ஊர் சுற்றும் மனம், இடைவிடாது உன்னைக் கண்டு அடங்கிட உன் பூரண அழகு ரூபத்தைக் காட்டு, அருணாசலா!
என்னை (என் அகங்காரத் தன்மையை) அழித்து இப்போது என்னுடன் இணையாவிட்டால், இது தான் ஆண்மையா, அருணாசலா!
மற்றவர் என்னை இழுக்கும்போது, ஏன் இந்த உறக்கம்? இது தான் உனக்கு அழகோ, அருணாசலா!
ஐம்புலன்கள் என்னும் கள்வர் என் வீட்டில் (உள்ளத்தில்) புகுந்த போது, நீ வீட்டில் இல்லையோ, அருணாசலா!
'ஒருவனான (பரமாத்மாவான) உன்னிடமிருந்து ஒளிந்துக் கொண்டு யார் வர முடியும்? இது உன் சூது தான், அருணாசலா!
"ஓம்" என்ற சொல்லின் பொருளாக ஒப்பற்று விளங்குபவரே! உன்னை யார் தான் உண்மையில் அறிய முடியும், அருணாசலா!
தன் மக்களுக்கு அன்பளிக்கும் தாயைப் போல் எனக்கு அருள் தந்தாய், என்னை ஆளுவது உன் கடன், அருணாசலா!
கண்ணையே பார்க்கும் கண்ணாக இருந்து, கண்ணின்றி எல்லாவற்றையும் காண்கின்ற உன்னை யாரால் காண முடியும்? என்னைப் பார், அருணாசலா!
காந்தம் இரும்பைக் கவர்வது போல், நீயும் என்னை கவர்ந்து, என்னை விடாமல் என்னடன் இணைந்து இருப்பாய், அருணாசலா!
மலை உருவாகிய அருட்கடலே, கருணைக் கடலே! கருணையுடன் விரைவில் எனக்கு அருள்செய்வாய், அருணாசலா!
கீழ் மேல் எங்கும், எல்லா திசையிலும் பிரகாசித்து ஒளிர்கின்ற மணியே! என் இதயத்தில் உள்ள கீழ்மையை அழித்திடுவாய், அருணாசலா!
குற்றங்களை அறவே அறுத்து என்னை குணசாலியாக மாற்றி அருள்வாய், குரு உருவாக ஒளிர், அருணாசலா!
நல்லவர்கள்போல் தோன்றினாலும், உண்மையில் கொடியவராக இருப்பவரிடமிருந்து என்னைக் காத்தருள், விரைவில் என்னை சேர்ந்தருள், அருணாசலா!
21
நான் மிகவும் கெஞ்சியும் நீ ஒரு வஞ்சகன்போல் கொஞ்சமும் இரங்கவில்லை, அஞ்சாதே எனக் கூறி எனக்கு அருள் செய், அருணாசலா!
கேட்பதற்கு முன்பே அளிக்கும், கேடில்லாத புகழ் கொண்ட உனது புகழை கேடு செய்யாமல், எனக்கு அருள் செய்வாய், அருணாசலா!
என் கரத்தில் உன் உண்மை ஸ்வரூபத்தின் மதுவை ஏந்தி அதனால் வெறி கொண்டு இருக்க அருள் செய், அருணாசலா!
கொடியிட்டு அடியாரைக் கொல்லாது கொல்கின்ற உன்னுடன் இணைந்து எப்படி தான் வாழ்வேனோ, அருணாசலா!
கோபமற்ற சாந்தகுணமுள்ளவரே! என்னை உனது குறியாகக் கொள்ள நான் என்ன குறை செய்தேன், அருணாசலா!
கௌதமர் போற்றும் கருணை மாமலையே! எனக்கு உன் கடைக்கண்ணால் அருள் செய்து ஆள்வாய் அருணாசலா!
எல்லாவற்றையும் விழுங்கும் கதிரொளியே, என் மனத் தாமரையை மலர்ச் செய்துவிடு, அருணாசலா!
எனக்கு உணவாக உன்னைக் கருதி, நானே உனக்கு உணவாகி, சாந்தமாக போய் விடுவேன், அருணாசலா!
மனம் குளிர உன் அமுத கதிர்களால் அமுத நிலையை திறப்பாய், அருள் மிகுந்த நிலவே, அருணாசலா!
உருவத்தை அழித்து, 'நிர்வாண" (நிர்குண பரிபூரண/ நிலையில் வைத்து, உன் அருள் உருவை எனக்கு அளித்தருள், அருணாசலா!
31
இன்பக்கடல் பொங்க, சொற்களும், உணர்வும் அடங்க, சும்மா வீற்றிரு, அருணாசலா!
சூது செய்து என்னை இனிமேல் சோதிக்காதே, உனது சோதி நிறைந்த உருவை காட்டு, அருணாசலா!
மாய வித்தையை உண்மையென்றே கருதி மயங்கும் இவ்வுலக மயக்கத்தை நீக்கி, நிலையான வித்தையைக் காட்டி அருள், அருணாசலா!
என்னுடன் நீ சேராவிட்டால் என் உடல் நீர் போல் உருகி, என் கண்ணீரால் நான் அழிவேன், அருணாசலா!
நீ என்னை இகழ்ந்து தள்ளினால், முன்பு செய்த தீவினை என்னைச் சுடுவதன்றி, எனக்கு வேறு கதியேது, சொல், அருணாசலா!
பேசாமல் சும்மா இரு என்று சொல்லால் சொல்லாமல் மௌனத்தால் சொல்லி நீயும் சும்மா இருந்தாய், அருணாசலா!
ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்து, ஆன்ம சுகம் அனுபவித்து உறங்காவிடில் எனக்கு வேறு கதியென்ன சொல், அருணாசலா!
உனது பராக்கிரமத்தை காட்டினாய், என் மன இருள் ஒழிந்ததென்று நீ கலக்கமின்றி இருந்தாய், அருணாசலா!
நாயை விட கேடா நான்? என் சொந்த உறுதியால் உன்னை நாடி அடைவேன், அருணாசலா!
ஞானம் இல்லாமல் உன்னை அடையவேண்டுமென்ற ஆசை கொண்ட தளர்ச்சி நீங்க, ஞானம் எனக்கு தெரிவித்து அருள் அருணாசலா!
41
நீயும் ஒரு வண்டுபோல நீ இன்னும் மலரவில்லை என்று எண்ணி என்னெதிர் நின்றாய், இதென்ன அருணாசலா!
பொருள்
உண்மைத் தத்துவம் அறியாத என்னை ஆன்ம சொரூபத்தை அடையச் செய்தாய், இந்த தத்துவம் தான் என்ன, அருணாசலா!
தானே தான் தான் என்ற தத்துவத்தை அந்தத் தானாகிய நீயே எனக்குக் காட்டுவாய், அருணாசலா!
உள்ளத்தில் உட்புறம் திரும்பி, தினமும் அகக்கண்ணால் காண், உண்மை தெரியும் என்றாய், அருணாசலா!
எல்லையற்ற அகத்தில் உன்னைத் தேடி நான் திரும்பவும் உன் அருளை அடைந்தேன், அருணாசலா!
விசாரணை செய்யும் அறிவு இல்லாமல் இப்பிறப்பால் என்ன பயன்? எதோடும் இதை ஒப்பிட என்னால் முடியவில்லை, அருணாசலா!
தூய மன மொழி கொண்டவரே உறையும் உன் உண்மையான நிலையில் நானும் உறைய அருள் செய், அருணாசலா!
நான் உன்னைக் கடவுளாகக் கருதி சரணாகதி அடையவே, என்னை சேர என்னை (என் அகங்காரத்தை ஒழித்தாய், அருணாசலா!
தேடாமலே கிடைத்த நல்ல திருவருளே! என் மனத்தின் அறியாமையை தீர்த்து அருள், அருணாசலா!
தைரியத்தோடு உன் உண்மையான நிலையை நாடி அழிந்தேன், அருள் செய் அருணாசலா!
51
உன் அருள் மிகுந்த கையால் தொட்டு என்னை அணைக்காவிடில் நான் ஒழிந்திடுவேன், அருள் அருணாசலா!
குற்றமில்லாமல் நீ என்னோடு ஒன்றாகக் கலந்து, இன்பம் கண்டிட அருள், அருணாசலா!
சிரித்திட இடமில்லை, உன்னை நாடிய எனக்கு புன்னகைப் புரிந்து பார், அருணாசலா!
நான் உன்னை நாடிட நானாக ஒன்றி நீ ஸ்திரமாக நின்றாய், அருணாசலா!
என்னை உன் ஞான நெருப்பால் எரித்துச் சாம்பலாக்கிவிடுவதற்கு முன்பு, உன் அருள் மழை பொழி அருணாசலா!
நீ, நான் என்ற வேறுபாடு விலக, பேரின்பான நிலையை அருள், அருணாசலா!
நுட்பமான சிறந்த உருவுடைய உன்னை நான் என் இதயத்தில் சேர்த்துக்கொள்ள என் எண்ண அலைகள் எப்போது அழியும், அருணாசலா!
கல்வியறிவு அற்ற பேதையான எனது கெட்ட அறிவைக் அழித்து அருள் அருணாசலா!
மிகவும் உருகி நான் சரணடைந்து உன்னை அடைந்ததும், எல்லையற்ற பரம்பொருளாக நீ நின்றாய், அருணாசலா!
நேசமின்றி இருந்த எனக்கு உனது ஆசையைக் காட்டி நீ மோசம் செய்யாமல் அருள், அருணாசலா!
61
நைந்து அழிந்த கனியால் பயனில்லை, நல்ல நிலையில் நான் உள்ளபோதே என்னை நீ நாடி ஏற்றுக்கொண்டு நலம் அருள், அருணாசலா!
நான் வருந்தாமல் உன்னை எனக்குத் தந்து என்னை நீ ஆட்கொள்ளவில்லை, எனக்கு நீ எமன் தான், அருணாசலா!
நோக்கியே, எண்ணியே, ஸ்பரிசம் செய்தே என்னைப் பக்குவப்படுத்தி நீ ஆண்டருள், அருணாசலா!
மாயை என்னும் விஷம் பற்றிக் கொண்டு தலைக்கேறி உறைவதற்கு முன்னால், உன்னைப் பற்றிக் கொள்ள அருள் புரி, அருணாசலா!
என்னைப் பார்த்து, அதன் அருளால் என் மன இருள் அழிய நீ பார்க்கவில்லை எனில், வேறு யார் என்னைப் பார்க்க உனக்கு சொல்வார், அருணாசலா!
பித்தை விட்டு, என்னை உனது உண்மையான பித்தனாக்கி அருள், பித்தம் தெளியும் மருந்தான நீ, அருணாசலா!
பயமற்ற உன்னை சார்ந்த பயமில்லாத என்னைச் சேர உனக்கென்ன பயம், அருணாசலா!
கீழ்மையான பொய்யறிவு எது, நன்மையான மெய்யறிவு எது என்று சொல், அந்த மெய்யறிவை நான் அடைய அருள், அருணாசலா!
பூமியின் (பற்றுதல்) வாசனையுற்ற என்னுள்ளம் பூரண வாசனை கொள்ள, பூரண மணம் கொண்ட குணம் அருள், அருணாசலா!
உன் பெயரை நினைத்தவுடன் என்னைப் பிடுத்து இழுத்தாய் உன் பெருமையை யார் தான் அறிவார், அருணாசலா!
71
எந்தன் பேய்த்தனம் ஒழிவதற்காக என்னைப் பேயாகப் பிடித்து என்னைப் பேயனாக்கி விட்டாய், அருணாசலா!
இளங்கொடியான நான் பற்றிக் கொள்ள ஒன்றுமில்லாது வாடாமல் ஆதரவு தந்து என்னைக் காத்திடு, அருணாசலா!
பொடிபோட்டு என்னை மயக்கி, எனது போதத்தைப் பறித்து உனது போதத்தை காட்டினாய், அருணாசலா!
போக்குவரவு இல்லாத பொது வெளியினில் அருள் போராட்டம் காட்டு, அருணாசலா!
பௌதிகமான உடற்பற்று ஒழிந்து எப்போதும் உன் அழகைக் கண்டவாறு இருக்க அருள், அருணாசலா!
மலை மருந்தை நீ எனக்குப் அளித்ததால் நான் மலைக்க வேண்டுமா? அருள் மலை வடிவான மருந்தாய் ஒளிர், அருணாசலா!
அகங்காரம் கொண்டு உறைபவரின் மானத்தை அழித்து, அபிமானமில்லாது ஒளிர், அருணாசலா!
மிஞ்சினால் கெஞ்சிடும் அறியேன் நான், என்னை வஞ்சிக்காமல் அருள், அருணாசலா!
மாலுமி இல்லாத கப்பல் அலை கடலில் தவிப்பது போல் ஆகாமல் என்னைக் காத்தருள், அருணாசலா!
முடிவும் அடியும் காணாத சிக்கலை நீக்கினாய், எல்லாம் கடந்த நேர் நிலையில் வைத்தாய், அருணாசலா!
81
முகமில்லாத ஓர் மனிதன் முன் காட்டப்படும் முகக் கண்ணாடியாக ஆக்காமல் என்னைத் தூக்கி அணைத்து அருள், அருணாசலா!
உடலென்னும் அகத்தில், மென்மையான உள்ளமென்னும் மலரணையில் நாம் உண்மையில் கலந்திட அருள், அருணாசலா!
மேலும் மேலும் தாழ்ந்திடும் எளியவருடன் சேர்ந்து நீ மேன்மை அடைந்தாய் இதென்ன, அருணாசலா!
மையைப் போன்ற இருளை நீக்கி உன் அருள் மயத்தால் உண்மை நிலையின் வசமாக்கினாய், அருணாசலா!
எனது சிகையை நீக்கி, வெட்ட வெளியில் என்னை வைத்து ஆட்டம் காட்டினாய் என்ன, அருணாசலா!
எனக்குள்ள மோகத்தை அழித்து உன்னிடம் மோகமாய் வைத்தும், என் மோகத்தை தீர்க்க மாட்டாய், இதென்ன அருணாசலா!
மௌனியாக கல் போல இருந்தால், இது தான் மௌனமா, அருணாசலா!
என் வாயில் மண்ணை போட்டு, என் பிழைப்பை ஒழித்தது யார், அருணாசலா!
யாரும் அறியாமல் என் மதியை மருட்டி, என்னைக் கொள்ளை கொண்டது யார், அருணாசலா!
நீ என் இதயத்தில் ரமிப்பவன் என்பதால் இதைச் சொன்னேன், கோபம் கொள்ளாமல் என்னை இன்புறச் செய்வாய், அருணாசலா!
91
இரவு பகல் இல்லாத வெறுவெளி வீட்டில் இன்புற்றிருப்போம், வா அருணாசலா!
உனது அருள் அஸ்திரத்தை என் மேல் குறி வைத்து எய்து விட்டு, என்னை உயிரோடு உண்டாய், அருணாசலா!
லாபமானவான் நீ, இக பர லாபமில்லாத என்னை அடைந்து, என்ன லாபம் உற்றாய், அருணாசலா!
வரும்படி சொன்னாய் அல்லவா? நீ வந்து என்னைப் பராமரி, அதனால் நீ வருந்தினால், அது உன் தலைவிதி, அருணாசலா!
வா என்று அழைத்து, இதய அகத்தில் புகுந்திடச் செய்து வாழ அருளிய அன்றே, என் வாழ்வை இழந்தேன், அருள் அருணாசலா!
நீ என்னை விட்டு விட்டால் கஷ்டமாகும், உன்னை விட்டிடாமல் உயிர் விட்டிட அருள் புரி, அருணாசலா!
வீட்டினின்று என்னை வெளியே இழுத்து இதய வீட்டில் மெதுவாகப் புகுந்து, உனது உண்மை வீட்டைக் காட்டினாய், அருள் அருணாசலா!
உன் செயலை வெளிப்படுத்தி விட்டேன், என்னை வெறுக்காமல், உன் உணமை நிலையை வெளிப்படுத்தி என்னை காத்திடு, அருணாசலா!
வேதாந்தத்திலிருந்து வேறுபடாமல் விளங்கும் வேதப் பொருள் நீ, அருள் அருணாசலா!
நான் உன்னை இகழ்வதைப் வாழ்த்துவதாக வைத்து நின்னருள் குடியாக வைத்து என்னை விடாமல் அருள், அருணாசலா!
101
தண்ணீரில் ஆலி கரைவது போல் உன் உருவில் என்னை அன்பால் கரைத்து அருள், அருணாசலா!
அருணா என்று நினைத்த நான் உன் அருள் பார்வையில் மாட்டிக் கொண்டேன், உன் அருள் வலை தப்புமோ, அருணாசலா!
சிந்தித்து உன் அருளில் உறைய சிலந்தி போல் என்னைக் கட்டி சிறையிட்டு உண்டாய் அருணாசலா!
அன்போடு உன் பெயரைக் கேட்கும் அன்பரின் அன்பருக்கு நான் அன்பனாகிட அருள், அருணாசலா!
என்போன்ற உனது தீனரை இன்புறக் காத்து நீ எந்நாளும் வாழ்ந்தருள், அருணாசலா!
அன்பினால் உருகும் அன்பரின் இன்சொற்களை கேட்கும் உன் செவி, என் புன்சொல்லைக் கேட்க அருள், அருணாசலா!
பொறுமை வடிவான மலையே எனது புன் சொல்லை நன் சொல்லாகப் பொறுத்து அருள், உனது இஷ்டப்படி, அருணாசலா!
உன் மாலையை அளித்து அருணாசல ரமணா என் மாலையை அணிந்தருள், அருணாசலா!
அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா! அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா!
அருணாசலம் வாழ்க அன்பர்களும் வாழ்க அசுக்ஷர மணமாலை வாழ்க,