Monday, September 30, 2024

Sri Lakshmi Namanashtakam - ஸ்ரீ லக்ஷ்மீ நமநாஷ்டகம்

உயர்ந்தது அனைத்திலும் உயர்ந்தவளாம் உலகுக்கெல்லாம் தாய் அவளாம்
அன்புக்கரங்களில் சக்கர‌ம், கதையும் அழகுச் சங்கும் தாங்கியவளாம்
மாயா சக்தியை தோற்றுவிக்கும் மஹாமாயை அவளாவாள்
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியை வணங்குகின்றேன்.
 
முதலும் இல்லா முடிவும் இல்லா முழுமுதற் கடவுள் நிச்சயம் நீ !!
மூவுலகுக்கும் ஆதாரமாய் நிற்கும் மூலப் பொருளும் பத்மினி நீ !!
அலைகடல் துயிலும் திருமால் விரும்பும் அற்புதப் பொக்கிஷம் தேவி நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

எங்கும் நிறைவாள் எதற்கும் சாட்சி என்னுயிர் நீயே ஸ்ரீலக்ஷ்மி!!
தூய நன் மனதில் குடி கொண்டருள்வாள் மன்னுயிர் மாதா ஸ்ரீலக்ஷ்மி!!
சாந்தரூபிணி சகலமும் அறிவாள் பாற்கடல் தந்த ஸ்ரீலக்ஷ்மி!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்

விழிகள் தாமரை, அமர்வதும் தாமரை, நிறமும் தாமரை, தாமரை நீ!!
மாதவன் கருணை உயிர்களுக்களித்திடும் மங்கல உருவாம் அம்பிகை நீ!!
முக்தியளித்திடும் மூலமும் நீயே மூவுலகும் தொழும் அற்புதம் நீ!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

தூயநல் ஆடை அணிந்தே அருள்வாய், தூயவள் நீயே திருமகளே!!
திறமிகு கருடனைக் கொடியில் கொண்டாய் திருவருள் நீயே திருமகளே!!
அலங்கார ரூபிணி, அன்புக் கடல் நீ, கருணை பொழிவாய் திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

துக்கக் கடலில் மூழ்கிடுவோரின் துயரம் தீர்ப்பாய் பொன்மகளே!!
அரவினில் துயிலும் அன்பன் மனதில் அகலாதுறையும் அலைமகளே!!
பகவதி நீயே பாக்கியம் தந்திடும் பரம்பொருள் நீயே திருமகளே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்

சித்தியும் புத்தியும் தந்திடுவாய் நீ சிறப்புகள் தருவாய் அருளமுதே!!
இகபர சுகமும் இனிதான ஆயுளும் இணையாய் அருள்வாய் இன்னமுதே!!
மழலை பாக்கியமும், மனம்நிறை வாழ்வும் மகிழ்ந்தே தருவாய் தெள்ளமுதே!!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

பொருளை அருளும் பொற்செல்வி, புகழும் அருள்வாய் தாயே நீ!!
ஏழ்மை அகற்றி ஏற்றம் தருவாய் என் துணை வருவாய் தாயே நீ!!
வைபவம் அருளும் வைபவ லக்ஷ்மி வளங்கள் தருவாய் தாயே நீ !!
அருளின் மழையாம் அமுதப் புனலாம் அன்னை லக்ஷ்மியே!! வணங்குகின்றேன்.

நல்லன அருளும் நமனாஷ்டகம் இதை நாளும் துதித்து நலம் பெறுவோம்!!
பக்தியாய் படித்தாலும் படிப்பதைக் கேட்டாலும் பவவினை தீரும் சுகமடைவோம்!!
நிதமும் துதித்து நமஸ்கரித் தெழுந்தால் நிலமெல்லாம் போற்றும் நிச்சயமே!!
நினைப்பது நடக்கும் கேட்டது கிடைக்கும் திருமகள் அருள்வாள் சத்தியமே!!

Sunday, September 29, 2024

விஷ்ணு கவசம் தமிழ்| Vishnu kavasam tamil

அமைதியின் வடிவோன், அரவத்தில் துயில்வோன்
உந்தியில் மலரோன் தேவனே!
அகிலத்தின் மூலோன், விண்ணென விரிந்தோன்
முகில்களின் நிறத்தோன், அழகனே
திருமகள் துணையோன், தாமரை விழியோன்
யோகியர் உளக் கோயிலோன்!
பவபயம் தீர்த்து உலகங்கள் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவை வணங்குகின்றேன்!

கிழக்கினில் என்னை ஸ்ரீஹரி காக்க! மேற்கினில் என்னை சுதர்சனன் காக்க!
கிருஷ்ணன் என்னை தெற்கினில் காக்க! திருவின் நாயகன் வடக்கில் காக்க!
ஆனந்தம் தருவோன் மேற்புறம் காக்க! சார்ங்கம் கொண்டோன் கீழ்புறம் காக்க!
மலர்பதம் உடையோன் பதங்களை காக்க! நலமுடன் முன் தொடை ஜனார்தனன் காக்க !

த்ரிவிக்ரமன் எந்தன் பின் தொடை காக்க! ஸ்ரீ ஜகந்நாதன் முட்டியைக் காக்க!
ஸ்ரீ ரிஷிகேசன் குறிகளைக் காக்க! அழிவில்லாதோன் பின்புறம் காக்க!
அனந்தனே என்றும் உந்திசுழி காக்க! அரக்கனை வென்றோன் தொந்தியை காக்க!
நலமுடன் இதயத்தை தாமோதரன் காக்க ! நரஹரி மார்பினை திடமுடன் காக்க!

காளிங்கனை வென்றோன் கரங்களை காக்க! கஷ்டங்கள் தீர்ப்போன் புஜங்களை காக்க !
கார்முகில் நிறத்தோன் கழுத்தினைக் காக்க! கம்சனை வதைத்தோன் தோள்களைக் காக்க!
நாசியை நலமுடன் நாரணன் காக்க! கேசியை வென்றவன் செவிகளைக் காக்க !
கபாலம் தன்னை வைகுந்தன் காக்க! தயாளன் எந்தன் நாவினைக் காக்க!

கருநீல விழியோன் கண்களைக் காக்க! புருவத்தை பூதேவி நாயகன் காக்க !
பத்துதலை தகர்த்தோன் வாயினைக் காக்க! அச்சுதன் என்றும் நெற்றியைக் காக்க!
முகத்தினை பொலிவுடன் கோவிந்தன் காக்க! சிரத்தினை கருட வாகனன் காக்க!
பக்தரை விரும்புவோன் நோய்தீர்த்து காக்க! அங்கங்கள் யாவும் சேஷசாயி காக்க!

பிசாசு,நீர்,தீ தொல்லைகளி லிருந்து வாமனன் என்னை என்றும் காக்க!
என்னை துரத்தும் இன்னல்களி லிருந்து புருஷோத்தமனே என்றும் காக்க!
பிணிகளை தீர்க்கும் பகைகளை அழிக்கும் மங்கலம் அளிக்கும் ஸ்ரீவிஷ்ணு கவசம் இது!

Tuesday, September 24, 2024

ராமானுஜர் 108 போற்றி தமிழ்| Ramanujar 108 potri tamil

ஆதிஷேஸனே ராமானுஜா
ஹரியின் அணையே ராமானுஜா
ஆனந்தம் தருவாய் ராமானுஜா
ஹரியின் குடையே ராமானுஜா
அப்பனுக்கு குருவே ராமானுஜா
ஆறுவார்த்தை அருளிய ராமானுஜா
ஷேஸா சலமே ராமானுஜா
தோஷ நிவாரணா ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
பாப விமோஷனா ராமானுஜா
பலராமானுஜா ராமானுஜா
பாஷ்ய காரனே ராமானுஜா
பக்திக்கும் முக்திக்கும் ராமானுஜா
பாகவத ரட்ஷகா ராமானுஜா
பக்திக் கடலே ராமானுஜா
பரமபத சாரதி ராமானுஜா
பந்துக்கள் நீயே ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
சாந்த ஸ்வரூபா ராமானுஜா
சமயமறுத்தாய் ராமானுஜா
சத்திய ஸ்திரமணி ராமானுஜா
சமத்துவ ஏகனே ராமானுஜா
சீராரு மெதியே ராமானுஜா
சீர்சீல சிகாமணி ராமானுஜா
ஸ்ரீ ராமப்ரியா ராமானுஜா
ஸ்ரீ ரங்க சீலமே ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
புண்ணிய கீர்த்தி ராமானுஜா
புகழ் மலிந்தோனே ராமானுஜா
பூதபுரி நாதனே ராமானுஜா
பூலோகம் காப்பாய் ராமானுஜா
பூத நாதனே ராமானுஜா
புன்னகை வடிவே ராமானுஜா
பக்த அனுகூலா ராமானுஜா
பாக்ய பர்வதமே ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
முக்கோல் முனியே ராமானுஜா
முப்புரி நூலொடு ராமானுஜா
ஜெகதாச்சார்யனே ராமானுஜா
ஷேஸமூர்த்திம் ராமானுஜா
பெரும்பூதூர் முனியே ராமானுஜா
பெரிய பெயர் பெற்றவா ராமானுஜா
உய்ய ஒரே வழி ராமானுஜா
உடையவர் திருவடி ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
இளையாழ்வாரே ராமானுஜா
இன்புற்று வாழ ராமானுஜா
எம்பெருமானாரே ராமானுஜா
எங்கள் குருவே ராமானுஜா
வேதாந்த தீபமே ராமானுஜா
விண்ணோர் வியக்கும் ராமானுஜா
வேங்கடப்ரியனே ராமானுஜா
வெற்றியின் முதலே ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
காஷாய கனகா ராமானுஜா
கலியுக ப்ரபுவே ராமானுஜா
நினைவே நீயாய் ராமானுஜா
நித்ய சூரி ராமானுஜா
என்றும் உறுதுணை ராமானுஜா
எதிகளின் ராஜனே ராமானுஜா
அருளை அருளும் ராமானுஜா
அமிர்த கலசமே ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
ஞானபீடமே ராமானுஜா
ஞாயிறு ஒளியே ராமானுஜா
வேத நாதனே ராமானுஜா
வேள்வியும் நீயே ராமானுஜா
வைர கிரீடா ராமானுஜா
வைராக்ய வசந்தமே ராமானுஜா
இல்லை எனக்கெதிர் ராமானுஜா
இதயத்தில் நீயே ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
தமிழ் மறை தனயா ராமானுஜா
தானான மேனியே ராமானுஜா
எழில் ஞான முத்திரை ராமானுஜா
எல்லாம் உடையவரே ராமானுஜா
நிம்மதி தந்தாய் ராமானுஜா
நிஜமென்றால் நீயே ராமானுஜா
ஆதியின் துணையே ராமானுஜா
ஹரியின் பீடனே ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
தானுகந்த மேனி ராமானுஜா
தன்நலம் கருதா ராமானுஜா
கனக நற்சிகை ராமானுஜா
கலியின் கண்மணி ராமானுஜா
கற்பக விருட்ஷமே ராமானுஜா
காரிருள் அகற்றினாய் ராமானுஜா
திருவாதிரை திருவே ராமானுஜா
தமர் உகந்தமேனி ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா
நல்வகை நயனா ராமானுஜா
நாராயணபுரத்து ராமானுஜா
புகழ் என்றும் உனக்கே ராமானுஜா
பரம ஹம்ஸ ராஜனே ராமானுஜா
மலை ஏழில் ஒருமலை ராமானுஜா
மங்களம் அருள்வாய் ராமானுஜா
ராமானுஜா ஸ்ரீ ராமானுஜா
ராமானுஜா எதி ராமானுஜா

Sunday, September 22, 2024

ஸ்ரீ ரங்க நாதர் 108 போற்றி தமிழ்| Shri Ranganathar 108 Potri Tamil

ஸ்ரீ ரங்க நாதர் 108 போற்றி
ஓம் திருவரங்கமே திகழ்பவனே போற்றி
ஓம் திவ்யதேசத்து முதல்வனே போற்றி
ஓம் இருநதியிடையில் கிடப்பவனே போற்றி
ஓம் இருமொழி மறைகள் கேட்பவனே போற்றி
ஓம் திருச்சுற்று ஏழு உடையவனே போற்றி
ஓம் திருவாராதனப் பெருமாளே போற்றி
ஓம் தரும வர்மனின் திருத்தலனே போற்றி
ஓம் தானாய்த் தோன்றிய தலத்தனே போற்றி
ஓம் விருப்பன் திருநாள் உற்சவனே போற்றி
ஓம் விதவித நடைகள் பயில்பவனே போற்றி
ஓம் பெருமைகள் நிறைந்த பெருமாளே போற்றி
ஓம் பேராயிரானே திருமாலே போற்றி
ஓம் பொன்னரங்கத்துப் பூபதியே போற்றி
ஓம் பூலோக வைகுந்தம் ஆள்பவனே போற்றி
ஓம் தென் அரங்கத்து தேவனே போற்றி
ஓம் திரளும் கோபுரங்கள் சூழ்ந்தவனே போற்றி
ஓம் மின்னிடும் கனக விமானனே போற்றி
ஓம் வீடணன் கொணர்ந்த மாலவனே போற்றி
ஓம் மன்னர்கள் போற்றிய மாலவனே போற்றி
ஓம் மணத்தூண்களிடை திகழ்பவனே போற்றி
ஓம் தென்திசை நோக்கிய திருமுகனே போற்றி
ஓம் த்ரேதாயுகத்துப் பெருமாளே போற்றி
ஓம் சன்னிதி அழகாய்க் கிடப்பவனே போற்றி
ஓம் தசாவதாரப் பெருமாளே போற்றி
ஓம் நாகத்தணையில் துயில்பவனே போற்றி
ஓம் நம்பெருமாள் என ஆனவனே போற்றி
ஓம் தேகம் கிடந்த ஒயிலழகே போற்றி
ஓம் திசை கீழ் மேலாய்ப் படுத்தவனே போற்றி
ஓம் யோகசயனமாய் அமைந்தவனே போற்றி
ஓம் யுகங்கள் கடந்த பெருமானே போற்றி
ஓம் யாக பேரரின் கோலனே போற்றி
ஓம் யவன ராஜனே யாதவனே போற்றி
ஓம் போக மண்டபம் திகழ்பவனே போற்றி
ஓம் புவனம் ஏழினுள் அமைந்தவனே போற்றி
ஓம் மேக வண்ணனே மாதவனே போற்றி
ஓம் விஷேசம் மூன்றுடை தலத்தனே போற்றி
ஓம் சத்ய லோகத்து பெருமாளே போற்றி
ஓம் சதுர் முகன் போற்றிய சுந்தரனே போற்றி
ஓம் முத்தியின் வடிவ மூலனே போற்றி
ஓம் மோகினி கோல ஜாலனே போற்றி
ஓம் இத்தரை வந்த ஈசனே போற்றி
ஓம் இக்ஷ்வாகு குலப் போற்றுதலே போற்றி
ஓம் சித்திகள் அருளும் ஸ்ரீதரனே போற்றி
ஓம் ஸ்ரீ ராமனின் குல தெய்வமே போற்றி
ஓம் நித்தமும் உற்சவம் காண்பவனே போற்றி
ஓம் நீலமேகனே ஸ்யாமளனே போற்றி
ஓம் பக்தர்கள் பலரை ஈர்த்தவனே போற்றி
ஓம் பரவாஸுதேவப் பெருமாளே போற்றி
ஓம் பெரிய கோயிலின் பேரருளே போற்றி
ஓம் பெரிய பெருமாள் நாமம் கொண்டவனே போற்றி
ஓம் பெரிய மதிள்களைக் கொண்டவனே போற்றி
ஓம் பெரிய கோபுரம் கொண்டவனே போற்றி
ஓம் பெரிய பிராட்டி உடனுறைவாய் போற்றி
ஓம் பெரிய கருடனின் போற்றுதலே போற்றி
ஓம் பெரிய அதிரசம் ஏற்பவனே போற்றி
ஓம் பெரிய பணியாரம் ஏற்பவனே போற்றி
ஓம் பெரிய மேளத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் பெரியாழ்வாரின் மருமகனே போற்றி
ஓம் பெரிய அரங்கிலே திகழ்பவனே போற்றி
ஓம் பெரிய செயல்களைப் புரிபவனே போற்றி
ஓம் பரமபத வாசல் வருபவனே போற்றி
ஓம் பைந்தமிழ்ப் பாசுரம் கேட்பவனே போற்றி
ஓம் அரவரசப் பெரும் சோதியனே போற்றி
ஓம் ஆனந்த சயனப் பெருமாளே போற்றி
ஓம் அரங்க மாநகர் ஆள்பவனே போற்றி
ஓம் ஆதி ரங்கத்து அழகியனே போற்றி
ஓம் மரமாம் புன்னையடி மகிழ்பவனே போற்றி
ஓம் மாமதி சந்திரன் போற்றுதலே போற்றி
ஓம் வரத நாரணப் பெருமாளே போற்றி
ஓம் மங்கை மன்னனின் வாழ்த்துதலே போற்றி
ஓம் அரையர் சேவையைக் காண்பவனே போற்றி
ஓம் ஆழ்வார் பாசுரம் கேட்பவனே போற்றி
ஓம் சந்த்ர புஷ்கரிணி தீர்த்தனே போற்றி
ஓம் சூர்ய புஷ்கரிணி தீர்த்தனே போற்றி
ஓம் வில்வ தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் நாவல் தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் அரசு தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் புன்னை தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் மகிழ தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் புரசு தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் கடம்ப தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் மா தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் விரஜா நதியின் தீரனே போற்றி
ஓம் காவிரி தீர்த்தக் கரையோனே போற்றி
ஓம் அழகிய மணவாளப் பெருமாளே போற்றி
ஓம் அஷ்ட மகிஷி சமேதனே போற்றி
ஓம் திருமார்பு லக்ஷ்மி அழகியனே போற்றி
ஓம் ரங்க நாயகியின் இணையோனே போற்றி
ஓம் கமலவல்லியுடன் உறைபவனே போற்றி
ஓம் சேரகுல வல்லி சமேதனே போற்றி
ஓம் ஸ்ரீ தேவியின் ச்ருங்காரனே போற்றி
ஓம் பூ தேவியின் மணாளனே போற்றி
ஓம் ஆண்டாள் மணந்த ஆயனே போற்றி
ஓம் அன்னை காவிரியை ஏற்றவனே போற்றி
ஓம் பங்குனி உத்திர பெருமாளே போற்றி
ஓம் வைகுண்ட ஏகாதசி உற்சவனே போற்றி
ஓம் வேதஸ்வரூப கோலனே போற்றி
ஓம் வேதஸ்ருங்க முடியோனே போற்றி
ஓம் வேதப்ரணவ விமானனே போற்றி
ஓம் வேத அக்ஷர மண்டபனே போற்றி
ஓம் பதின்மர் பாடிய பெருமாளே போற்றி
ஓம் பாதம் குண திசை வைத்தவனே போற்றி
ஓம் முதிர்ந்த அருளெனும் கனியமுதே போற்றி
ஓம் முடியைக் குட திசை வைத்தவனே போற்றி
ஓம் திருப்பாணனின் பண் எழிலே போற்றி
ஓம் திவ்ய ப்ரபந்த சொல்லழகே போற்றி
ஓம் கருடாதி ராஜ திருமாலே போற்றி
ஓம் ஸ்ரீ ரங்கராஜ பெருமாளே போற்றி போற்றி


Wednesday, September 11, 2024

ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா பாடல் தமிழ் | Om Shri Santhoshi Matha Song Tamil

ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதா! வரம் தர வேண்டும் அம்மா:
நிதம் உன்னைத் தொழுகின்றோம் கணபதிமகள் உன்னை நாடியே வந்தோம் துணை உந்தன் பொற்பதமே ! ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!

சிவந்த உன் திருமுகம் செந்தாமரையோ! இருள் வழி அருள் மொழியோ! அம்மா அழகின் கொலுவறையோ வெள்ளிக்கிழமையில் நோன்பு தொடங்குவோம் மஞ்சள் குங்குமம் தா ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!

விளக்கினையேற்றி உன்புகழ் போற்றி வினாயகனைத் தொழுவோம் அவனின் குமரியை இனி மறவோம்! கலச ஜலம் அதைத் தூவித் தெளித்தோம் துளசியைப் பூஜித்தோம் ! ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!

பாயசம் வைத்தோம் புளியை மறுத்தோம் குழந்தைகளை அழைத்தோம்! எட்டுபேர் விருந்துண்ணவே படைத்தோம் எல்லோரும் கேட்க உன் கதை படித்தோம் இல்லத்தில் இருந்திடம்மா ! ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!

கடலையும் வெல்லமும் வினியோகித்தோம் கவலைகள் தீர்த்திடம்மா! உந்தன் கடைக்கண் பார்த்திடம்மா! விரதம் முடித்தோம் ஆரத்தி எடுத்தோம் கேட்டதைக் கொடுத்திடம்மா ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!

பவழம் இதழ்கள் முல்லை மலர்கள், சிரிப்பினிலே மயங்குகிறோம், அம்மா பளிங்குபோல் உள்ளம், உருவமும் பளிங்கு புனிதம் உன் பார்வையம்மா!ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!

வரம் தர வேண்டும் அம்மா நிதம் உன்னைத் தொழுகின்றோம் கணபதிமகள் உன்னை நாடியே வந்தோம் துணை உந்தன் பொற்பதமே ! ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே!


Monday, September 9, 2024

முருகன் பாமாலை தமிழ்| Murugan Pamalai Tamil

கந்தனே செந்தாமரைமலர் பாதனே கருணை வடிவாய் நின்றவனே ! கைதொழவே வரம் தந்தருள் புரிவாய் கலியுகவரதா வடிவேலா !! சுந்தரவனமதில் வேடனாய் தருவாய் வ்ருத்தனாய் வள்ளியை மணந்தவனே ! ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடிவளர் குமரேசா!!

அலை கடல் போலவே சங்கம் முழங்கி படையுடன் வந்து போர் செய்த ,
அடமிகு சூரன் சிரமதைத் துணித்த ஆறெழுத்துண்மை பொருளோனே!
திடமுடன் பணிவார் சித்தம் இனித்திடும் தேனே தெள்ளமுதப்பெருக்கே !
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடி வளர் குமரேசா !!

தந்தையான ஜகதீஸருக்கு உயர் மந்திரம் அதனை விந்தையாக
சிந்தை குளிர உபதேசம் செய்த சுந்தர மன்மத சுகுமாரா !
வெந்துயர் வாத பித்தமொடு பல வயிற்றினில் உறைந்திடும் பிணி தீர்ப்பாய் 
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடி வளர்குமரேசா !!

ரவிகுல தசரன் மகனாய்வந்து ராவணனை 
யொழித்தாதரித்த,
 புவிபுகழ் கோதண்டராமன் மனம் மகிழ் புனித மருமகன் ஆனவனே! வெவ்வினை தீர்த்திடும் விக்ன வினாயகன் சோதர ஞானக்ருபாகரனே
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடி வளர் குமரேசா !!

முருகனுக்கிணையாய் மற்றொரு தெய்வம் மூவுலகம் தனில் உண்டோ சொல் ! 
தருணம் அறிந்து மெய் அடியவர்க்கு அருள் தந்தருள் புரியும் தயாபரனே !!
உருகி குகா என்று ஒருதரம் உரைப்பவர் உளம்தனில் நின்றருள் நடம் புரியும் 
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!

வாசமலர் கொண்டு நின் திருமலரடி பூஜித்தனுதினம் புகழ்ந்திடவே,
நேசமுடன் பவ பாசம் அகன்றிட, நீவரம் மீதெனக்கு ஈந்தருள்வாய் !
காசினி அனைத்தும் காத்தருள் புரியும் கருணை வாரிதி நீயன்றோ
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடிவளர் குமரேசா !!

திருப்பரங்குன்றம், திருத்தணிகை, உயர் சுவாமிமலை பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திரு ஆவினன்குடி முதல் குன்றுகளில் உறை குமரோனே! 
மறலியின் தூதுவர் கொடுமையுடன்வந்து வருத்திடாதிருக்க நீ வரம் தருவாய் 
ஜெயஜெய சங்கர குமாரகுருபர குன்றக்குடிவளர் குமரேசா !!

அல்லல் படுத்தும் பலபல பேய்கள், பில்லியொடு பல சூனியங்கள்,
நில்லாது அகன்றிட நீ அருள் புரிவாய் நிகிலம் துதிக்கும் ஸ்ரீமாநே,
வல்லவனே மயில்வாகனனே, திறல் தாரகாசுரன் சிரம் துணித்தாய்,
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!

அம்பிகை சாம்பவி அகிலாண்டேஸ்வரி, துன்பம் தவிற்கும் ,
சிவகௌரி, ஆதிபராசக்தி அருமை பாலா, அன்பர்தமக்கு அனுகூலா !
வம்புசெய் க்ரௌஞ்ச மலை உரம் பிளந்திட , வடிவேல் தன்னை விடுத்தோனே ,
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!

நெஞ்சம் கனிந்து நினைப்பவர் தம்முன், செஞ்சிலம்பணிந்து மாமயிலேறி, 
அஞ்சாதே என்று ஆறுதல் சொல்ல , குஞ்சரி உடனே வருவாயே ! 
தஞ்சமென வந்த இந்த்ராதி தேவர் வெஞ்சிறை அகற்றி அருள் செய்தாய்
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி 
வளர் குமரேசா !!

பெருங்கடல் தன்னைக் கரம்தன்னில் ஏந்தி அருந்திய கும்ப முனிவருக்கு , 
அருமையுடந் உபதேசமது செய்த , பெருமைமிகுந்த பெருமானே !
மறைகள் நான்கும் தேடிக்காணாத மாமகள் வள்ளி மணவாளா ,
ஜெய ஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!

ரத்தின கதிர்மலி மௌலி யிலங்கிட, சக்தியருள் வடி வேலுடனும் ,
ரத்தினக் கோவை மார்பினில் விளங்கிட , சித்தர் அமரர் துதித்திடவே ,
பக்தர்கள் குறைதனை தீர்த்தருள் புரிய இத்தருணம் வந்து ஆதரிப்பாய் 
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!

விருப்போடு சொன்ன முருகன் துதி மாலை பன்னிரண்டும், மறவாது அனுதினம் பாடிக்கொண்டாடி துதித்திடும் அன்பர் சிந்தைதனை அறிந்து நல்லவரங்களும் மிகவேதந்து ஆதரித்தருள்வாய் தயாபரனே
ஜெயஜெய சங்கர குமார குருபர குன்றக்குடி வளர் குமரேசா !!

Friday, September 6, 2024

விநாயகர் திருஅகவல் வரிகள்| Vinayagar Thiruagaval Lyrics Tamil

சீர்தரு மூலச் செழுஞ்சுடர் விளக்கே
கார்நிற மேனிக் கற்பகக் களிறே
அல்லல் வினையை யறுத்திடு ஞான
வல்லபை தன்னை மருவிய மார்பா
பொங்கர வணிந்த புண்ணிய மூர்த்தி
சங்கரனருளிய சற்குரு விநாயகா
ஏழையடியே னிருவிழி காண
வேழமுகமும் வெண் பிறைக் கோடும்
பெருகிய செவியும் பேழை வயிறும்
திருவளர் நுதலின் திருநீற் றழகுஞ்
சிறுத்த கண்ணுஞ் சீதளப் பார்வையும்
நறுந்திகழ் நாசியும் நாண்மலர்ப் பாதமும்
நவமணி மகுட நன்மலர் முடியும்
கவச குண்டல காந்தியும் விளங்கச்
சிந்துரத் திலகச் சந்தனப் பொட்டும்
ஐந்து கரத்தினழகும் வீற்றிருக்க
பாச வினையைப் பறித்திடு மங்குச
பாசத் தொளியும் பன்மணி மார்பும்
பொன் னாபரணமும் பொருந்துமுந் நூலும்
மின்னா மெனவே விளங்கு பட்டழகும்
உந்திச் சுழியும் உரோமத்தழகும்
தொந்தி வயிறுந் துதிக்கையுந் தோன்ற
வேதனு மாலும் விமலனு மறியாப்
பாதச் சலங்கைப் பலதொனி யார்ப்பத்
தண்டைச் சிலம்புந் தங்கக் கொலுசும்
எண்டிசை மண்டல மெங்கு முழங்கத்
தொகுது துந்ததுமி தொந்தோ மெனவே
தகுகு திந்திமி தாள முழங்க
ஆடிய பாத மண்டர்கள் போற்ற
நாடிமெய்யடியார் நாளுந் துதிக்கக்
கருணை புரிந்து காட்சித்தந்தருள
இருளைக் கடிந்து எங்கும் நிறையப்
பொங்குபே ரொளியாய்ப் பொன்மலை போலத்
திங்கள் முடியான் றிருவுள மகிழ
வந்த வாரண வடிவையுங் காட்டிச்
சிந்தை தளர்ந்த சீரடியார்க்கு
இகபர சாதன மிரண்டு முதவி
அகவினைத் துன்ப மகந்தை யறுத்து
மூலா தார முச்சுடர் காட்டி
வாலாம்பிகை தன் வடிவையுங் காட்டி
மாணிக்க மேனி மலர்ப் பதங் காட்டிப்
பேணிப் பணியப் பீஜா ட்சரமும்
ஓமென் றுதித்த ஓங்காரத் துள்ளே
ஆமென் றெழுந்த அட்சர வடிவும்
இடைபிங் கலைகளி ரண்டினடுவே
கடைமுனை சுழிமுனைக் கபாலமுங் குறித்து
மண்டல மூன்றும் வாய்வோர் பத்துங்
குண்டலி யசைவிலி கூறிய நாடியும்
பூதமும் பொறியும் புகழ்குண மூன்றும்
வாதனை செய்யு மறிவையுங் காட்டி
ஆறா தார அங்குச நிலையைப்
பேறாகி நின்ற பெருமையுங் காட்டிப்
பஞ்ச மூர்த்திகள் பாகத் தமர்ந்த
பஞ்சத் திகளின் பாதமுங் காட்டி
நவ்விட மௌவும் நடுவணை வீட்டில்
அவ்வு மாக்கினை அனாதி சதாசிவம்
மைவிழி ஞான மனோண்மணி பாதமும்
நைவினை நணுகா நாத கீதமும்
கண்டு வணங்கக் கண்ணைத் திறந்து
விண்டலமான வெளியையுங் காட்டி
ஐம்பத் தோரெழுத் தட்சர நிலையை
இன்பச் சக்கர விதிதனைக் காட்டி
புருவ நடுவணைப் பொற்கம லாசனன்
திருவிளை யாடலின் திருவடி காட்டி
நாதமும் விந்தும் நடுநிலை காட்டி
போத நிறைந்த பூரணங் காட்டி
உச்சி வெளிதனி லுள்ளொளி காட்டி
வச்சிரம் பச்சை மரகத முத்துப்
பவள நிறைந்த பளிங்கொளி காட்டிச்
சிவகயி லாசச் சேர்வையுங் காட்டிச்
சத்தம் பிறந்த தலத்தையுங் காட்டித்
தத்துவத் தொண்ணூற் றாறையு நீக்கிக்
கருவி காணக் களங்க மறுத்து
மருவிய பிறவி மாயையை நீக்கி
உம்பர்கள் ரிஷிகள் ஒருவருங் காணா
அம்பர வெளியி னருளையுங் காட்டிச்
சத்தி பராபரைசதானந்தி நிராமய
நித்திய ரூபி நிலைமையுங் காட்டி
அடியவர் ஞான மமிர்தமா யுண்ணும்
வடிவை யறியும் வழிதனைக் காட்டி
நாசி நுனியில் நடக்குங் கலைகள்
வாசிவா வென்று வாங்கிப் பிடித்து
நின்மல வடிவாய் நிறுவித் தப்புறம்
வின்மய மான விதத்தையுங் காட்டித்
தராதல முழுதுந் தானாய் நிறைந்த
பராபர வெளியைப் பணிந்திடக் காட்டி
என்னுட லாவியிடம் பொரு ளியாவுந்
தன்னுடை வசமாந் தவநிலை காட்டி
நானெனு மாணவம் நாசம தாகத்
தானென வந்து தயக்கந் தீர
ஆன குருவா யாட்கொண்டருளி
மோன ஞான முழுது மளித்துச்
சிற்பரி பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிஷ்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீடனும் கூடிக் கலந்து
இருவரு மொருதனி இடந்தனிற் சேர்ந்து
தானந்த மாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
புவனத் தொழிலைப் பொய்யென றுணர்ந்து
மவுன முத்திரைய மனத்தினி லிருத்திப்
பெண்டு பிள்ளை பண்டு பதார்த்தங்
கண்டது மாயைக் கனவெனக் காட்டிப்
பாச பந்தப் பவக்கடல் நீக்கி
ஈச னிணையடி யிருத்தி மனத்தே
நீயே நானாய் நானே நீயாய்க்
காயா புரியைக் கனவென உணர்ந்து
எல்லா முன்செய லென்றே யுணர
நல்லா யுன்னருள் நாட்டம்தருவாய்
காரண குருவே கற்பகக் களிறே
வாரண முகத்து வள்ளலே போற்றி
நித்திய பூஜை நைவேத்தியமும்
பத்தடியாக் கொடுத்தேன் பரமனே போற்றி
ஏத்தியனுதின மெளியேன் பணியக்
கூற்றினை யுதைந்த குளிர்பதந் தந்து
ஆசுமதுர வமிர்த மளித்தும்
பேசு ஞானப் பேரெனக் கருளி
மனத்தில் நினைத்த மதுர வாசகம்
நினைவினுங் கனவிலும் நேசம் பொருந்தி
அருணகிரியா ரவ்வை போலக்
கருத்து மிகுந்த கவிமழை பொழிய
வாக்குக் கெட்டா வாழ்வை யளித்து
நோக்கரு ஞான நோக்கு மளித்து
இல்லற வாழ்க்கை யிடையூறகற்றிப்
புல்லரிடத்திற் புகுந்துழ லாமல்
ஏற்ப திகழ்ச்சி என்பதகற்றிக்
காப்ப துனக்குக் கடன் கண்டாயே
நல்லினை தீவினை நாடி வருகினுஞ்
செல்வினை யெல்லாஞ் செயலுன தாமால்
தந்தையும் நீயே தாயும் நீயே
எந்தையும் நீயே தாயும் நீயே
போத ஞானப் பொருளும் நீயே
நாதமும் நீயே நான்மறை நீயே
அரியும் நீயே அயனும் நீயே
திரிபுர தகனஞ் செய்தவன் நீயே
சத்தியும் நீயே சதாசிவம் நீயே
புத்தியும் நீயே புராந்தகன் நீயே
பத்தியும் நீயே பந்தமும் நீயே
முத்தியும் நீயே மோட்சமும் நீயே
ஏகமும் நீயே என்னுயிர் நீயே
தேகமும் நீயே தேவனும் நீயே
உன்னருளின்றி உயிர்த்துணை காணேன்
பின்னொரு தெய்வம் பேசவு மறியேன்
வேதனை கொடுத்த மெய்யிது தன்னில்
வாத பித்தம் வருத்திடு சிலேத்துமம்
மூன்றுத நாடியும் முக்கணமாகித்
தோன்றும் வினையின் துன்ப மறுத்து
நாலாயிரத்து நானூற்று நாற் பத்தெண்
மேலாம் வினையை மெலியக் களைந்து
அஞ்சா நிலைமை யருளியே நித்தன்
பஞ்சாட்சரநிலை பாலித் தெனக்குச்
செல்வமும் கல்வியும் சீரும் பெருக
நல்வர மேதரும் நான்மறை விநாயகா
சத்திய வாக்குச் சத்தா யுதவிப்
புத்திர னேதரும் புண்ணிய முதலே
வெண்ணீ றணியும் விமலன் புதல்வா
பெண்ணா முமையாள் பெற்றிடுந்தேவே
அரிதிரு மருகா அறுமுகன் துணைவா
கரிமுக வாரணக் கணபதி சரணம்
குருவே சரணம் குணமே சரணம்
பெருவயிற்றோனே பொற்றாள் சரணம்
கண்ணே மணியே கதியே சரணம்
விண்ணே யொளியே வேந்தே சரணம்
மானத வாவி மலர்த் தடத் தருகில்
தானத்தில் வாழும் தற்பரா சரணம்
உச்சிப் புருவத் துதித்துல களிக்குஞ்
சச்சிதானந்த சற்குரு சரணம்
விக்கிந விநாயகா தேவே ஓம்
ஹரஹர ஷண்முக பவனே ஓம்
சிவசிவ மஹாதேவ சம்போ ஓம்.

காரிய சித்தி மாலை | Kariya Siddhi Maalai Lyrics in Tamil

பாடல் 1 :

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பாடல் விளக்கம்: எல்லாவிதமான பற்றுகளை அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும், இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும், லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபதுநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.

பாடல் 2 :

உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர். உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர். அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப் பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரணடைவோம்.

பாடல் 3 :

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாவங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னான திருவடிகளை சரணடைகின்றோம்.

பாடல் 4 :

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந்திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவருமாகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரணடைவோம்.

பாடல் 5 :

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன்
அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: செயல்களாகவும், செயப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப்பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த மெய்யான தெய்வத்தை நாம் சரணடைவோம்.

பாடல் 6 :

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: வேதங்களுக்கு எல்லாம் தலைவராக இருப்பவரும், யாவராலும் அறிந்து கொள்வதற்கு அரிய மேலானவனாக இருப்பவரும், வேதத்தின் முடிவாக இருந்து நடம்புரியும் குற்றமற்றவரும், வெட்ட வெளியில் எழும் ஓங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவர். தன்வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பொருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை ஆகிய எட்டு குணங்களை கொண்டவனுமான முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகின்றோம்.


குறிப்பு: இதில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு குணங்கள் வடமொழியில் சுதந்திரத்துவம், விசுத்த தேகம், நிரன்மயான்மா, சர்வஞ்த்வம், அநாதிபேதம், அநுபத சக்தி, அநந்த சக்தி, திருப்தி என்று கூறப்படுகின்றன.

பாடல் 7 :

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன்
வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரணடைகின்றோம்.

பாடல் 8 :

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பாடல் விளக்கம்: எந்தப் பந்தமும் அற்றவன். பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறிய முடியாது. அவன் பந்தமே இல்லாதவன். அனால் எல்லா உயிர்களையும் பந்தப் படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரணடைவோம். பசு, பதி இரண்டுமே இறைவன். பசு, பதியோடு ஒடுங்குவதே அழியா இனப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.

Thursday, September 5, 2024

காசிப முனிவர் அருளிய ஸ்ரீ விநாயகர் கவசம் | Vinayagar Kavasam Lyrics in Tamil

தலைமுடி, நெற்றி, புருவம், இணைவிழிகள் காக்க
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தரதேக மகோற்கடர் தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க
புருவந் தம்மைத் தளர்வின் மகோதரர் காக்க
தடவிழிகள் பால சந்திரனார் காக்க !!

உதடு, நாக்கு, முகவாய்க்கட்டை, வாக்கு, பல், காது, மூக்கு காக்க
கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங் கணக்கிரீடர் காக்க
நவில் சிபுகம் கிரிசை சுதர் காக்க
நனிவாக்கை விநாயகர் தாம் காக்க
அவிர்நகை துன்முகர் காக்க
வளர் எழில் செஞ் செவி பாச பாணி காக்க
தவிர்தலுறாது இளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்திதார்த்தர் காக்க !!

முகம், கழுத்து, இணையான தோள்கள், உள்ளம், வயிறு காக்க
காமுரு பூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்க
களங் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்த
பூர்வசர் தாம் மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசர் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகத்தினைத் துலங்கு ஏரம்பர் காக்க !!

பக்கங்கள், தொண்டை காக்க
பக்கம் இரண்டையுந் தராதரர் காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரர் காக்க
விளங்கிலிங்கம் வியாள பூடணர் தாம் காக்க
தக்க குய்யந் தன்னை வக்கிரதுண்டர் காக்க
சகனத்தை அல்லல் உக்க கணபர் காக்க
ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க

முழங்கால்கள், இருகால்கள், இருகைகள், முன்கைகள் காக்க
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம் ஏகதந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்குவார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல் பதும அந்தர் காக்க
கேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க !!

திக்குகள் அனைத்திலிருந்தும் காக்க
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர் தென் திசைகாக்க
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
விக்கினவர்த்தனர் மேற் கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கச கர்ணர் காக்க
திகழ்உதீசி தக்கநிதி பர் காக்க
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க !!

பகல், இரவு முதலிய காலங்களில் பிற தொல்லைகளிலிருந்தும் காக்க
ஏகதந்தர் பகல் முழுதும் காக்க
இரவினும் சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக்கினகிருது காக்க
இராக்கதர் பூதம் உறு வேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திறத்தால்
வருந்துயரம் முடிவிலாத
வேகமுறு பிணி பலவும் விலக்கு பாசாங்குசர் தாம் விரைந்துகாக்க !!

மானம், புகழ் முதலியவற்றையும் உற்றார், உறவினரையும் காக்க
மதிஞானம் தவம் தானம் மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம் தானியம் கிருதம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க
காமர் பவுத்திரர் முன்னான
விதியாரும் சுற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க !!

படிப்போர் நோயற்றவராய் வாழ்வார்
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரியாதி எல்லாம் விகடர் காக்க
என்று இவ்வாறிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூறொன்றும்
ஒன்று உறா முனிவர் அவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற
வச்சிர தேகம் ஆகி மின்னும் !!

Sunday, September 1, 2024

Veda Sara Shiva Stotra Tamil| வேத ஸார சிவ ஸ்தோத்திரம்‌ தமிழ்

அனைத்து தெய்வங்களுக்கும் மேலான மஹாதேவா, 'பசு' என்று அறியப்படும் அனைத்து ஆத்மாக்களுக்கும் அதிபதியான ஆத்மநாதா, அனைத்துயிரினங்களின் பாபங்களை எல்லாம் நாசம் செய்யும் பாபவிநாசா, முதன்மையான பிரபுவே, கஜேந்திரன் என்னும் யானையின் தோலை ஆடையாகத் தரித்தவரே, அடர்ந்து வளர்ந்து மகுடம் போல் தங்கள் தலைமேல் அமைந்த ஜடாமுடியிலிருந்து ஓடும் கங்கையைக் கொண்டவரே, காமதேவனின் பாணத்தை வென்றவரே, தங்களை மானசீகமாக வணங்குகிறேன்.

தேவர்களுக்கெல்லாம் ஈசனான மஹேசனே! தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழிப்பவரே! அனைத்துயிரினங்களுக்கும் தலைவரே! பரந்த பிரபஞ்ச வெளியெங்கும் எதிலும் வியாபித்திருக்கும் விஸ்வநாதா! திருமேனியெங்கும் திருநீறு அணிந்தருளுபவரே! சந்திரன், சூர்யன் மற்றும் அக்னி சொரூபமான மூன்று த்ரிநேத்திரங்களை உடையவரே! எப்பொழுதும் தன்னை மறந்து மோன நிலையான ஆனந்த லயத்தில் ஆழ்ந்திருப்பவரே தங்களை வணங்குகிறேன்.

பர்வதங்களின் தலைவனான பர்வதராஜனே, திருக்கைலாயத்தின் கணங்களுக்கு அதிபதியான கணநாதா, தேவர்களைக் காக்கவென பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த, வாசுகி என்னும் நாகத்தின் ஆலகால‌ விஷத்தை உலகைக் காக்கும் பொருட்டு நீ அருந்தியவுடன், தேவி பார்வதி தன் திருக்கரத்தை வைத்து, அந்த விஷத்தை உனது திருக்கழுத்திலேயே நிலைபெற செய்ததால் கழுத்து நீல நிறமாக உருமாற நீலகண்டன் எனும் நாமகரணம் பெற்றவரே! ரிஷபத்தை வாகனமாக கொண்டவரே,சத்வ, ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட உருவத்தை கொண்டவரே, அனைத்திற்கும் மூலமான ஆதிநாதா, திருநீறால் அலங்கரிக்கப்பட்ட அங்கங்களை உடையவரே, தேவி பவானியை அர்த்தாங்கினியாகக் கொண்டவரே, ஐந்து திருமுகங்களை உடைய நமசிவாயா, தங்களை வணங்குகிறேன்.

பார்வதி தேவியின் மணாளனே!, சம்போ சதாசிவா!, தலையில் பிறைச்சந்திரனை அணிந்தவரே, மகிமை வாய்ந்த ஈசனான மஹேசா, ஜடாமுடியுடன் திருக்கரத்தில் திரிசூலத்தை ஏந்தியவரே, எப்பொழுதும் தனிமையில் தியானத்தில் அமர்ந்திருந்தாலும், எங்கும், எதிலும் வியாபித்திருப்பவரே, பூர்ணமான பிரபுவே, தாங்களே எழுந்தருளி எங்களுக்கு அருளவேண்டும்.

அனைத்திற்கும் மேலான பரம்பொருளே, பிரபஞ்சத்தின் முதல் ஆதாரமே, ஆசை எனும் மாயையிலிருந்து விடுபட்டவர் என்றதால் ஈசன் எனும் திருநாமம் கொண்டவரே, உருவமில்லாதவரே, ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தியானத்தின் மூலமாக அறியத் தக்கவரே, இப்பிரபஞ்சமானது தங்கள் சித்தப்படி படைக்கப்படுகிறது, தங்களால் காக்கப்பட்டு திரும்பவும் தங்கள் சித்தப்படி தங்களிடமே லயமடைகிறது.

நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதத்திற்கு அப்பாற்பட்டவரே, தாங்கள் செயலும் அல்ல சோம்பலும் அல்ல, வெப்பமும் அல்ல தண்மையும் அல்ல, இடமும் அல்ல கற்பனையும் அல்ல, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்று மும்மூர்த்திகளாக வடிவெடுத்தாலும் உண்மையில் ஒரு வடிவமும் இல்லாத பரம்பொருளே தாங்கள். அத்தகைய மகிமை வாய்ந்த ஈசனான தங்களை வணங்குகிறேன்.

தேவர்களில் உன்னதமானவரான சிவனிடம் புகலிடம் தேடித் தஞ்சம் அடைகிறேன். அவர் அழிவற்றவர்,  நிலையானவர், எல்லா காரண காரியங்களுக்கும் காரணமானவர், இணையில்லாதவர், ஒளிக்கெல்லாம் ஒளியான‌ ஞான ஒளியானவர், விழிப்பு, கனவு மற்றும் ஆழ் உறக்கம் எனும் மூன்று நிலைகளையும் கடந்து நின்றவர். அறியாமை என்னும் இருளுக்கும் அப்பால் இருப்பவர், ஆதியும், அந்தமும் இல்லாதவர், பாவனமான‌  நிர்குணமானவர், இரு வேறு நிலைகளைக் கடந்த ஒரே பரம்பொருளானவர், அவரை வணங்குகிறேன்.

இப்பிரபஞ்சமே உருவாக வடிவெடுத்தவருக்கு நமஸ்காரம், நமஸ்காரம், விழிப்பு நிலையில் ஆனந்த லயமே முழு உருவாக வடிவெடுத்தவருக்கு நமஸ்காரம், தவம் மற்றும் தியானத்தினால் அறியத் தக்கவருக்கு நமஸ்காரம், வேத நூல்களில் வகுத்துள்ள அறிவுப் பாதையின் மூலமாக அறிய முடிந்தவருக்கு நமஸ்காரம்.

ஹே பிரபு ! திரிசூலத்தை திருக்கரங்களில் ஏந்தியவரே, பிரபஞ்சத்தின் அதிபதியான விஸ்வநாதா, மஹாதேவரே, நன்மையின் ஆதாரமே, த்ரிநேத்திரங்களை உடைய உன்னதமான பகவானே, பார்வதி மணாளா, அமைதியே வடிவானவரே, காமனையும் திரிபுரங்களையும் எரித்தவரே, அசுரர்களின் பகைவரே, ஈடு இணையற்றவரே, தாங்களே பக்தர்களின் நாடுதலுக்கும், போற்றுதலுக்கும், புகலுக்கும் சிறந்தவர்.

நன்மையின் வடிவான சம்போ மஹாதேவா, திரிசூலத்தை கரங்களில் ஏந்தி இருந்தாலும் கருணையே வடிவானவரே, தேவி கெளரியின் பதியானவரே, அனைத்து ஆத்மாவிற்கும் இறைவனே, பந்தம், பாசம் என்னும் தளைகளிலிருந்து ஆத்மாக்களை விடுவிப்பவரே, வாரணாசி என்று அழைக்கப்படும் காசியின் தலைவனே, இவ்வுலகமே தங்கள் திருவிளையாடல் அன்றோ? தங்களின் அளவில்லாத அபரிமிதமான பெருங்கருணை, இப்பிரபஞ்சத்தை படைத்து, காத்து பின்னர் மீண்டும் தங்களில் இணைத்துக்கொள்கிறது.

பிரபு ! அனைத்திற்கும் மூலாதாரமே, காமனை எரித்தவரே, ஜகதீசா, கருணை வடிவினனான கருணாகரனே, பாபங்களை அழிப்பவரே, இப்பிரபஞ்சம் தங்களிலிருந்தே பிறந்து, நிலைபெற்று, பின்னர் தங்களில் லயமாகிறது. பிரபஞ்சத்தின் இருக்கும் அசையும் மற்றும் அசையா வஸ்துகளின் சங்கமமாக லிங்க உருவில் வடிவெடுத்தவரே தங்களை வணங்குகின்றேன்.

அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் | Ashta Lakshmi Varukai Pathikam

வருவாயே லெட்சுமியே வருவாயே உன்னை வாயாறப்பாடுகிறோம் வரம் தருவாயே எட்டுவகை லெட்சுமியால் ஏராளமான செல்வம் கொட்டும்வகை நானறிந்தேன் கோலமயிலானவளே! ...