் சந்தோஷி அவமானம் தன்னையும் நீக்குகின்றாள் அவளை அன்புடன் நீ நேசி

12.இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கவே அருள்வாள் அன்னை சந்தோஷி சொல்லினில் இனிமை ஏற்றுகின்றாள் அன்புடன் அவளை நீ நேசி

13.வாணியும் லக்ஷ்மியும் பார்வதியும் வியக்கும் வகையில் விளங்குகின்றாள் நானிலம் அவளே வணங்குவதால் மூவரின் அருளே அடைந்திடலாம்

14. பிரிந்த கணவரைக் கூட்டுவிப்பாள் மனதில் இன்பம் ஊட்டிவிடுவாள் சரிந்த வாழ்க்கை இனிதல்ல என்றே சொல்லி சிரித்திடுவாள்

15. இரக்கம் கொண்டவள் இவளே தான் இன்பம் தருவாள் இவளேதான் சுரக்கும் அன்பினில் துணை இருப்பாள் தீபத்தின் ஒளியில் குடியிருப்பாள்

16. கடன்களைத் தீர்த்து கருணை செய்வாள் கற்புடை மாந்தரைக் காத்திடுவாள் உடன் பிறந்தோரை மகிழ்விப்பாள் உண்மை அன்பாய் விளங்குகின்றாள்

17. வறுத்த கடலை வெல்லத்துடன் பிரியமாய் படைத்தால் மகிழ்ந்திடுவாள் பெருத்த செல்வச் சீமானாய் வணங்குவோரை வாழவைப்பாள்.

18. இச்சையுடன் தன்னை நாடி வந்தால் இன்பம் தருவாள் ஸ்ரீதேவி அச்சத்தைத் தருவாள் பகைவருக்கே அன்புடை தெய்வம் ஸ்ரீதேவி

19. இத்தரை மீதிலே அவதரித்தே இன்பம் தருவாள் ஸ்ரீதேவி புத்திர பாக்கியம் தருகின்றாள் புண்ணிய தெய்வம் சந்தோஷி

20. மருமகள் மாமியார் ஒற்றுமையை தந்திடுவாளே ஸ்ரீதேவி திருமகள் அவளைச் சரணடைவோம் திவ்ய ஜோதி சந்தோஷி

21. பதைத்திடும் மனதில் பரிவுடனே ஆறுதலிப்பாள் சந்தோஷி கதைகளைக் கேட்பவர் வாழ்த்திடுவார் நாரத முனிவரே தான் சாட்சி 

22. கூடிவாழும் குடும்பத்திலே குத்துவிளக்காய் ஒளிர்ந்திடுவாள் வாடிடும் நிலையில்லை என்றிடுவாள் வாசம் செய்வாள் சந்தோஷி

23. காலதேசம் கடந்தவளாம் கற்புடை அணிகலன் அவளேதான் காலப்பயத்தையும் நீக்கிடுவாள் கஷ்டங்கள் யாவையும் போக்கிடுவாள்

24. மங்கையர் கும்பிடும் சந்தோஷி மாமணி தீபமே சந்தோஷி நங்கையர் நாயகி ஸ்ரீதேவி நானிலம் போற்றும் சந்தோஷி

25. சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பாய் திவ்ய ரூபமே சந்தோஷி அம்மா உன்னை வணங்குகின்றேன் அன்புடனே காத்திடுவாயே ஸ்ரீதேவி.

26. பாரினில் ஆட்சி செய்கின்றாய் கருணை கண்களால் பார்க்கின்றாய் ஆரத்தி ஏற்பாய் சந்தோஷி மாதா நீயே சரணம் என்பேன்

27.ஜெய்ஜெய் மாதா சந்தோஷி ஜெகத்தினை நீயே காத்திடுவாய் ஜெய்ஜெய் மாதா சந்தோஷி சிறப்புடன் ஆரத்தி ஏற்றிடுவாய்

No comments:

Post a Comment

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...